சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்த போதும் பெட்ரோல் டீசல் விலை குறையவில்லை. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் மட்டுமே ஆதாயம் அடைந்தன.
பெட்ரோல் டீசல் விலை குறையாததற்கு போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தது. சுமார் 227-வது நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த மாற்றமின்றி ஒரே விலையில் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ. 2 முதல் ரூ. 4 வரை விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான காரணமும் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி எக்ஸ் தளத்தில்: பெட்ரோல், டீசல் பங்குகளின் டீலர்களுக்கான கமிஷன் தொகையை அதிகரிப்பதாக ஹிந்துஸ்தான், பாரத், இந்தியன் ஆயில் பெட்ரோலிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதை வரவேற்பதாகவும் இந்த முடிவால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறையும் சூழல் உருவாகியுள்ளது.
சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் இந்த விலை குறைப்பு பின்னர் அமல்படுத்தப்படும் என்றார். மத்திய அமைச்சர் பெட்ரோல் டீசல் விலை குறையும் என அறிவித்துள்ளது வாகன ஓட்டிகள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது.