ஜனவரி 1-க்கு பதிலாக ஏப்ரல் 1-ல் ஏன் நிதியாண்டு தொடங்குகிறது தெரியுமா? ஆங்கிலேயர்கள் மறைத்துச் சென்ற சுவாரசியமான பின்னணி.!

Published : Apr 02, 2026, 12:13 PM IST

Why financial year starts from April 1 in India : ஜனவரி ஒன்றாம் தேதிக்கு பதிலாக ஏப்ரல் ஒன்றாம் தேதி நிதியாண்டு தொடங்குவது குறித்து என்றாவது யோசித்திருக்கிறீர்களா? அதன் பின்னால் உள்ள காரணங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
16
Why financial year starts from April 1 in India

இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் ஒன்றாம் தேதி புதிய நிதியாண்டு தொடங்குவது வழக்கமாகும். ஜனவரி ஒன்றாம் தேதிக்கு பதிலாக ஏன் ஏப்ரல் ஒன்றாம் தேதி நிதியாண்டு தொடங்குகிறது என்று நம் பலரும் மனதிலும் கேள்வி எழுந்திருக்கும். அதன் பின்னால் ஆங்கிலேயர் விட்டு சென்ற நிர்வாக நடைமுறைகள், இந்தியாவின் புவியியல் மற்றும் கலாச்சார காரணிகள் ஒளிந்துள்ளன. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

26
ஆங்கிலேயர் விட்டுச் சென்ற ரகசியம்

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த போது நிர்வாக வசதிக்காக பிரிட்டனில் நடைமுறையில் இருந்த அதே கணக்கு முறையை இந்தியாவிலும் கொண்டு வந்தனர். 1867-க்கு முன்பு வரை இந்தியாவில் மே மாத முதல் ஏப்ரல் மாதம் வரையிலான நிதியாண்டு பின்பற்றப்பட்டது. ஆனால் இது பிரிட்டனின் நிதியாண்டுடன் (ஏப்ரல் முதல் மார்ச் வரை) ஒத்துப் போக வேண்டும் என்பதற்காக 1867-ல் இந்தியாவின் நிதியாண்டு ஏப்ரல் 1-க்கு மாற்றப்பட்டது.

36
காலண்டரில் ஏற்பட்ட மாற்றம்

பிரிட்டனில் நீண்ட காலத்திற்கு முன்பு மார்ச் 25 தான் புத்தாண்டாக இருந்தது. 1752 இல் அவர்கள் ஜூலியன் காலண்டிலிருந்து கிரிகோரியன் காலண்டருக்கு மாறும் பொழுது 11 நாட்கள் வித்தியாசம் ஏற்பட்டது. அந்த வரி இழப்பை சரி செய்ய அவர்கள் நிதி ஆண்டை ஏப்ரல் ஐந்துக்கு மாற்றினார்கள். பின்னர் 1800 ஆம் ஆண்டில் ஏற்பட்ட லீப் ஆண்டு மாற்றங்களால் அது ஏப்ரல் ஆறாக மாறியது. பிரிட்டிஷ் இந்தியாவில் நிர்வாக வசதிக்காக இது ஏப்ரல் ஒன்று என எளிமையாக்கப்பட்டு 1867 முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது.

46
விவசாயம் மற்றும் பருவமழை

இந்தியா ஒரு விவசாய நாடாகும். இந்தியாவின் பொருளாதாரம் பெரும்பாலும் பருவ மழையைச் சார்ந்தே இருக்கும். அக்டோபர் முதல் மார்ச் வரை இந்தியாவின் முக்கிய பயிர்கள் அறுவடை செய்யப்படுகின்றன. மார்ச் மாத இறுதியில் அறுவடை முடிந்து விவசாயிகளின் கையில் பணம் வரும் போதுதான் அரசை பொருத்தவரை அந்த ஆண்டின் மொத்த விவசாய உற்பத்தி மற்றும் வருவாயை துல்லியமாக கணக்கிட முடியும். ஜனவரியில் நிதியாண்டு தொடங்கினால் அறுவடைக்கு நடுவே கணக்கு பார்ப்பது அரசுக்கு சிரமமாக இருக்கும் என்பதால் ஏப்ரல் ஒன்று மிகவும் பொருத்தமானதாக அமைந்தது.

56
பட்ஜெட் மற்றும் திட்டமிடல்

பருவமழை ஜூன் மாதம் தொடங்குகிறது. அதற்கு முன்னரே ஏப்ரல் அல்லது மே மாதங்களில் புதிய நிதியாண்டை தொடங்கினால் மட்டுமே மழை காலத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளையும், விவசாய திட்டங்களையும் சரியாக செயல்படுத்த முடியும். பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டானது ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருவதால் அரசுக்கு திட்டமிடுவதற்கான போதிய கால அவகாசம் கிடைக்கிறது. மேலும் இந்தியாவின் பல மாநிலங்களில் புத்தாண்டு (உகாதி, வைசாகி) போன்றவை ஏப்ரல் மாதத்தில் பிறக்கிறது. இது தற்செயலான ஒற்றுமையாக இருந்தாலும் புதிய கணக்கை தொடங்குவதற்கு ஏப்ரல் மாதம் இந்திய மக்களுக்கு மன ரீதியாகவும் உகந்ததாக இருக்கிறது.

66
ஆங்கிலேயரின் வசூல் தந்திரமும், இந்தியாவின் விவசாய சுழற்சியும்

இந்த முறையை மாற்றி உலக நாடுகளைப் போல ஜனவரி டிசம்பர் காலண்டர் ஆண்டு நிதியாண்டாக மாற்றலாம் என்று சங்கர் ஆச்சாரியா கமிட்டி மூலம் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் தற்போது இருக்கும் இந்த நடைமுறை ஏற்கனவே பழகிப் போனதால் இதை மாற்றுவது பெரும் குழப்பத்தை உண்டாக்கும் என்பதால் இந்தியா தற்போது வரை ஏப்ரல் ஒன்றையே புதிய நிதியாண்டாக பின்பற்றி வருகிறது. சுருக்கமாகச் சொன்னால் ஆங்கிலேயர்களின் வரி வசூல் தந்திரமும், இந்தியாவின் விவசாய சுழற்சியும் இணைந்தது தான் ஏப்ரல் ஒன்றை நிதியாண்டின் தொடக்கமாக மாற்றியுள்ளன.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories