
ஓய்வு பெற்றவுடன், எந்த வருமான ஆதாரமும் உங்களிடம் இல்லையென்றால், நீங்கள் நிதிச் சிக்கல்களில் சிக்கிக் கொள்ளலாம். தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) இதுபோன்ற பிரச்சனையைத் தவிர்க்க உதவுகிறது.
தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) முதலில் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) கீழ் உள்ள அரசு ஊழியர்களுக்காக 2004 இல் தொடங்கப்பட்டது. 2009ஆம் ஆண்டில், தனியார் துறை மற்றும் அமைப்புசாரா வேலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
இத்திட்டம் ஓய்வுக்குப் பிறகு நிலையான ஓய்வூதியத்தை வழங்குகிறது. பணியாளர்களுக்கு நிதி சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இதற்காக, பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும் ஆண்டு முழுவதும் மாதாந்திர அல்லது வருடாந்திர அடிப்படையில் முதலீடு செய்ய வேண்டும். இத்திட்டத்தில் முன்கூட்டியே சேர்ந்தால், அவ்வளவுக்கு பணி ஓய்வுக் கால கார்பஸ் பெருகும்.
தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கீழ் டயர் I, டயர் II என இரண்டு வகையான கணக்குகள் உள்ளன. நீங்கள் டயர் I கணக்கு வைத்திருக்கும்போது மட்டுமே டயர் II கணக்கு திறக்க அனுமதிக்கப்படுகிறது. இரண்டு கணக்குகளும் வரிச் சலுகைகள், பணத்தைத் எடுப்பதற்கான விதிகள் வேறுபடுகின்றன.
இரண்டு வகையான NPS கணக்குகளை ஒப்பிடும்போது, டயர்-I கணக்கு லாக்-இன் காலத்தைக் கொண்டுள்ளது. அது கணக்குதாரரின் ஓய்வு வரை நீடிக்கும். அதேசமயம் டயர்-II கணக்கு லாக்-இன் காலம் இல்லாமல் நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. எந்த நேரத்திலும் பணம் எடுக்க அனுமதிக்கிறது.
டயர்-I கணக்குகளுக்கு, குறைந்தபட்ச தொடக்க டெபாசிட் ரூ. 500, டயர்-II கணக்குகளுக்கு குறைந்தபட்ச தொடக்க டெபாசிட் ரூ.1,000 தேவைப்படும். மேலும், டயர்-I கணக்கில் ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் குறைந்தபட்ச இருப்புத்தொகை 1,000 ரூபாய் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அதேசமயம் டயர்-II கணக்குகளுக்கு அத்தகைய நிபந்தனை இல்லை.
NPS கணக்கில் நீங்கள் 75 வயது வரை முதலீடு செய்யலாம். 75 வயதுக்குப் பிறகும் NPS கணக்கில் தொடர்ந்து முதலீடு செய்து, வரிச் சலுகைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்
NPS முதலீட்டிற்கு உச்ச வரம்பு எதுவும் இல்லை. ஆனால் வரிச் சேமிப்பை மனதில் கொண்டு NPS திட்டத்தில் சேர்வதாக இருந்தால்,பிரிவு 80C (ரூ. 1.5 லட்சம்) மற்றும் துணைப் பிரிவு 80CCD 1B) (ரூ. 50,000) ஆகியவற்றின் கீழ் ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வரை வரிச் சலுகையைப் பெறலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தற்போது, நீங்கள் ஓய்வு பெற்றவுடன் மொத்த கார்பஸில் 60% வரை திரும்பப் பெறலாம். மீதமுள்ள 40% கட்டாயமாக வருடாந்திரத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும். இருப்பினும், புதிய NPS வழிகாட்டுதல்களின்படி, மொத்த கார்ப்பஸ் ரூ. 5 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், வருடாந்திரத் திட்டத்தைத் தவிர்த்து முழுத் தொகையையும் திரும்பப் பெற முடியும்.
தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் ஈட்டும் மொத்தத் தொகைக்கும் வருமான வரி கிடையாது. காரணம் NPS திட்டம் ஒரு EEE திட்டம் ஆகும். அதாவது, முதலீடு, வருமானம் மற்றும் முதிர்வுத்தொகை மூன்றிலும் வரி விதிக்கப்படுவதில்லை. எனவே இது வரி சேமிப்புக்கு சிறந்தத் திட்டமாகவும் பிரபலாகியுள்ளது.
NPS மூலம் 1 லட்சம் பென்ஷன் பெற, மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? எடுத்துக்காட்டாக, நீங்கள் 20 வயதில் NPS இல் முதலீடு செய்யத் தொடங்கி, 60 வயதில் ஓய்வு பெற்ற பிறகு, மாதந்தோறும் ரூ. 1 லட்சம் ஓய்வூதியத்தைப் பெற வேண்டும் என்றால் எப்படி முதலீடு செய்யவேண்டும் என்று பார்க்கலாம்.
எஸ்பிஐ பென்ஷன் ஃபண்ட்ஸ் கால்குலேட்டரின்படி, NPS இல் 20 வயதில் இருந்து மாதம் ஒன்றுக்கு ரூ.7,850 முதலீடு செய்யத் தொடங்கி, 60 வயதில் ஓய்வு பெறும் வரை முதலீடு செய்ய வேண்டும். 40 வருடங்களில் மொத்த முதலீட்டுத் தொகை ரூ.37,68,000 ஆக இருக்கும். இந்த முதலீட்டிற்கு சுமார் 10% வருவாய் கிடைப்பதாக வைத்துக்கொண்டால், வட்டி மூலம் ரூ.4,62,89,792 கிடைக்கும். இதன்படி, மொத்த ஓய்வூதியத் தொகையாக ரூ. 5,00,57,792 சேர்ந்துவிடும்.
இந்த மொத்த கார்பஸ் ரூ. 5 கோடியில், நீங்கள் 40% (ரூ. 2,00,23,117) வருடாந்திர திட்டத்தில் முதலீடு செய்து, மீதி 60% (ரூ. 3,00,34,675 ) தொகையை மொத்தமாக எடுத்துக்கொள்ளலாம். வருடாந்திரத் திட்டத்தில் முதலீடு செய்த தொகைக்கு 6% வருமானம் கிடைத்தால், மாத ஓய்வூதியம் ரூ.1,00,116 வாழ்நாள் முழுக்க கிடைக்கும். எனவே, 40 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூ.7,850 முதலீடு செய்வதன் மூலம், 60 வயதை எட்டிய பிறகு மாத ஓய்வூதியமாக ரூ.1 லட்சத்தை எதிர்பார்க்கலாம்.