
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி கனவு காணும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கான அந்த முக்கிய அறிவிப்பு வந்துவிட்டது. தேசிய தேர்வு முகமை (NTA) 2026-ம் ஆண்டிற்கான நீட் (NEET UG 2026) தேர்வு அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மே 3, 2026 அன்று தேர்வு நடைபெறவுள்ள நிலையில், விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 8 முதல் தொடங்கி மார்ச் 8 வரை நடைபெறவுள்ளது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பத்தில் செய்யும் சிறு தவறுகளால் வாய்ப்பை இழக்கின்றனர். இந்த ஆண்டு அந்தத் தவறுகளைத் தவிர்க்க, நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் இங்கே!
பல மாணவர்கள் செய்யும் முதல் தவறு, கடைசி நாள் வரை காத்திருப்பதுதான். மார்ச் 8, 2026 வரை கால அவகாசம் இருந்தாலும், கடைசி நேரத்தில் இணையதள முடக்கம் (Server Down) ஏற்பட வாய்ப்புள்ளது. தொழில்நுட்பக் கோளாறுகளால் கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்படலாம். எனவே, இன்றே விண்ணப்பிப்பது சிறந்தது.
விண்ணப்பத்தில் உங்கள் பெயர், தந்தை பெயர், தாயார் பெயர் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடும்போது மிகக்கவனமாக இருங்கள். இந்தத் தகவல்கள் உங்கள் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (Class 10 Marksheet) அல்லது அடையாள அட்டையில் உள்ளவாறே இருக்க வேண்டும். எழுத்துப்பிழை இருந்தால், பின்னாளில் ஆவண சரிபார்ப்பின் போது பெரிய சிக்கலை உண்டாக்கும்.
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட முக்கியக் காரணங்களில் ஒன்று தெளிவற்ற புகைப்படம். என்டிஏ விதிகளின்படி, குறிப்பிட்ட பின்னணி (Background), அளவு மற்றும் வடிவத்தில் (Format) மட்டுமே போட்டோவை அப்லோட் செய்ய வேண்டும். செல்ஃபி அல்லது பழைய போட்டோக்களைத் தவிர்த்துவிடுங்கள். அதேபோல், கையெழுத்து மற்றும் கைரேகையையும் (Fingerprint) விதிமுறைகளின்படி தெளிவாக ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும்.
OBC-NCL, EWS போன்ற இடஒதுக்கீடு பிரிவுகளைத் தேர்வு செய்யும் மாணவர்கள், அதற்கான முறையான சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும். தகுதி வரம்புகளை முழுமையாகப் படித்துவிட்டு, சரியான பிரிவை தேர்வு செய்யுங்கள். நண்பர்கள் சொல்வதையோ அல்லது சமூக வலைதளத் தகவல்களையோ நம்பி தவறான பிரிவைக் குறிப்பிடாதீர்கள். இது உங்கள் கவுன்சிலிங் வாய்ப்பைப் பறிக்கக்கூடும்.
கட்டணம் செலுத்திய பிறகு, 'வெற்றி' (Success) என்ற செய்தி வந்தாலும், சில நேரங்களில் தொழில்நுட்பக் கோளாறால் பணம் சென்றடைந்திருக்காது. எனவே, விண்ணப்பம் முழுமையடைந்ததற்கான 'Confirmation Page'-ஐ பதிவிறக்கம் (Download) செய்து பத்திரப்படுத்தி வைத்துக்கொள்வது அவசியம். இதுதான் நீங்கள் விண்ணப்பித்ததற்கான மிகமுக்கியமான அத்தாட்சி.
வாட்ஸ்அப் ஃபார்வர்டுகள் மற்றும் யூடியூப் வீடியோக்களில் வரும் தகவல்களை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். தேர்வு குறித்த எந்தவொரு சந்தேகத்திற்கும் neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டுமே அணுக வேண்டும்.
தேர்வுக்கட்டணம் விவரம்:
• General: ₹1700
• OBC-NCL / EWS: ₹1600
• SC / ST / PwD / Third Gender: ₹1000
• வெளிநாட்டு மையங்கள்: ₹9500
மாணவர்களே, படிப்பதில் காட்டும் அதே கவனத்தை விண்ணப்பிப்பதிலும் காட்டுங்கள். உங்கள் மருத்துவக் கனவு வெல்ல வாழ்த்துகள்!