சிங்கப் பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! அஞ்சல் சேமிப்புத் திட்ட வட்டி விகிதம் உயர்வு! முழு விவரம்

First Published | Apr 1, 2023, 4:45 PM IST

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை 2.5 சதவீதம் உயர்த்தியதால் வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு வட்டி உயர்வை அளிக்கின்றன. அந்த வகையில் அஞ்சல் துறையிலும் சிறுசேமிப்பு திட்டங்களுக்கு தொடர்ந்து வட்டி அதிகரிக்கிறது. இந்த வட்டி விகிதம் காலாண்டு தோறும் திருத்தப்படும். அதன்படி, ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டுக்கு கூடுதல் வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் 0.1 சதவீதம் முதல் 0.7 சதவீதம்வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக, தேசிய சேமிப்பு சான்றிதழுக்கு வழங்கப்பட்டுவந்த 7 சதவீத வட்டி 7.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பெண் குழந்தைகளுக்கான 'செல்வமகள்' சேமிப்பு கணக்கு கொடுக்கப்பட்டுவந்த வட்டி கடந்த காலாண்டில் மாற்றப்படவில்லை. இந்த முறை அது 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக கூடுவது குறிப்பிடத்தக்கது.

Tap to resize

விவசாயிகளுக்கான கிசான் விகாஸ் பத்திரத்தின் மீதான வட்டியும் 7.2 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், கிசான் விகாஸ் பத்திரம் 120 மாதங்களுக்கு பதிலாக 115 மாதங்களிலேயே முதிர்வடையும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

முதியோருக்கான சேமிப்பு திட்டத்துக்கு 8 சதவீதம் வட்டி உள்ளது. இது வரும் காலாண்டில் 8.2 சதவீதமாகவும் உயர்த்தப்படுகிறது. மாதாந்திர வருவாய் திட்ட வட்டி 7.1 சதவீதத்தில் இருந்து 7.4 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

ஓராண்டு கால டெபாசிட் வட்டி 6.6 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதமாகவும், 2 ஆண்டு கால டெபாசிட் வட்டி 6.8 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாகவும், 3 ஆண்டுகால டெபாசிட் வட்டி 6.9 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும் 5 ஆண்டுகால டெபாசிட் வட்டி 7 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாகவும் மாறுகின்றன.

பொது சேமநல நிதிக்கான வட்டி 7.1 சதவீதமாகவும் சேமிப்பு டெபாசிட் வட்டி 4 சதவீதமாகவும் மாற்றமின்றி தொடர்கின்றன.

Latest Videos

click me!