Gas Cylinder Rules: ஆகஸ்ட் 1 முதல் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விதிகளில் சில முக்கிய மாற்றங்கள் வரப்போகின்றன. மானியம் குறைப்பு, ஸ்விக்கி டெலிவரி, விலை மாற்றம் என சாமானிய மக்களை பாதிக்கக்கூடிய இந்த புதிய அப்டேட்கள் பற்றி முழுமையாக இங்கே பார்க்கலாம்.
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில், எண்ணெய் நிறுவனங்களும் மத்திய அரசும் கேஸ் சிலிண்டர் தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களையும், விலை மாற்றங்களையும் அறிவிப்பது வழக்கம். ஆனால், இந்த முறை ஆகஸ்ட் மாதம் வரும் மாற்றங்கள், சாமானிய மக்கள், குறிப்பாக இல்லத்தரசிகள், சிறு வியாபாரிகள், மாணவர்கள் வாழ்க்கையில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றன. சமையல் கேஸ் (LPG) தொடங்கி, பைப்லைன் கேஸ் (PNG) வரை மொத்தம் 6 முக்கிய மாற்றங்கள் வந்துள்ளன.
நிமிடங்களில் கேஸ் இணைப்பு.. ஸ்விக்கி மூலம் டெலிவரி.
இதுவரை புதிய கேஸ் இணைப்பு வாங்க வேண்டுமென்றால், ஏஜென்சிகளுக்கு அலைந்து பல நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், பாரத் பெட்ரோலியம் (BPCL) 'பாரத் லைட் ஜிப்' என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தாமதமின்றி உடனடியாக புதிய இணைப்பு பெறலாம். மும்பையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவை, ஆகஸ்ட் 15-க்குள் நாட்டில் 24 மாநிலங்களில் உள்ள 100 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது.
மறுபுறம், ஹெச்பிசிஎல் (HPCL) நிறுவனம் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் (Swiggy Instamart) உடன் இணைந்துள்ளது. இதன் மூலம் மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்வது போல, சில நிமிடங்களில் கேஸ் சிலிண்டரை வீட்டிற்கு வரவழைக்கலாம். பேச்சிலர்கள், சிறு குடும்பங்கள், மாணவர்களைக் கருத்தில் கொண்டு 10 கிலோ 'ஹெச்பி நவ்யா' காம்பாக்ட் சிலிண்டர்கள் மற்றும் 5 கிலோ மினி சிலிண்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சேவை தற்போது பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ளது, விரைவில் மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
ஏழை மக்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்த 'பிரதான் மந்திரி உஜ்வலா யோஜனா' (PMUY) மானிய விதிகளில் அரசு ஒரு முக்கிய மாற்றத்தைச் செய்துள்ளது. அரசுக்கு மானியச் சுமை அதிகரிப்பதால் இந்தக் கடுமையான முடிவை எடுத்துள்ளனர். முன்பு, உஜ்வலா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 9 சிலிண்டர்கள் வரை மானியம் வழங்கப்பட்டது. ஆனால் புதிய விதிகளின்படி, இனி ஆண்டுக்கு 4 சிலிண்டர்களுக்கு மட்டுமே மானியம் பொருந்தும். அந்த வரம்பை மீறினால், சாதாரண விலை கொடுத்துதான் சிலிண்டர்களை வாங்க வேண்டும்.
ஜூலை மாதத்தில், வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ சாதாரண கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தாமல், பழைய விலையிலேயே தொடர அனுமதித்தது மக்களுக்குச் சற்று ஆறுதல் அளித்தது. ஆனால், ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் சென்டர்கள் நடத்தும் வணிகர்களுக்கு அரசு ஒரு நல்ல செய்தியைச் சொல்லியுள்ளது. கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வந்த 19 கிலோ கமர்ஷியல் கேஸ் சிலிண்டர் விலையை இம்முறை குறைத்துள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளைப் பொறுத்து, கமர்ஷியல் சிலிண்டர் மீது சுமார் ரூ. 170 முதல் ரூ. 182 வரை குறைக்கப்பட்டுள்ளது. இது சிறு வர்த்தகர்களுக்கு நிவாரணம் அளிக்கும். ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் விலை மாற வாய்ப்புள்ளது.
PNG இணைப்பைப் பயன்படுத்தினால் பழைய சிலிண்டர் விதிகள்
நீங்கள் தற்போது வீட்டில் பைப்லைன் கேஸ் (PNG) இணைப்பு வைத்திருக்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கை. PNG இணைப்பு பெற்ற 30 நாட்களுக்குள், உங்கள் பழைய எல்பிஜி சிலிண்டர் இணைப்பை (அது இண்டேன், பாரத் அல்லது ஹெச்பி எதுவாக இருந்தாலும்) ரத்து செய்ய வேண்டும் அல்லது சரண்டர் செய்ய வேண்டும். ஒருவேளை, எதிர்காலத்தில் நீங்கள் PNG வசதி இல்லாத வேறு பகுதிக்கு மாற நேர்ந்தால், பழைய எல்பிஜி இணைப்பை மீண்டும் எளிதாக செயல்படுத்த 'டிரான்ஸ்ஃபர் வவுச்சர்' பெற்றுக்கொள்ளலாம் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
டிஜிட்டல் முன்பதிவு, OTP விநியோகம், ஒப்பந்தக் கால விவரங்கள்
சிலிண்டர் புக்கிங் மற்றும் டெலிவரியில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க, எண்ணெய் நிறுவனங்கள் சில கடுமையான விதிகளை அமல்படுத்துகின்றன.
டிஜிட்டல் புக்கிங் மட்டுமே: இனி கேஸ் ஏஜென்சி அலுவலகங்களுக்கு அலையத் தேவையில்லை. முற்றிலும் ஆன்லைன், டிஜிட்டல் முறையிலேயே புக் செய்ய வேண்டும்.
ஓடிபி கட்டாயம்: டெலிவரி பாய் உங்கள் வீட்டிற்கு சிலிண்டரைக் கொண்டு வரும்போது, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் செக்யூரிட்டி கோடைச் சொன்னால் மட்டுமே டெலிவரி செய்வார்கள். ஓடிபி சொல்லாவிட்டால், டெலிவரியைத் திருப்பி எடுத்துச் செல்வார்கள்.
லாக்-இன் பீரியட்: ஒரு சிலிண்டர் வாங்கிய உடனேயே அடுத்த சிலிண்டரை புக் செய்ய முடியாது. நகரங்களில் வசிப்பவர்கள் 25 நாட்களும், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் 45 நாட்களும் இடைவெளி கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.