Jio Unlimited 5G Data Offer: ரூ.15 ரீசார்ஜ் செய்தால் அன்லிமிடெட் 5G டேட்டா பயன்படுத்த முடியுமா? ஜியோ அறிமுகப்படுத்தியுள்ள ஒரு நாள் டேட்டா வவுச்சரின் சிறப்புகள், யாரெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைப் பார்க்கலாம்.
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, வெறும் ரூ.15-க்கு 5G சேவையை அனுபவிக்கும் வகையில் புதிய டேட்டா வவுச்சரை வழங்கியுள்ளது. ஏற்கனவே 4G சேவையைப் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களையும் 5G நெட்வொர்க்கிற்கு ஈர்க்கும் வகையில் ஜியோ எடுத்துள்ள இந்த அதிரடி முயற்சி, தொலைத்தொடர்பு சந்தையில் கவனம் பெற்றுள்ளது.
குறிப்பாக, குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த ரூ.15 வவுச்சர் பயனுள்ளதாக இருக்கும். அதிக கட்டணம் செலுத்தாமல் அதிவேக 5G இணையத்தை ஒருமுறை பயன்படுத்திப் பார்க்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
25
ரூ.15-க்கு 5G டேட்டா.. என்ன சிறப்பு?
பொதுவாக ஜியோவில் 5G சேவையைப் பயன்படுத்துவதற்கு குறிப்பிட்ட தகுதியுடைய ரீசார்ஜ் திட்டங்கள் தேவைப்படுகின்றன. குறிப்பாக, தினசரி 2GB அல்லது அதற்கு மேல் டேட்டா வழங்கும் திட்டங்களை ரீசார்ஜ் செய்திருப்பவர்களுக்கு அன்லிமிடெட் 5G சேவை கிடைக்கும் வகையில் ஜியோ திட்டங்களை வழங்கி வருகிறது.
ஆனால், குறைந்த டேட்டா வசதி கொண்ட 4G திட்டங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு 5G அனுபவத்தை வழங்கும் நோக்கில் இந்த ரூ.15 டேட்டா வவுச்சர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வவுச்சரின் முக்கியமான சிறப்பு என்னவென்றால், தகுதியான 5G நெட்வொர்க் மற்றும் சாதன வசதி கொண்ட வாடிக்கையாளர்கள் இதன் மூலம் அன்லிமிடெட் 5G டேட்டாவைப் பயன்படுத்த முடியும்.
இதன் செல்லுபடியாகும் காலம் வெறும் ஒரு நாள் மட்டுமே. அதாவது, குறைந்த செலவில் ஒரு நாள் முழுவதும் 5G இணைய அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பாக இந்தத் திட்டம் அமைகிறது.
35
ஏர்டெல், வோடஃபோன் ஐடியாவுக்கு போட்டி!
ஜியோவின் இந்த நடவடிக்கை மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் போட்டியை அதிகரிக்கக்கூடும். குறிப்பாக, பாரதி ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு இதேபோன்ற ரூ.15 விலையில் 5G அனுபவத்தை வழங்கும் திட்டம் இல்லை என்று TelecomTalk செய்தி தெரிவிக்கிறது.
இதன் மூலம் ஏற்கனவே ஜியோவின் 4G சேவையைப் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களை 5G பக்கம் ஈர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோவின் இந்த ரூ.15 திட்டத்திற்குப் பின்னால் ஒரு முக்கியமான வர்த்தக உத்தியும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஜியோவின் நோக்கம் ஒவ்வொரு வாடிக்கையாளரிடமிருந்தும் அதிக வருவாய் பெறுவது மட்டுமல்ல; அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களைத் தனது சேவைக்குள் கொண்டு வருவதும்தான்.
இந்தியாவில் 54 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள ஜியோ, ஒவ்வொரு காலாண்டிலும் அதிக வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.
மேலும், 5G தொழில்நுட்பத்தில் ஒரு யூனிட் டேட்டாவை வழங்குவதற்கான செலவு 4G-ஐ விடக் குறைவாக இருக்கக்கூடும். இதனால் குறைந்த கட்டணத்தில் அதிக டேட்டாவை வழங்கும் வாய்ப்பு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குக் கிடைக்கிறது.
இந்தச் சூழலில், ரூ.15 வவுச்சர் மூலம் அதிகமான 4G வாடிக்கையாளர்களை 5G சேவைக்கு அறிமுகப்படுத்துவது ஜியோவுக்கு நீண்டகால அடிப்படையில் சாதகமாக அமையலாம்.
55
யாரெல்லாம் இந்த ரூ.15 திட்டத்தைப் பயன்படுத்தலாம்?
ஜியோவின் 4G திட்டத்தைப் பயன்படுத்தி வருபவர்கள், 5G வசதி கொண்ட ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் மற்றும் தங்களது பகுதியில் ஜியோ 5G நெட்வொர்க் கிடைப்பவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இருப்பினும், ரீசார்ஜ் செய்வதற்கு முன்பு தங்களது தற்போதைய திட்டம், 5G தகுதி மற்றும் வவுச்சரின் நிபந்தனைகளை MyJio செயலியில் சரிபார்த்துக் கொள்வது நல்லது.
வெறும் ரூ.15 செலவில் 5G அனுபவத்தை வழங்கும் ஜியோவின் இந்த முயற்சி, இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் அடுத்தகட்ட போட்டிக்கு வழிவகுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.