
பிளஸ்-2 முடித்த மாணவர்கள் முதல், பட்டப்படிப்பை முடித்த பட்டதாரிகள் வரை பலருக்கும் மத்திய அரசுப் பல்கலைக்கழகத்தில் பயில வேண்டும் என்ற கனவு இருக்கும். தரமான கல்வி, குறைந்த கட்டணம், அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் எனப் பல சிறப்பம்சங்களைக் கொண்டது மத்தியப் பல்கலைக்கழகங்கள். அந்த வகையில், நம் தமிழ்நாட்டின் திருவாரூரில் அமைந்துள்ள 'தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்' (Central University of Tamil Nadu - CUTN) குறித்த முழுமையான விவரங்களை இங்கே காண்போம்.
மத்தியப் பல்கலைக்கழகச் சட்டம் 2009-ன் கீழ் உருவாக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு மொத்தம் 28 துறைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 10 இளங்கலை படிப்புகள், 22 முதுகலை படிப்புகள், ஆசிரியராக விரும்புவோருக்கான 1 ஒருங்கிணைந்த பி.எட் படிப்பு, 3 பி.ஜி டிப்ளமோ மற்றும் 29 பாடப்பிரிவுகளில் முனைவர் (PhD) படிப்புகள் எனப் பரந்துபட்ட கல்வி வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
பள்ளிப் படிப்பை முடித்து வரும் மாணவர்களுக்காக 4 ஆண்டுகால இளங்கலை பட்டப்படிப்புகள் இங்கு வழங்கப்படுகின்றன.
• பி.எஸ்சி (B.Sc): வேதியியல், பயோடெக்னாலஜி (Biotechnology), கணிதம், இயற்பியல், ஜவுளித்துறை (Textiles), தொழில்நுட்ப ஜவுளி (Technical Textiles).
• பி.ஏ (B.A): பொருளாதாரம்.
• இசை: பி.பி.ஏ (BPA) இசை.
• நிர்வாகம்: பி.பி.ஏ (BBA) - ஜவுளித் தொழில் பகுப்பாய்வு.
• சிறப்புப் படிப்பு: கணிதத்தில் 4 ஆண்டுகள் கொண்ட ஒருங்கிணைந்த பி.எஸ்சி பி.எட் (B.Sc., B.Ed) படிப்பும் உள்ளது.
இளங்கலையை முடித்துவிட்டு முதுகலை (PG) சேர விரும்புவோருக்குப் பரந்த வாய்ப்புகள் உள்ளன. வேதியியல், வணிகம் (Commerce), நிர்வாகம் (Management), கணினி அறிவியல், உளவியல், சட்டம், தமிழ், ஆங்கிலம், வரலாறு, சமூகப் பணி (Social Work), தோட்டக்கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 2 ஆண்டு முதுகலை படிப்புகள் உள்ளன. மேலும், கெமிக்கல் லேப் டெக்னீஷியன், டேட்டா சயின்ஸ் போன்றவற்றில் 1 ஆண்டு டிப்ளமோ படிப்புகளும், பல்வேறு துறைகளில் முனைவர் பட்டப் படிப்புகளும் (PhD) வழங்கப்படுகின்றன.
மத்தியப் பல்கலைக்கழகத்தின் மிகப்பெரிய சிறப்பம்சமே அதன் குறைவான கல்விக் கட்டணம்தான்.
• இளங்கலை: பி.எஸ்சி படிப்புகளுக்கு முதல் ஆண்டு கட்டணம் சுமார் ரூ.16,923. பி.ஏ படிப்பிற்கு ரூ.15,035 மற்றும் இசைப் படிப்பிற்கு ரூ.18,097.
• ஒருங்கிணைந்த படிப்பு: பி.எஸ்சி., பி.எட் படிப்பிற்கு ரூ.19,283.
• முதுகலை: எம்.எஸ்சி (M.Sc) படிப்புகளுக்குச் சுமார் ரூ.20,480. எம்.ஏ (M.A) படிப்புகளுக்கு ரூ.16,742 முதல் ரூ.17,976 வரை. எம்.பி.ஏ (MBA) படிப்பிற்கு ரூ.23,276.
• ஆராய்ச்சி: முழு நேர பி.எச்.டி (PhD) படிப்பிற்கு ரூ.25,240.
இங்குச் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு கட்டாயம்.
• இளங்கலை (UG): தேசியத் தேர்வு முகமை (NTA) நடத்தும் CUET UG 2026 தேர்வை எழுத வேண்டும். இதற்கான விண்ணப்பம் cuet.nta.nic.in இணையதளத்தில் ஜனவரி 3 முதல் ஜனவரி 30 வரை பெறப்படுகிறது. தேர்வு மே மாதம் நடைபெறும்.
• முதுகலை (PG): CUET PG 2026 தேர்வை எழுத வேண்டும். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி ஜனவரி 14. இணையதளம்: exams.nta.nic.in/cuet-pg/.
• ஒருங்கிணைந்த பி.எட்: இதற்கு NCET 2026 தேர்வை எழுத வேண்டும்.
மாணர்களே, தரமான உயர்கல்வியைக் குறைந்த கட்டணத்தில் பெற விரும்பினால், தாமதிக்காமல் உடனே விண்ணப்பியுங்கள்!