Happy Birthday AR Rahman : 55 வயதிலும் வேகம் குறையாத இசைப்புயல்... ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்று பிறந்தநாள்

First Published Jan 6, 2022, 8:52 AM IST

இசையுலகின் அரசனாக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமான் இன்று தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களுக்கு குழு இசையமைப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த சேகர் என்பவரின் மகன்தான் ஏ.ஆர்.ரகுமான். அப்பாவின் மூலம் ஏ.ஆர்.ரகுமானுக்கு சின்ன வயதில் இருந்தே இசை ஆர்வம் இருந்தாலும், அவர் கனவு கண்டது என்னவோ கம்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்று தான். 

தந்தையின் மறைவிற்கு பிறகு குடும்பம் கடினமான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. எனவே இளம் வயதிலேயே ரூட்ஸ் என்ற ஒரு சிறிய இசைக்குழுவில் கீபோர்ட் ப்ளேயராக இணைந்த ரகுமான், பிரபல ட்ரம்மர் சிவமணி மற்றும் அவரது நண்பர்கள் ஜான் ஆண்டனி, சுரேஷ் பீட்டர்ஸ், ஜோஜோ மற்றும் இளையராஜா ஆகியோரிடம் பணியாற்றியுள்ளார். 
 

இஸ்லாம் மதத்திற்கு மாறுவதற்கு முன்பு ஏ.ஆர்.ரகுமானின் இயற்பெயர் திலீப் குமார். தன்னுடைய 23 வயதில் காத்ரி என்ற மதகுருவின் வழிகாட்டுதலின் படி திலீப் குமார் ஏ.ஆர்.ரகுமானாக மதம் மாறினார். 

ரோஜா படத்தில் துளிர் விட்ட, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசை, ரசிகர்கள் மனதை பூரிக்கவைக்கும் பல பாடல்களால் தற்போது வரை நனைத்து வருகிறது. இவருக்கு ரோஜா படத்தில் வாய்ப்பு கிடைத்ததே ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு தான்.

கடந்த 1991-ம் ஆண்டு லியோ காபி விளம்பரத்துக்கு போட்ட மெட்டுக்கு அவார்ட் வாங்கினார் ரகுமான். அந்த விருது வழங்கும் விழாவில் இயக்குனர் மணிரத்தினத்தை சந்திக்க, அதன் மூலம் தான் ஏ.ஆர்.ரகுமானுக்கு தமிழ் சினிமாவில் முதல் வாய்ப்பு கிடைத்தது.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த முதல் திரைப்படம் 'யோதா' என்ற மலையாள திரைப்படம். ஆனால் முதலில் ரிலீஸ் ஆகியது ‘ரோஜா’ தான். ஆனால் ரோஜா படத்தின் கேசட்டில் ஏ.ஆர்.ரகுமான் பெயர் இருக்காது. 

ரோஜா படத்துக்கு பின்னர் தான் இயக்கிய அனைத்து படங்களுக்கும் இசையமைக்கும் வாய்ப்பை ஏ.ஆர்.ரகுமானுக்கு வழங்கினார் மணிரத்னம். அது தற்போது அவர் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் வரை தொடர்கிறது.

இவரின் இசைக்கு கிடைத்த பரிசு என்றால் அது விருதுகள் தான். அந்த வகையில் 2 ஆஸ்கார், 6 தேசிய விருதுகள், 21 பிலிம்பேர் விருதுகள், 2 கிராமி விருது, பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது என என்னிலடங்கா விருதுகளை பெற்றுள்ளார்.

இசையுலகின் அரசனாக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமான் இன்று தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு பிசியான ஆண்டாகவே உள்ளது. தமிழில் இவர் கைவசம் விக்ரமின் கோப்ரா, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், சிம்புவின் வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல, பார்த்திபனின் இரவின் நிழல், சிவகார்த்திகேயனின் அயலான் என 55 வயதிலும் வேகம் குறையாமல் உழைக்கிறார் இசைப்புயல். 

click me!