பால், டீ விலை உயர்ந்தாலும் ரூ.1 மிட்டாய் இன்றும் அதே விலையில் கிடைப்பது எப்படி? நிறுவனங்களின் 'ஷ்ரிங்க்ஃபிளேஷன்' தந்திரம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள சுவாரஸ்ய பொருளாதார ரகசியத்தை பற்றி விரிவாகப் பார்ப்போம்.
பால், டீ, காபி என நாம் அன்றாடம் வாங்கும் அத்தனை பொருட்களின் விலையும் தாறுமாறாக எகிறிவிட்ட இந்தக் காலத்திலும்... நாம் சிறு வயதில் ஆசையாக வாங்கிய அதே ரூ.1 மிட்டாய், இன்றும் பெட்டிக்கடைகளில் அதே ரூ.1-க்கு எப்படிக் கிடைக்கிறது? கம்பெனிகள் நஷ்டத்தில் விற்கிறார்களா? இல்லை, நம்மிடம் ஏதேனும் மாயாஜாலம் செய்கிறார்களா? இந்த மர்மத்தின் பின்னணியை எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.
23
விலை மாறல... ஆனா எடை குறைஞ்சிருச்சா?
ஒரு மிட்டாயைத் தயாரிக்க ஆகும் செலவு 10% அதிகரிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். கணக்குப்படி பார்த்தால், அதன் புதிய விலை ரூ.1.10 பைசா என்று மாற வேண்டும். ஆனால், நிஜத்தில் ரூ.1.10 என்பது சில்லறை வியாபாரத்தில் தலைவலியான விஷயம். ஏனென்றால், அதற்கு 10 பைசா சில்லறை வேண்டும். ஆனால், நம்மிடம் இப்போது 10 பைசா நாணயமே புழக்கத்தில் இல்லையே. அப்படியென்றால், நடைமுறையில் அடுத்ததாக வைக்கக்கூடிய ஒரே விலை ரூ.2 மட்டுமே.
வெறும் 10% தயாரிப்புச் செலவு கூடினால் கூட, அந்த நிறுவனத்திற்கு 2 வழிகள்தான் உண்டு. விலையை பழையபடி ரூ.1 ஆகவே தொடர வேண்டும் அல்லது விலையை தடாலடியாக ரூ.2 ஆக இரட்டிப்பாக்க வேண்டும். ஆனால், விலையை ரூ.2 ஆக்கினால் ஒரு பெரிய ஆபத்து இருக்கிறது. அந்த மிட்டாய் இவ்வளவு எளிதாக விற்பனையாவதற்கே ஒரே ஒரு தாரக மந்திரம்தான் காரணம் ஒரு நாணயம்... ஒரு மிட்டாய்... எந்த கணக்கும் இல்லை. விலையை இரட்டிப்பாக்கினால், மக்களின் இந்த எளிமையான மனநிலை உடைந்துபோய் விற்பனை சரிந்துவிடும்.
33
நஷ்டத்தில் விற்கிறார்களா மிட்டாய் நிறுவனங்கள்?
அங்கேதான் ஆரம்பமானது அந்த வித்தை 'ஷ்ரிங்க்ஃபிளேஷன்' (Shrinkflation). விலையை ஏற்ற முடியாததால் நிறுவனங்கள் வேறு வழியைக் கையில் எடுத்தன. மிட்டாயின் விலையை இரட்டிப்பாக்குவதற்கு பதிலாக, மிட்டாயையே உள்ளுக்குள் சுருக்க தொடங்கினார்கள். இதற்கு பொருளாதாரத்தில் ‘ஷ்ரிங்க்ஃபிளேஷன்’ (Shrinkflation) என்று பெயர். அதாவது, விலையை உயர்த்த மாட்டார்கள்; ஆனால் அதே விலைக்கு நமக்கு கொடுக்கும் பொருளின் அளவைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துவிடுவார்கள்.
தயாரிப்பு முறையில் கொஞ்சம் மலிவான மூலப்பொருட்களை பயன்படுத்துகிறார்கள். மிட்டாயின் உள்ளே இருக்கும் கிரீம் அல்லது திரவக் கலவையை (filling) மெலிதாக்கி விடுகிறார்கள். மிட்டாயின் எடையில் ஒரு கிராம் அல்ல, ஒரு கிராம்-ல் சில துளிகள் அமைதியாக மாயமாகி விடுகின்றன. மிட்டாயைச் சுற்றியிருக்கும் உறையின் (wrapper) எடை கூட லேசாக்கப்படுகிறது. உற்பத்தி மற்றும் போக்குவரத்துக் கட்டமைப்பில் எங்கு முடியுமோ அங்கெல்லாம் செலவுகளை இறுக்கிப் பிடிக்கிறார்கள். இவ்வளவு தந்திரங்களும், வித்தைகளும் எதற்காகத் தெரியுமா? அந்த ரூ.1 என்ற மாயாஜால விலையைக் காலங்கள் கடந்தும் நம் கண்களுக்கு அப்படியே நிலைநிறுத்திக் காட்டுவதற்குத்தான்!
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.