
CBSE 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நெருங்கிவிட்டன. பல மாணவர்கள் அறிவியல், கணிதம் போன்ற பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, ஆங்கிலப் பாடத்தை (English) சற்று சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். ஆனால், ஒட்டுமொத்த சதவீதத்தை (Overall Percentage) உயர்த்துவதற்கும், உங்களின் கம்யூனிகேஷன் திறனை மேம்படுத்துவதற்கும் ஆங்கிலம் மிக மிக அவசியமான பாடமாகும்.
ஆங்கிலத் தேர்வை எப்படிக் கையாள்வது, எந்தெந்த பகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும், கடினமான கேள்விகளுக்கு எப்படி விடையளிப்பது என்பது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை இங்கே காண்போம்.
CBSE-ஐப் பொறுத்தவரை எந்தப் பாடத்தில் இருந்து எவ்வளவு மதிப்பெண்கள் வரும் என்ற வரையறை இல்லை. எனினும், கடந்த கால வினாத்தாள்களின் அடிப்படையில் ஒரு சில விஷயங்களை யூகிக்க முடியும்.
• Prose (உரைநடை): பாடத்தின் முக்கிய கருத்து (Theme), கதாபாத்திரத்தின் குணாதிசயங்கள் (Character traits) மற்றும் மதிப்புகள் (Values) ஆகியவற்றை மையமாக வைத்து பெரிய கேள்விகள் (Long answers) கேட்கப்படும்.
• Poetry (கவிதை): கவிதையைப் பொறுத்தவரை, ஒரு வரியைக் கொடுத்து அது தொடர்பான கேள்விகள் (Reference-to-context), கவிதையின் மையக்கருத்து மற்றும் கவிதை நயங்கள் (Poetic devices) குறித்து கேள்விகள் கேட்கப்பட வாய்ப்புள்ளது.
• Drama (நாடகம்): கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களம் ஆகியவற்றைப் புரிந்து படிப்பது அவசியம்.
எந்தவொரு பாடத்தையும் ஒதுக்காமல் படிப்பது நல்லது. ஏனெனில் சிபிஎஸ்இ எளிய பாடங்களில் இருந்து கூட சுற்றி வளைத்து கேள்விகள் (Indirect questions) கேட்க வாய்ப்புள்ளது.
1. Reading Skills (படித்தல் திறன்)
• பத்தியைப் (Passage) படிக்கும் முன்பே, கேள்விகளை ஒருமுறை வாசித்துப் பாருங்கள். இதனால் பத்தியில் எதைத் தேட வேண்டும் என்பது முன்கூட்டியே தெரிந்துவிடும்.
• பத்தியை வாசிக்கும் போது முக்கிய வார்த்தைகள், தேதிகள், பெயர்கள் மற்றும் 'however', 'therefore' போன்ற இணைப்பு வார்த்தைகளை அண்டர்லைன் (Underline) செய்து கொள்ளுங்கள்.
• பதில்களை சுருக்கமாகவும், துல்லியமாகவும் எழுதுங்கள்.
• சொற்பொருள் (Vocabulary) கேள்விகளுக்கு, அந்த வார்த்தை உள்ள வரியை மீண்டும் படித்து, அதன் அர்த்தத்தை ஊகித்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
• கடிதம் எழுதுவதற்கான ஃபார்மேட் (Format) மிகவும் முக்கியம். தேதி, முகவரி, Subject, Salutation மற்றும் முடிக்கும் விதம் ஆகியவற்றுக்கு நேரடி மதிப்பெண்கள் உண்டு.
• எழுதுவதற்கு முன் முக்கிய குறிப்புகளை (Key points) சுருக்கமாக எழுதிப் பார்த்துவிட்டு பின் கட்டுரையைத் தொடங்குங்கள்.
• வார்த்தை வரம்பை (Word limit) மீற வேண்டாம். இலக்கணம் மற்றும் வாக்கிய அமைப்புகளில் (Tense consistency) கவனம் செலுத்துங்கள். எளிமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினாலே போதுமானது.
• CBSE தேர்வில் பெரும்பாலும் Tenses, Subject-Verb Agreement, Determiners, Reported Speech மற்றும் Modals ஆகிய பகுதிகளில் இருந்து தான் அதிக கேள்விகள் வரும். இந்த விதிகளில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்.
• பயிற்சித் தாள்களை (Worksheets) செய்து பார்க்கும் போது, என்னென்ன தவறுகள் செய்கிறோம் என்பதை நோட் செய்து வைத்து, அதனைத் திருத்திக் கொள்ளுங்கள்.
கடினமான கேள்வியைப் பார்த்தவுடன் பதற்றமடைய வேண்டாம். கேள்வியை இரண்டு முறை படியுங்கள். கேள்வியில் என்ன கேட்கப்பட்டுள்ளதோ, அதற்கு மட்டும் நேரடியான பதிலை எழுதுங்கள். கதையை முழுவதுமாக எழுதிக் கொண்டிருக்கக் கூடாது. பெரிய பதில்களுக்கு, உங்கள் கருத்தை முதலில் தெளிவாகக் குறிப்பிட்டுவிட்டு, பாடத்தில் நடந்த ஒரு நிகழ்வைச் சுட்டிக்காட்டி விடையை நிறைவு செய்யுங்கள். விடை லாஜிக்காகவும், பாடத்தோடு தொடர்புடையதாகவும் இருந்தால் சிபிஎஸ்இ நிச்சயம் நல்ல மதிப்பெண்களை வழங்கும்.
தேர்வுக்கு முந்தைய நாள் பாடங்களை முழுவதுமாகப் படித்துக் கொண்டிருக்க வேண்டாம். நீங்கள் ஏற்கனவே தயாரித்து வைத்திருக்கும் சுருக்கமான குறிப்புகள், கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள் மற்றும் கவிதையின் முக்கிய வரிகள், Poetic Devices ஆகியவற்றை மட்டும் ஒருமுறை திருப்புதல் (Revision) செய்யுங்கள்.
தேர்வின் போது கேள்விகளைச் சரியாகப் புரிந்துகொண்டு, விடையளிக்கத் தொடங்குங்கள். எந்தவொரு கேள்வியையும் விட்டுவிடாதீர்கள் (Do not leave any question unanswered). MCQ-க்களுக்கு விடையளிக்கும் போது, ஆப்ஷன் எண்ணுடன் (Option number) சேர்த்து விடையையும் எழுதுவது அவசியம். இந்தத் குறிப்புகளைப் பின்பற்றி ஆங்கிலத் தேர்வில் நீங்களும் அசத்துங்கள். வாழ்த்துகள்!