Razorpay Shashank Kumar, Harshil Mathur
இந்தியாவின் ஸ்டார்ட்ப்அப் துறை உலகின் மிகவும் வேகமான வளர்ச்சியைச் கண்டு வருகிறது. தொழில்முனைவோர் முன்னெப்போதையும் விட வேகமாக உயர்ந்து வருவதைக் காணமுடிகிறது. இந்நிலையில், இந்தியா இரண்டு இளம் பில்லியனர்களைப் பெற்றுள்ளது. அவர்கள்தான் ரேஸர்பே நிறுவனத்தைத் தொடங்கிய ஷஷாங்க் குமார் மற்றும் ஹர்ஷில் மாத்தூர்.
ஹுருன் குளோபல் ரிச் லிஸ்ட் 2025 இன் படி, வெறும் 34 வயதில், அவர்கள் தலா ரூ.8,643 கோடி நிகர சொத்து மதிப்புடன் எலைட் கிளப்பில் இணைந்துள்ளனர். இவர்கள் பில்லியனர் அந்தஸ்தை அடைந்திருப்பது நிதி தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியையும், உலகப் பொருளாதாரத்தில் உள்நாட்டு ஸ்டார்ட்அப்களின் செல்வாக்கு அதிகரித்து வருவதையும் எடுத்துக்காட்டுகிறது.
Razorpay founders
ரேஸர்பே தொடங்கியது எப்படி?
குமார் மற்றும் மாத்தூர் இருவரும் ஐஐடி ரூர்க்கியில் முதலில் சந்தித்தனர். அவர்கள் இருவருக்கும் தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை உருவாக்குவதில் ஆர்வம் இருந்தது. இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்காக 2014ஆம் ஆண்டு ரேஸர்பே நிறுவனத்தைத் தொடங்கினர். அதிலிருந்து நிதித் தொழில்நுட்பத் துறையில் அவர்களின் பயணம் தொடங்கியது.
ரேஸர்பே சேவையைத் தொடங்குவத்றகு முன்பு, இருவரும் கார்ப்பரேட் வேலைகளில் இருந்தனர். குமார் மைக்ரோசாப்டில் சாப்ட்வேர் என்ஜினியராகப் பணியாற்றினார். ஹர்ஷில் மாத்தூர் ஸ்க்லம்பெர்கரில் வயர்லைன் என்ஜினியராக இருந்தார். இந்தியாவில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளில் உள்ள சவால்களைக் கவனித்த அவர்கள் அதற்கு ஒரு தீர்வை உருவாக்கும் திட்டத்துடன் ரேஸர்பேவை நிறுவினர். "இந்தியாவில் ஆன்லைன் பேமெண்ட் வசதி மோசமான நிலையில் இருப்பதைக் கண்டதும் நாங்கள் ரேஸர்பேவைத் தொடங்கினோம்" என்று மாத்தூர் தனது லிங்க்ட்இன் சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
India's youngest billionaires
ரேஸர்பேயின் வளர்ச்சி:
இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனங்களில் ஒன்றாக ரேஸர்பே வளர்ந்துள்ளது. டிசம்பர் 2021 இல், சீரிஸ் F நிதியாக 375 மில்லியன் டாலரைப் பெற்று, $7.5 பில்லியன் மதிப்பீட்டை எட்டியது.
இந்த ஸ்டார்ட் அப், GIC, Sequoia Capital, Ribbit Capital, Tiger Global Management, Matrix Partners India, மற்றும் Y Combinator உள்ளிட்ட உலகளாவிய நிறுவனங்களிடமிருந்து முதலீட்டை ஈர்த்துள்ளது. இந்த நிறுவனத்தின் வெற்றி, இந்தியாவின் ஃபின்டெக் துறையில் வளர்ந்து வரும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.
Razorpay Growth in FinTech sector
இந்திய பில்லியனர்கள் பட்டியல்:
இந்தியாவில் பில்லியனர்களின் எண்ணிக்கை பல ஆண்டுகளாக ஏற்ற இறக்கங்களைக் கண்டுள்ளது. 2022ஆம் ஆண்டில், எண்ணிக்கை 249 ஆக உயர்ந்தது, ஆனால் சந்தை சவால்கள் காரணமாக 2023இல் 187 ஆகக் குறைந்தது. 2024 ஆம் ஆண்டில் 271 பில்லியனர்களுடன் இந்தப் போக்கு தலைகீழாக மாறியது, மேலும் 2025 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 284 ஆக மேலும் அதிகரித்துள்ளது.
ஹுருன் இந்தியாவின் நிறுவனர் மற்றும் தலைமை ஆராய்ச்சியாளரான அனஸ் ரஹ்மான் ஜுனைத் கூறுகையில், "இந்திய பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு டிரில்லியன் டாலர் மைல்கல்லைத் தாண்டியுள்ளது, இது ஒரு புதிய சகாப்தத்தைக் குறிக்கிறது. குறிப்பாக, இந்த பில்லியனர்களில் 62% பேரின் சொத்துகள் அதிகரித்துள்ளன. இது நாட்டை ஆக்கிரமித்துள்ள நேர்மறையான பொருளாதார போக்குகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது."
குமார் மற்றும் மாத்தூர் இந்தியாவின் இளைய பில்லியனர்களாக மாறியுள்ள நிலையில், சீனாவின் 29 வயதான வாங் ஜெலாங், ரூ.8,643 கோடி சொத்துடன் உலகின் இளம் பில்லியனராக இருக்கிறார். இந்தியாவில் பில்லியனர்களின் சராசரி வயது 68 ஆக உள்ளது. உலகளாவிய சராசரி வயது 66 ஆக உள்ளத.