தனித்திறமைக்கு ரூ.3 லட்சம்! தொழில் தொடங்க உதவும் மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம்!

First Published | Sep 7, 2024, 9:14 AM IST

18 பாரம்பரிய தொழில்களில் ஈடுபட்டுள்ள கைவினை கலைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தொழில் கருவிகள் வாங்க ரூ.15,000 நிதியுதவியும் மிக்க் குறைந்த வட்டியில் ரூ.3 லட்சம் கடனும் வழங்கப்படுகிறது.

PM Vishwakarma Scheme

பிரதமர் மோடி 2023ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். இத்திட்டத்தின் கீழ் பாரம்பரியத் தொழில்கள் செய்வோருக்கு குறைந்த விலையில் கடன் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து செப்டம்பர் 17ஆம் தேதி விஸ்வகர்மா ஜெயந்தியில் இத்திட்டத்தை மோடி தொடங்கிவைத்தார்.

PM Vishwakarma Scheme

பாரம்பரிய தொழில்களைச் செய்துவருபவர்கள் மற்றும் கைவினை கலைஞர்களுக்கு விஸ்வகர்மா திட்டம் மூலம் கடன் உதவி கிடைக்கும். 18 பாரம்பரிய தொழில்களில் ஈடுபட்டுள்ள கைவினை கலைஞர்கள் விஸ்வகர்மா திட்டத்தில் பயன் அடையலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. ரூ.13,000 கோடி மதிப்பில் மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Latest Videos


PM Vishwakarma Scheme

விஸ்கர்மா திட்டத்தின் கீழ் பயன்பெற, விஸ்வகர்மா திட்டத்திற்கான www.pmvishwakarma.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவுசெய்யவேண்டும். பொது சேவை மையங்கள் மூலம் இலவசமாகவே பதிவு செய்யலாம். பதிவுசெய்தவர்களுக்கு விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கப்படும். பின்னர் தொழில் பயிற்சி மற்றும் கருவிகள் வாங்குவதற்காக ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

PMVY Scheme

பயற்சி மற்றும் கருவிகளுக்கான ஊக்கத்தொகை மட்டுமின்றி குறைந்த வட்டியில் ரூ.3 லட்சம் வரை கடனும் கிடைக்கும். இந்தக் கடன் இரண்டு தவணைகளாக வழங்கப்படும். முதல் தவணையாகத் தரப்படும் ரூ. 1 லட்சம் வட்டியில்லா கடனாக இருக்கும். இரண்டாம் தவணையாக ரூ. 2 லட்சம் வரை பெற்றுக்கொள்ளலாம். இதற்கான வட்டி விகிதம் 5% மட்டுமே.

PMVY Scheme

கைவினை கலைஞர்களும் பாரம்பரிய தொழில்களில் ஈடுபட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களும் விஸ்வகர்மா திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவர்கள். தச்சர், கொல்லர், பொற்கொல்லர், குயவர், சிற்பிகள், கல் தச்சர்கள், காலணி தைப்பவர், காலணி செய்பவர், கொத்தனார், கூடை- பாய்- துடைப்பம் தயாரிப்பவர், கயிறு திரிப்பவர்கள், பொம்மை செய்பவர், முடிதிருத்தும் தொழிலாளர், பூ கட்டுபவர், சலவைத் தொழிலாளர், தையல்காரர், மீன்பிடி வலை தயாரிப்பவர், சுத்தியல் போன்ற கருவிகள் தயாரிப்பவர்கள், பூட்டுகள் செய்பவர்கள் என பல தொழிலாளர்கள் இந்தத் திட்டத்தில் பதிவுசெய்து பயன்பெற முடியும்.

Vishwakarma Yojana

குறைந்தபட்சம் 18 வயதானவர்தான் விஸ்கர்மா திட்டத்தில் சேர முடியும். பதிவு செய்யும் நாளில் பயனாளியின் வயது 18 க்கு குறையாமல் இருக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட தேதியில் சம்பந்தப்பட்ட தொழிலைச் செய்துகொண்டிருப்பதும் அவசியம். சென்ற 5 ஆண்டுகளில் மத்திய மாநில அரசுகளின் சுய தொழில் மேம்பாட்டிற்காக கடன்கள் பெற்றிருக்கக் கூடாது. முத்ரா திட்டம், சாலையோர வியாபாரிகளுக்கான திட்டம் ஆகியவை மூலம் கடன் பெற்றவர்களும் இத்திட்டத்தில் உதவிபெற முடியாது.

Vishwakarma Yojana 2024

ஒரு குடும்பத்தில் ஒரு உறுப்பினர் மட்டுமே விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயன்பெற முடியும். இத்திட்டத்தின் கீழ் கணவன், மனைவி மற்றும் திருமணமாகாத குழந்தைகளைக் கொண்டது ‘ஒரு குடும்பம்’ என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.

Vishwakarma Yojana Loan

www.pmvishwakarma.gov.in என்ற விஸ்வகர்மா திட்டத்தின் இணையதளத்தில் ஆதார் KYC சரிபார்ப்பு மூலம் பயனர் பதிவுசெய்துகொள்ளலாம். பதிவுசெய்த பிறகு, கைவினைஞர் பதிவுப் படிவப் பகுதிக்குச் சென்று விண்ணப்பிக்கலாம். பெயர், கைவினைத் திறன் அல்லது பாரம்பரிய தொழில் விவரம், ஆதார் எண் உள்ளிட்ட தேவையான பிற தகவல்களைத் துல்லியமாகக் குறிப்பிட்டு விண்ணப்பப் படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். ஆதார் கார்டு, வங்கி விவரங்கள், திறன் சான்றிதழ் போன்ற தேவையான ஆவணங்களின் ஸ்கேன் செய்த நகல்களைப் பதிவேற்ற வேண்டும். இதன் மூலம் விண்ணப்பத்தில் உள்ள தகவல்கள் சரிபார்க்கப்படும்.

Vishwakarma Yojana Registration

உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முன் கவனமாக சரிபார்க்கவும். விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு அப்ளிகேஷன் ஐடி ஒன்றும் கிடைக்கும். இதன் மூலம் விண்ணப்பப் படிவத்தின் நிலையை விஸ்வகர்மா இணையதளத்தில் பார்த்துகொள்ளலாம்.

Vishwakarma Mobile App

விஸ்வகர்மா திட்டத்திற்காக சிறப்பு மொபைல் அப்ளிகேஷனையும் மத்திய அரசு உருவாக்கியுள்ளது. அதன் மூலமும் விஸ்வகர்மா திட்டத்தில் பதிவு செய்யலாம். விண்ணப்பத்தின் நிலையைக் கண்காணிப்பதற்கும், திட்டத் தகவல்களை அறிவதற்கும் பிற சேவைகளைப் பயன்படுத்துவதற்கும் இந்த மொபைல் செயலி வசதியாக இருக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

click me!