
Cricketers Who Acted in Only one Movie in Tamil Cinema : சினிமாவைப் பொறுத்த வரையில் பிரபலமாக இருக்கும் யார் வேண்டுமானாலும் படங்களில் நடிக்கிறார்கள். மேலும், அதிகப்படியான ரசிகர்களை கொண்டவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. அப்படி சமூக வலைதளங்கள் வாயிலாக பிரபலமான பலரும் இன்று சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தவிர பல ஆண்டுகளாக கிரிக்கெட் மட்டுமே வாழ்க்கை என்று இருந்த முன்னாள் இந்திய ஜாம்பவான்கள் கூட சினிமாவில் நடித்திருக்கிறார்கள். அவர்கள் யார், எத்தனை படங்களில் நடித்திருக்கிறார்கள் ஏன் அதன் பிறகு நடிக்கவில்லை என்பது பற்றி பார்க்கலாம்.
இயக்குநர் ஜான் பால் ராஜ் இயக்கத்தில் ஹர்பஜன் சிங், ஆக்ஷன் கிங் அர்ஜூன், லாஸ்லியா, சதீஷ் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் தான் ஃப்ரண்ட்ஷிப் (Friendship Tamil Movie). இந்தப் படத்தின் மூலமாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான ஹர்பஜன் சிங் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார். இந்தப் படத்தில் அவர் தான் ஹீரோ. நட்பை மையபடுத்தி வெளியான இந்தப் படம் ரசிகர்களால் பெரியளவில் கொண்டாடப்படவில்லை. படத்திற்கான கதையும் சொல்லிக் கொள்ளும்படி இல்லாததால் இந்தப் படம் வந்த வேகம் தெரியாமல் காணாமல் போனது.
இந்தப் படத்தின் மூலமாக ஆயிரம் கனவுகளுடன் வந்த ஹர்பஜன் சிங்கிற்கு இந்தப் படம் ஏமாற்றமே கொடுத்தது. படம் வெளியாகி கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஆன நிலையில் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்கவில்லை. அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியவர் ஹர்பஜன் சிங். 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2224 ரன்கள் எடுத்ததோடு 417 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்.
இதே போன்று 236 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 1237 ரன்களும், 269 விக்கெட்டுகளும் கைப்பற்றினார். மேலும், 28 டி20 போட்டிகளில் இடம் பெற்று விளையாடி 108 ரன்களுடன் 25 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இது தவிர ஐபிஎல் தொடர்களில் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
ஹர்பஜன் சிங்கை முன்னோடியாக வைத்துக் கொண்டு இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவர் சியான் விக்ரம் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு திரைக்கு வந்த கோப்ரா படத்தில் நடித்தார். இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, ரோஷன் மேத்யூ, இர்பான் பதான், மிர்ணாளினி ரவி, கேஎஸ் ரவிக்குமார் ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.
சைக்கலாஜிகல் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் இர்பான் பதான் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். ஆக்ஷன் ரோல் மட்டுமே. இவருடைய கதாபாத்திரம் பெரியளவில் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. இந்தப் படம் பெரியளவிற்கு வரவேற்பு கொடுக்காத போது இர்பான் பதானுக்கு அதன் பிறகு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வரவில்லை.
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா, ரெடின் கிங்ஸ்லி, பிரபு, கலா மாஸ்டர் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில் ஸ்ரீசாந்திற்கு இந்தப் படம் நல்ல வரவேற்பு பெற்றது. விஜய் சேதுபதியை அடிக்க, அவரிடமே அடியாள் கேட்கும் காட்சி ரசிகர்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
கடந்த 2022 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்தப் படத்திற்கு பிறகு ஸ்ரீசாந்த் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. ஆனால், இந்தப் படத்திற்கு முன்னதாக ஸ்ரீசாந்த் அக்சார் 2, டீம் 5, காபரேட், கம்பே கவுடா 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹர்பஜன் சிங், இர்பான் பதான் மற்றும் ஸ்ரீசாந்த் வரிசையில் இப்போது மற்றொரு கிரிக்கெட் வீரர் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். தோனியின் பெஸ்ட் ஃப்ரண்ட் சுரேஷ் ரெய்னாவும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். சுரேஷ் ரெய்னா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் லோகன் இயக்குகிறார். டிகேஎஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இது இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் மோகன் ராஜா, நடிகர் சதீஷ், கிரிக்கெட் வீரர் ஷிவம் துபே, எடிட்டர் மோகன் ஆகியோர் உள்பட பலரும் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
சுரேஷ் ரெய்னாவின் புதிய படத்திற்கான அறிவிப்பு வீடியோவை வெளியிட சுரேஷ் ரெய்னா வீடியோ கால் மூலமாக இந்த நிகழ்ச்சியில் பேசினார். தனது முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாவது பற்றி பேசிய சுரேஷ் ரெய்னா கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தான் விசில் போடு ஆர்மி இருக்கிறது. இங்கு சென்னைக்காக நான் பல போட்டிகளில் விளையாடி இருக்கிறேன்.
ரசிகர்களின் அன்பும், ஆதரவும் எனக்கு கிடைத்திருக்கிறது. சென்னையில் பீச், ரசம் என்று எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும். சின்ன தல ஆட்டம் இனிமேல் தான் ஆரம்பம் என்று அவர் கூறியுள்ளார். இந்தப் படத்தின் ஹீரோயின், மற்ற நடிகர்கள், நடிகைகள் பற்றி விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.