2021ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அதிமுக, திமுக, பாஜக, ம.நீ.ம. உள்ளிட்ட கட்சிகள் தீயாய் தேர்தல் வேலையை தொடங்கியுள்ளன. மாவட்ட வாரியாக தேர்தல் பணிக்குழுவை நியமிப்பது, தேர்தல் அறிக்கை தயாரித்தல், பிரச்சாரம், பொதுக்கூட்டம் என தேர்தல் களம் இப்போதே சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் அடுத்தடுத்து பாஜகவில் திரைத்துறையினர் பலரும் இணைய ஆரம்பித்துள்ளனர். ஏற்கனவே காயத்ரி ரகுராம், நமீதா உள்ளிட்டோர் பாஜகவில் தீவிரமாக செயல்படு வரும் நிலையில், சமீபத்தில் நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
இதையடுத்து நடிகர்கள் விஷால், சந்தானம், வடிவேல், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் பாஜகவில் இணைவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அனைவரும் சொல்லி வைத்தது போல் அனைத்தும் வதந்தி என மறுப்பு தெரிவித்தனர்.
சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மோகன் வைத்யா, பிரபல தயாரிப்பாளர் கேஜேஆர் ராஜேஷ் உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்தனர்.
இந்நிலையில் இன்று காலை நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய 2 நண்பர்கள் பாஜகவில் இணைய உள்ளதாக அறிவித்திருந்தார்.குஷ்புவின் ட்வீட்டை பார்த்த பலரும் நடிகர் சுப்பு பஞ்சு அருணாச்சலம் தான் பாஜகவில் இணைய உள்ளதாக தெரிவித்து வந்தனர்.
தற்போது பாஜகவின் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கான கூட்டம் அண்ணா நகரில் உள்ள விஜய் ஸ்ரீ மஹாலில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற நடிகர் சுப்பு பஞ்சு அருணாச்சலம் பாஜக தேசிய பொதுச்செயலாளர் சிடி ரவி, மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.