
தீபாவளி பண்டிகை என்றாலே டாப் ஹீரோக்களின் படங்கள் தான் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும். ஆனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு இளம் ஹீரோக்கள் களமிறங்கி உள்ளனர். அதன்படி பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த டியூட், துருவ் விக்ரமின் பைசன் காளமாடன், ஹரிஷ் கல்யாணின் டீசல் ஆகிய மூன்று திரைப்படங்கள் 2025-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த மூன்று படங்களின் கதையையும், அதற்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது என்பதையும் இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
ஆணவக் கொலைகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட Genz திரைப்படம் தான் இந்த டியூட். படத்தில் காமெடி எல்லாம் ஓகே. சொல்ல வந்தது எல்லாம் சரி. ஆனா சொன்ன விதம் சரி இல்ல. திரைக்கதையில் கவனம் செலுத்திய இயக்குனர் வசனத்தில் கோட்டைவிட்டுள்ளார். சிம்பிளாக சொல்லப்போனால் இது 2கே கிட்ஸுக்கான ஒரு ஷாஜகான் என சொல்லலாம்.
இந்த வருட தீபாவளிக்கு அதிக தியேட்டர்களில் ரிலீஸ் ஆன படம் டியூட் தான். இப்படத்திற்கு கொடுக்கப்பட்ட ஹைப் அளவுக்கு இந்த படம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். லவ் டுடே, டிராகன் போன்ற படங்களோடு ஒப்பிட்டால் இப்படம் பிரதீப்புக்கு ஒரு ஓகே ரகம் தான். இருந்தாலும் குடும்பத்தோடு பார்க்க ஒரு பக்கா கமர்ஷியல் படமாக இந்த டியூட் அமைந்துள்ளது.
சென்னையில் இருக்கும் பெட்ரோல் பங்குகளில் கடத்தல் ஆயில் தொழில் செய்பவர் 'டீசல்'. டீசலின் ‘ அப்பா’ போட்ட ரோட்டில் தான் டீசல் இதுவரை கோடு போட்டு வருகிறார். மக்களுக்கான பிரச்னைகளுக்கு உதவி செய்யும் குழுவாக இவர்கள் சுற்றினாலும், இவர்கள் யார் என்பதை அறியாத மக்கள் இவர்களை வெறுக்கிறார்கள். இதற்கிடையே கடத்தலில் போட்டி வருகிறது; காவல்துறை பிரச்னையும் இணைந்துகொள்கிறது; காதலும் வருகிறது; கார்ப்பரேட்டும் வருகிறது; கடல் கன்னியும் வருகிறார்; தண்ணீர் பிரச்னையும் வருகிறது; ஈகோவும் வருகிறது ; தலைமறைவு வாழ்க்கையும் வருகிறது; அநியாயமாக சிலர் கொல்லப்படுகிறார்கள்; மீடியா, சோஷியல் மீடியா பிரச்னையை கையில் எடுக்கிறது; மக்கள் போராட்டம் வருகிறது; ஈழப் பிரச்னை வருகிறது; துப்பாக்கிச்சூடு ரெபரென்ஸுகள் வருகிறது; வெற்றிமாறன் வாய்ஸ் ஓவரும் வருகிறது; உலகமே திரும்பிப் பார்க்கும் சம்பவங்கள் எட்டிப்பார்க்கின்றன. இப்படி பல்வேறு கமாக்களை கொண்ட திரைப்படமே இந்த டீசல்.
டீசல் திரைப்படம் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்துள்ளார் ஹரிஷ் கல்யாண். நல்ல மெசேஜ் இருந்தாலும் அதை படமாக்கிய விதத்தில் கோட்டைவிட்டுள்ளார் இயக்குனர். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் இந்த தீபாவளி... டீசல் தீபாவளியாக அமைந்திருக்கும். ஆனால் தற்போது ஆவரேஜ் படமாகவே அமைந்துள்ளது இந்த டீசல்.
மணத்தி என்னும் கிராமத்தில் கபடி வெறியில் வளர்கிறான் கிட்டான் (துருவ்). வறுமையும், சாதிய ஏற்றத்தாழ்வுகளும் கிட்டானை எல்லா ரூபத்திலும் தொடர்கிறது. இதுபோதாதென கிட்டானுக்கு காதலிலும் ஏகப்பட்ட சிக்கல். பாண்டியராஜாவுக்கும் (அமீர்) , கந்தசாமிக்கும் (லால்) இடையேயான தனிப்பட்ட வன்மம் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஊரின் பிரச்னையாக மாறிப்போகிறது. வன்மமும், வெறுப்பும் எல்லோருக்குள்ளும் விதைக்கப்பட்டு மரமாகிறது. வேலியை உடைத்து எறியும் நிலையிலிருந்து, வேலியே போட முடியாத உயரத்துக்கு எப்படி உயர்கிறான் கிட்டான் என்பதே மீதிக்கதை.
பைசன் படத்திற்கு விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. மாரி செல்வராஜிடம் இருந்து வந்துள்ள மற்றுமொரு அற்புதமான படைப்பு என அனைவரும் பாராட்டி வருகின்றனர். இதுவரை தோல்வியே சந்திக்காத இயக்குனராக உள்ள மாரி செல்வராஜின் வெற்றிப்பாதையில் மற்றுமொரு மைல்கல்லாக பைசன் மாறி உள்ளதால், இந்த தீபாவளி ரேஸில் பைசன் தான் லீடிங்கில் உள்ளது. அதனால் தீபாவளி வின்னராக பைசன் காளமாடன் தான் இருக்கிறது.