
விஜயின் ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானவர் பரணி. 1999-களில் இசையமைப்பாளராக மாறினார். ‘பார்வை ஒன்றே போதுமே’, ‘சுந்தரா டிராவல்ஸ்’ போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். “நான் தம்மடிக்கிற ஸ்டைல பாத்து..’, “திரும்ப திரும்ப பார்த்து பார்த்து..”, “துளித்துளியாய்..”, “முதலாம் சந்திப்பில்..” போன்ற பல நல்ல பாடல்களை தமிழ் திரை உலகுக்கு அளித்துள்ளார்.
1987-ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ‘மண்ணுக்குள் வைரம்’ திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் தேவேந்திரன். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த இவர், கர்நாடக, இந்துஸ்தானி, மேற்கத்திய இசைகளைப் பயந்துள்ளார். திருவொற்றியூர் இசைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். ‘மண்ணுக்குள் வைரம்’ படத்தில் இவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் பெரும் வெற்றி பெற்றன. ‘வேதம் புதிது’ படத்தில் வைரமுத்து வரிகளில் “கண்ணுக்குள் நூறு நிலவா..” பாடல்கள் இவருக்கு ஒரு அடையாளத்தை பெற்றுத் தந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நடிகராக அறிமுகமான ‘ஒரே இரத்தம்’ படத்திருக்கும் இவர் இசையமைத்திருந்தார்.
மைசூரைச் சேர்ந்தவர் வி.எஸ்.நரசிம்மன். வயலின் இசை கலைஞரான இவர், இளையராஜாவிடம் உதவியாளராக பணியாற்றினார். பின்னர் கே.பாலச்சந்தர் ‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தில் இவரை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார். அந்தப் படத்தில் இவர் இசையமைத்த “ஆவாரம் பூவு ஆறேழு நாளா..”, “ஓடுகிற தண்ணியில உரசி விட்டேன் சந்தனத்த..” என்கிற இரண்டு பாடல்கள் மிகப்பெரும் வெற்றி பெற்றன. அதன் பின்னர் ‘புதியவன்’ படத்தில் இவர் இசையில் வெளியான, “நானோ கண் பார்த்தேன்.. நீயோ மண் பார்த்தாய்..” என்ற பாடலும் மிகப் பெரும் வெற்றி பெற்றது.
1991-ம் ஆண்டு கே.எஸ் ரவிக்குமார் இயக்கிய ‘சேரன் பாண்டியன்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சௌந்தர்யன். இந்தப் படத்தில் அனைத்து பாடல்களையும் அவரே எழுதியிருந்தார். குறிப்பாக “காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு..” பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 1996-ம் ஆண்டு ரஞ்சித் அறிமுகமான ‘சிந்து நதி பூ’ படத்தின் பாடல்கள் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்தில் இடம்பெற்ற குத்துப்பாடலான “ஆத்தாடி என்ன உடம்பு..” இன்றும் டிரெண்டிங்கில் உள்ளது.
‘அமரன்’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஆதித்யன். இந்தப் படத்தில் அவர் இசையமைத்த “வெத்தல போட்ட சோக்குல..” பாடல் பெரும் வெற்றி பெற்றது. பின்னர். 1994-ம் ஆண்டு ‘சீவலப்பேரி பாண்டி’ படத்தில் இடம்பெற்ற “கிழக்கு சிவக்கையில கீரை அறுக்கையில..” பாடல் இன்றளவும் பேசு பொருளாக உள்ளது.
1992-ம் ஆண்டு வெளியான ‘செண்பகத் தோட்டம்’ படத்தின் மூலமாக அறிமுகமானவர் நாராயணன் என்கிற சிற்பி. பல பாடல்களை இசையமைத்திருந்தாலும் ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்திற்கு அவர் இசையமைத்த பாடல்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன. “அழகிய லைலா இவளது ஸ்டைலா..” பாடலும், “ஐ லவ் யூ ஐ லவ் யூ சொன்னாளே..” பாடலும் இன்றளவும் ரசிகர்களின் ப்ளே லிஸ்டில் உள்ளன. நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்குனர் விக்ரமனின் ‘உன்னை நினைத்து’ படத்தில் இடம்பெற்ற “சில் சில் சில்லெல்லா..” பாடலும், “யார் இந்த தேவதை..” பாடலும் இவருக்கு புகழை கொடுத்தது.
1991-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘அழகன்’ படத்தில் மரகதமணி என்கிற பெயரில் இசையமைப்பாளராக அறிமுகமாகவர் கீரவாணி. அந்தப் படத்தில் “சாதி மல்லி பூச்சரமே..” “சங்கீத ஸ்வரங்கள்..” ஆகிய பாடல்கள் பெரும் ஹிட் அடித்தன. அதேபோல் கே.பாலச்சந்தர் இயக்கிய ‘வானமே எல்லை’ படத்தில் இவர் இசையமைத்த எட்டு பாடல்களும் பெரும் வெற்றி பெற்றது. தற்போது தெலுங்கு திரையுலகில் கீரவாணி கொடிக்கட்டி பறந்து வருகிறார். ஆர்.ஆர்.ஆர் படம்த்திற்காக ஆஸ்கார் விருதையும் பெற்றுள்ளார்.
1986-ம் ஆண்டு திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இணைந்து எடுத்த திரைப்படம் தான் ‘ஊமை விழிகள்’. இதில் வடமாநில இளைஞர்களான மனோஜ் மற்றும் கியான் இசையமைப்பாளராக அறிமுகமாயினர். “மாமரத்து பூவெடுத்து..”, “ராத்திரி நேரத்து பூஜையில்..”, “தோல்வி நிலை என நினைத்தால்..” என இந்த படத்தின் அனைத்து பாடல்களும் பெரும் வெற்றி பெற்றது. விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘உழவன் மகன்’, ‘செந்தூரப்பூவே’ ஆகிய படங்களிலும் இவர்கள் இணைந்து இசையமைத்தனர். அதில் “செந்தூரப்பூவே இங்கு தேன் கொண்டு வா வா..” என்கிற பாடலும், பிரபு நடித்த ‘மேகம் கறுத்திருக்கு’ படத்தில் இடம்பெற்ற “அழகான புள்ளி மானே..” பாடலும் ரசிகர்களை கவர்ந்த பாடல்கள் ஆகும். அதன் பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர். ஆனால் பெரிதாக ஜெயிக்கவில்லை
கர்நாடக மாநிலம் மண்டியாவைச் சேர்ந்த கோவிந்தராஜு கன்னட திரையுலகில் அம்சலேகா என்கிற பெயரில் இசையமைப்பாளராக வலம் வந்தார். இவருக்கு பாரதிராஜா இயக்கிய ‘கொடி பறக்குது’ படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் “சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு..” என்கிற பாடல் பெரும் ஹிட்டானது. அதேபோல் பாரதிராஜா இயக்கிய ‘கேப்டன் மகள்’ படத்தில் இவர் இசையமைத்த “எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று..” பாடலும் இவருக்கு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
பாடகராக மட்டுமல்லாமல் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சில படங்களுக்கு இசையமைத்துள்ளார். ‘சிகரம்’ படத்தில் இடம்பெற்ற “அகரம் இப்போ சிகரம் ஆச்சு..”, “இதோ இதோ என் பல்லவி..”, “வண்ணம் கொண்ட வெண்ணிலவே..” ஆகிய பாடல்கள் எஸ்.பி.பி இசையமைத்த பாடல்கள் ஆகும்.