மத்திய அரசின் தேசிய திறன் பயிற்சி நிறுவனம் இளைஞர்களுக்காக 6 மாத ட்ரோன் டெக்னீஷியன் பயிற்சியை அறிவித்துள்ளது. தொழிற்சாலை சார்ந்த நேரடி பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு உதவியுடன் கூடிய இந்தத் திட்டத்தில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய திறன் பயிற்சி நிறுவனம் இளைஞர்களுக்கான ஒரு முக்கியமான தொழில்நுட்ப பயிற்சி வாய்ப்பை அறிவித்துள்ளது. வேகமாக வளர்ந்து வரும் ட்ரோன் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில், ட்ரோன் டெக்னீஷியன் என்ற 6 மாத குறுகிய கால பயிற்சி திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சி 2026 பிப்ரவரி முதல் ஜூலை வரை நடைபெறுகிறது.
25
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி
ஆர்வமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 16 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேலும் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுடன் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட மாணவர்கள், வேலைவாய்ப்பை நோக்கி பயணிக்க விரும்பும் இளைஞர்களுக்கு இந்தப் பயிற்சி ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.
35
நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பு உதவி
இந்த ட்ரோன் டெக்னீஷியன் பயிற்சியின் முக்கிய சிறப்பம்சமாக, ஆன்லைன் வகுப்புகளுடன் சேர்த்து தொழிற்சாலை சார்ந்த நேரடி பயிற்சி வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயிற்சி பெறுவோர் உண்மையான வேலைச் சூழலில் அனுபவம் பெற முடியும். மேலும் பயிற்சி முடிவில் வளாகத் நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பு உதவி வழங்கப்படுவது கூடுதல் பலமாகும்.
மத்திய அரசின் NCVET அங்கீகாரம் பெற்ற தேசிய வர்த்தக சான்றிதழ்
பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு, மத்திய அரசின் NCVET அங்கீகாரம் பெற்ற தேசிய வர்த்தக சான்றிதழ் (NTC) வழங்கப்படும். இந்தச் சான்றிதழ் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளுக்கு முழுமையாக அங்கீகரிக்கப்பட்டதாகும். ட்ரோன் தொழில்நுட்பம் விவசாயம், பாதுகாப்பு, சர்வே, மீட்பு பணிகள் போன்ற பல துறைகளில் பயன்படுத்தப்படுவதால், எதிர்காலத்தில் நல்ல வருமானம் தரும் தொழிலாக இது உருவெடுத்துள்ளது.
55
ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்
இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ இணையதளமான nstichennai.dgtmsde.in-ல் சென்று CTS 2025-26 → CTS Feb 2026 என்ற இணைப்பின் மூலம் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு, 94442 00492, 97911 49116 எண்களை தொடர்புகொள்ளலாம். பயிற்சி நடைபெறும் முகவரி: National Skill Training Institute, கிண்டி, சென்னை – 600032.