
Meena Childhood Photos : சினிமா பின்னணியும் இன்றி, திரை உலகில் தன்னுடைய அதிர்ஷ்டத்தால் நுழைந்தவர் தான் பிரபல நடிகை மீனா. திருமண நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய தாயாருடன் கலந்து கொண்ட போது, அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிரபல நடிகர் சிவாஜி கணேசன் எதேர்சையாக மீனாவை பார்த்துள்ளார்.
இவர் நடித்து வந்த 'நெஞ்சங்கள்' திரைப்படத்திற்கு ஒரு குழந்தை நட்சத்திரத்தை இயக்குனர் மேஜர் சுந்தர்ராஜன் மற்றும் தயாரிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் தேடி வந்த நிலையில், அந்த கதாபாத்திரத்திற்கு இந்த குழந்தை கச்சிதமாக பொருந்தும் என நினைத்த சிவாஜி கணேசன், மீனாவின் அம்மாவிடம் உங்கள் மகளை திரைப்படத்தில் நடிக்க வைக்க முடியுமா? என கேட்டுள்ளார்.
சிவாஜி கணேசனே தன்னுடைய மகளுக்கு நடிக்கும் வாய்ப்பை கொடுத்ததால், அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டார் மீனாவின் தாயார். பின்னர் நெஞ்சங்கள் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தாலும் இவருடைய மீனாவின் நடிப்பு கவனம் பெற்றது.
தெலுங்கில் நவயுகம் என்கிற திரைப்படத்தின் மூலம் 1990-ல் கதாநாயகியாக நடித்தார். இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னர் தமிழிலும் ஒரு புதிய கதை, என் ராசாவின் மனசிலே, இதய வாசல், ஓயாத ஊஞ்சல், போன்ற படங்களில் அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.
இதைத் தொடர்ந்து அதே ஆண்டே... எங்கேயோ கேட்ட குரல், பார்வையின் மறுபக்கம், தீர்ப்புகள் திருத்தப்படலாம், போன்ற படங்களில் நடித்தார். குழந்தை நட்சத்திரமாக மட்டும் சுமார் 15-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மீனா, தன்னுடைய 14 வயதிலேயே கதாநாயகியாக உயர்த்தப்பட்டார்.
90களில் முன்னணி கதாநாயகியாக மாறிய மீனா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த எஜமான், முத்து, வீரா, போன்ற படங்கள் 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி சாதனை படைத்தன. ரஜினிகாந்துடன் குழந்தை நட்சத்திரமாக அன்புடன் ரஜினிகாந்த் படத்தில், கிட்டத்தட்ட அவர் மகளாகப் பாவிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்த மீனா, அவருக்கே ஜோடியாக நடித்த போது, ஆரம்பத்தில் சிலர் விமர்சனங்கள் செய்தாலும் பின்னர் மீனா - ரஜினிகாந்த் ஜோடியின் கெமிஸ்ட்ரி, ரசிகர்களின் விருப்பமாக மாறியது.
மேலும் கமலஹாசன், சத்யராஜ், பிரபு, அர்ஜுன், அஜித், சரத்குமார், போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், போன்ற தென்னிந்திய மொழிகளிலும் ஏராளமான படங்களில் மீனா நடித்துள்ளார்.
30 வயதை கடந்த பின்னர் திரைப்படங்களில் கதாநாயகி வாய்ப்பு குறையத் துவங்கியது. எனவே சன் டிவியில் லட்சுமி என்கிற சீரியலில் நடித்து வந்த மீனா, பின்னர் தன்னுடைய அம்மா பார்த்த மாப்பிள்ளையாக வித்யாசாகர் என்பவரை 2009-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு சில வருடங்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். பின்னர் குழந்தை பிறந்த பின்னர் மீண்டும் நடிக்க வந்தார்.
கணவரின் மரணத்திற்குப் பின் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்த மீனாவை மீண்டும் வெளியே அழைத்து வந்தது, மீனாவின் தோழிகள் தான். தற்போது மீண்டும் திரையுலகில் நடிக்கத் துவங்கியுள்ளார். 5 வயதில் நடிக்கத் துவங்கி 48 வயது வரை, 42 வருடமாக சினிமாவில் வெற்றிநடை போட்டு கொண்டிருக்கும் கண்ணழகி மீனாவின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் தான் இவை.
தன்னுடைய குடும்ப வாழ்க்கை மற்றும் சினிமா கேரியர் சீராகச் சென்று கொண்டிருந்த போது தான் மீனாவின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது, மீனாவின் கணவர் வித்யாசாகரின் மரணம். சில வருடங்களாகவே புறாவின் எச்சத்தால் ஏற்படக்கூடிய நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட வித்தியாசாகர் 2022 ஆம் ஆண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணவரைக் காப்பாற்ற நடிகை மீனா பல லட்சங்கள் செலவு செய்த போதும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போனது.
மீனாவின் மகள் நைனிகாவும் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'தெறி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்தார். தற்போது மீனாவின் மகள் நைனிகா தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.