Gold Price Prediction : தங்கம் விலை இன்னும் குறையுமா? நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ் சொன்ன ஆனந்த் சீனிவாசன்!

First Published | Nov 16, 2024, 7:23 PM IST

தங்கம் விலை சமீபத்தில் உச்சத்தை எட்டிய நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு விலை சரிந்து வருகிறது. பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், தங்கம் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதாகவும், ஆனால் 1.5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உயரும் எனவும் கணித்துள்ளார்.

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் இனி தங்கமே வாங்கு முடியாது போல என்ற நிலைக்கு நடுத்தர மக்கள் சென்றுவிட்டனர்.  தீபாவளிக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு அதாவது அக்டோபர் 29-ம் தேதி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.7,375-க்கும், சவரனுக்கு ரூ.59,000-க்கும் உயர்ந்து வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டியது. 

தீபாவளி தினத்தன்று மேலும் விலை உயர்ந்து கிராமுக்கு ரூ.7,455-க்கும், சவரனுக்கு ரூ.59,640-க்கும் விற்பனையானது.  இனி தங்கம் விலை குறையாது என்றும் வரும் நாட்களில் ஒரு கிராம் தங்கம் விலை 8000 ரூபாயை தாண்டும் என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tap to resize

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 4-ம் தேதி நடந்து முடிவுகள் 6-ம் தேதி வெளியானது. இந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை பங்குகள் பக்கம் திருப்பினர். இதனால் ரூபாய் மதிப்பும் டாலருக்கு நிகராக தொடர் சரிவடைவதை அடுத்து தங்கம் விலைகள் சரிவு கண்டு வருகின்றன. அமெரிக்க வட்டி விகிதக் குறைப்பு எதிர்பார்ப்புகளும் தங்கம் மீதான முதலீடுகளை குறைத்துள்ளது.

இதையொட்டி, டிரம்ப் வெற்றி பெற்ற மறுநாளே தங்கம் விலை கிராமுக்கு ரூ.165 குறைந்து ரூ.7,200-க்கும், சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.57,600-க்கும் விற்பனையானது. பின்னர் சரசரவென குறைந்து தற்போது தங்கம் விலை ரூ.55,480-க்கு விற்பனையாகிறது. இந்நிலையில் தங்கம் விலை மேலும் குறையுமா என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் வீடியோவில்: தங்கம் விலை இன்னும் குறைய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். கடந்த சில நாட்களில் மட்டும் தங்கம் கிராம்  ரூ.100க்கு மேல் விலை குறைந்துள்ளது. இன்னும் 3 மாதங்கள் தங்கம் விலை இப்படி தான் இருக்கும். ஆனால், குறைந்தபட்ச விலையில் தான் வாங்குவேன் என இருக்காதீர்கள். எது குறைந்தபட்ச விலை என்பதை கணிக்க முடியாது. 1.5 ஆண்டுகள் கழித்து நிச்சயம் தங்கம் விலை ராக்கெட்டில் ஏறும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என தெரிவித்துள்ளார். 

Latest Videos

click me!