
ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் கடைசி நேரத்தில் பதற்றமடைவதைத் தவிர்க்க, வாரியம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்களைப் படித்துத் தெரிந்துகொள்வது அவசியம். ஹால் டிக்கெட் பதிவிறக்கம் முதல் தேர்வு மையத்தில் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் வரை அனைத்தையும் இங்கே காண்போம்.
தேர்வர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டுகளை (Hall Ticket) இணையதளம் வழியாக மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும். தபால் மூலமாகத் தனியாக அனுப்பப்படாது. ஹால் டிக்கெட்டில் உள்ள தகவல்களைச் சரியாகச் சரிபார்க்கவும். ஏதேனும் பிழைகள் இருந்தால், உடனடியாக சென்னையில் உள்ள TRB அலுவலகத்தைத் தொடர்புகொண்டு சரிசெய்ய வேண்டும். இது தற்காலிக அனுமதி மட்டுமே என்பதால், தகுதியை உறுதி செய்வது தேர்வரின் கடமையாகும்.
கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள்
தேர்வு மையத்திற்குச் செல்லும்போது ஹால் டிக்கெட் கையில் இருப்பது அவசியம். அது இல்லாமல் அனுமதி கிடையாது. அதனுடன், உங்களின் அசல் அடையாள அட்டை (Original Photo ID) ஒன்றைக் கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும். ஆதார் அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்திருக்க வேண்டும். நகல் (Xerox) கண்டிப்பாக ஏற்கப்படாது.
தேர்வர்கள் குறித்த நேரத்திற்கு முன்பே மையத்திற்குச் செல்வது சிறந்தது. கேட் மூடும் நேரத்திற்குப் (Gate closing time) பிறகு வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். காலை வேளையில் (Forenoon) பிற்பகல் 1:00 மணி வரையிலும் (மாற்றுத்திறனாளிகளுக்கு 1:30 மணி), மாலை வேளையில் (Afternoon) 4:00 மணி வரையிலும் (மாற்றுத்திறனாளிகளுக்கு 4:20 மணி) தேர்வறையை விட்டு வெளியேற அனுமதி இல்லை.
தேர்வு மையத்திற்குள் பெல்ட் (Belt), டிஜிட்டல் கைக்கடிகாரங்கள், ஷூ (Shoes) மற்றும் ஹை ஹீல்ஸ் போன்றவை அணிந்து வர அனுமதி இல்லை. சாதாரண செருப்பு (Chappals/Sandals) மட்டுமே அணிந்து வர வேண்டும். மொபைல் போன், கால்குலேட்டர், டிஜிட்டல் டைரி, எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் புத்தகங்களை உள்ளே எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் தேர்வர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
விடைத்தாள் மற்றும் வருகைப் பதிவு
வருகைப் பதிவேட்டில் (Attendance sheet) கருப்பு நிற பால் பாயிண்ட் பேனாவை (Black ball point pen) மட்டுமே பயன்படுத்தி ஷேட் செய்ய வேண்டும். OMR விடைத்தாள் எண் மற்றும் வினாத்தாள் வரிசை எண் ஆகியவற்றை எழுதியும், ஷேட் செய்தும் நிரப்ப வேண்டும். ஹால் டிக்கெட் மற்றும் ஐடி கார்டை தவிர வேறு எந்த காகிதங்களையும் உள்ளே எடுத்துச் செல்லக்கூடாது.
அரசாணைப்படி, தமிழ் தகுதித் தேர்வில் (Compulsory Tamil Eligibility Test) குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே, உங்களின் பார்ட்-B விடைத்தாள் திருத்தப்படும். இருப்பினும், மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்குத் தமிழ் மொழித் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. காலைத் தேர்வு 3 மணி நேரமும், மதியத் தேர்வு 1 மணி நேரமும் (கட்டுரை வடிவம்) நடைபெறும்.
ஒழுக்கமும் எச்சரிக்கையும்
தேர்வு அறையில் முழு அமைதி காக்க வேண்டும். சக தேர்வர்களுடனோ அல்லது வெளியாட்களுடனோ பேசுவது குற்றம். ஆள்மாறாட்டம் அல்லது முறைகேடுகளில் ஈடுபட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, எதிர்காலத் தேர்வுகளை எழுதவும் தடை விதிக்கப்படும். ஹால் டிக்கெட் நகலை எதிர்காலத் தேவைக்காகப் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்வது நல்லது.