
இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்-அப் சூழலமைப்பில் முதலீட்டாளர்களின் ஆர்வம் பெரும் பாய்ச்சலை கண்டுள்ளது. 2026-ம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் (ஜனவரி-செப்டம்பர்) இத்துறைக்கான நிதி திரட்டல் கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்த முதலீடுகள் நாடு முழுவதும் சமமாகப் பரவாமல் மும்பை, பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் மட்டுமே குவிந்துள்ளது தெரியவந்துள்ளது.
Tracxn நிறுவனம் வெளியிட்டுள்ள 'India AI – 9M 2026' அறிக்கையின்படி, 2026 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்திய ஏ.ஐ நிறுவனங்கள் பங்கு முதலீடுகள் மூலம் 1.6 பில்லியன் டாலர் திரட்டியுள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் திரட்டப்பட்ட 822 மில்லியன் டாலரை விட 96% அதிகமாகும். மேலும், 2024-ம் ஆண்டின் இதே காலத்தில் திரட்டப்பட்ட 616 மில்லியன் டாலருடன் ஒப்பிடுகையில் இது 162% உயர்ந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஏஐ முதலீட்டு மையமாக மும்பை உருவெடுத்துள்ளது; தொடர்ந்து பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய நகரங்கள் உள்ளன. இந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் திரட்டப்பட்ட மொத்த ஏஐ முதலீடுகளில் சுமார் 96% இந்த மூன்று நகரங்களுக்கு மட்டுமே சென்றுள்ளன.
2026-ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் பெங்களூருவைப் பின்னுக்குத் தள்ளி, ஏஐ முதலீடுகளுக்கான மிகப்பெரிய இடமாக மும்பை உருவெடுத்துள்ளது. மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட ஏ.ஐ நிறுவனங்கள் இக்காலகட்டத்தில் 765 மில்லியன் டாலர் நிதி திரட்டி உள்ளன. இது நாட்டின் மொத்த ஏஐ முதலீட்டில் 48% ஆகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் மும்பை வெறும் 15.7 மில்லியன் டாலர் (நாட்டின் மொத்த முதலீட்டில் 2%) மட்டுமே திரட்டியிருந்த நிலையில், தற்போது அசுர வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2 மெகா முதலீட்டு ஒப்பந்தங்கள் மும்பையின் இந்த ஏற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தன.
மும்பையைச் சேர்ந்த ஏஐ கிளவுட் நிறுவனமான நெய்சா (Neysa), பிப்ரவரி மாதம் நடைபெற்ற Series B சுற்றில் 600 மில்லியன் டாலர் திரட்டியது. இதுவே இக்காலகட்டத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஏஐ முதலீட்டு ஒப்பந்தமாகும்; இந்தியாவின் மொத்த ஏஐ நிதியில் இந்த ஒரு ஒப்பந்தம் மட்டும் சுமார் 37% பங்கைக் கொண்டுள்ளது. மற்றொரு பெரிய ஒப்பந்தமாக, யோட்டா (Yotta) நிறுவனம் ஜூலை மாதம் நடைபெற்ற Series D சுற்றில் 150 மில்லியன் டாலர் திரட்டியது.
இந்தியாவின் ஸ்டார்ட்-அப் தலைநகரமாக அறியப்படும் பெங்களூரு, 711 மில்லியன் டாலர் ஏஐ முதலீடுகளுடன் 2-ம் இடத்தைப் பிடித்துள்ளது. நாட்டின் மொத்த முதலீட்டில் பெங்களூருவின் பங்கு 44% ஆக உள்ளது (2025 முதல் 9 மாதங்களில் இது 54% ஆக இருந்தது). பெங்களூருவின் இந்த வளர்ச்சிக்குப் பல பெரிய ஒப்பந்தங்கள் கைகொடுத்தன. ஜெனரேட்டிவ் ஏஐ ஸ்டார்ட்-அப் நிறுவனமான சர்வம் (Sarvam), ஜூன் மாதம் Series B சுற்றில் 255 மில்லியன் டாலரும், ஆகஸ்ட் மாதம் மேலும் 90.4 மில்லியன் டாலரும் திரட்டியது.
எமர்ஜென்ட் (Emergent) நிறுவனமும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்த மற்றொரு முக்கிய நிறுவனமாகும். 75.5 மில்லியன் டாலர் முதலீடுகளுடன் சென்னை 3-ம் இடத்தைப் பிடித்துள்ளது. இது நாட்டின் மொத்த முதலீட்டில் சுமார் 5% ஆகும். இதில் பெரும்பகுதி ஃப்ரீஹேண்ட் (Freehand) நிறுவனத்திற்கு சென்றுள்ளது; அந்நிறுவனம் Series B சுற்றில் 75 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது.
இந்திய ஏஐ நிறுவனங்கள் திரட்டிய மொத்தத் தொகை கடுமையாக உயர்ந்திருந்தாலும், நிதி திரட்டல் சுற்றுகளின் (Funding Rounds) எண்ணிக்கை எதிர் திசையில் குறைந்துள்ளது. 2026 முதல் 9 மாதங்களில் இத்துறையில் 87 நிதி திரட்டல் சுற்றுகள் மட்டுமே பதிவாகியுள்ளன; இது கடந்த ஆண்டின் 149 சுற்றுகளை விட 42% குறைவாகும். அதேசமயம், சராசரி ஒப்பந்த மதிப்பு (Average Deal Size) 5.5 மில்லியன் டாலரில் இருந்து 18.5 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. முதலீட்டாளர்கள் பல நிறுவனங்களில் சிறிய தொகையைப் பிரித்து முதலீடு செய்வதற்குப் பதிலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சில நிறுவனங்களில் பெரிய தொகையை முதலீடு செய்வதை இது காட்டுகிறது.
குறிப்பாக, மிகப்பெரிய 10 முதலீட்டு ஒப்பந்தங்கள் மட்டுமே இணைந்து 1.5 பில்லியன் டாலர் (மொத்த நிதியில் 90%) திரட்டின. ஆரம்பகட்ட முதலீடுகள் பிரிவில் முதலீடுகள் 191% உயர்ந்து கடந்த ஆண்டின் 434 மில்லியன் டாலரிலிருந்து 1.3 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. மொத்த நிதியில் 78% இப்பிரிவிற்கே சென்றுள்ளது (2025-இல் இது 53% ஆக இருந்தது). பிற்கட்ட முதலீடுகள் (Late-stage) 4% மிதமான வளர்ச்சி உடன் 280 மில்லியன் டாலராக உள்ளது. விதை முதலீடுகள் (Seed-stage) 42% சரிந்து 69.2 மில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
இந்த முதலீட்டு வேகத்தால், 2026 முதல் ஒன்பது மாதங்களில் இந்தியாவில் மூன்று புதிய ஏஐ யூனிகார்ன் (1 பில்லியன் டாலர் மதிப்பீட்டைத் தாண்டிய) நிறுவனங்கள் உருவாகியுள்ளன. நெய்சா (Neysa), சர்வம் (Sarvam) மற்றும் எமர்ஜென்ட் (Emergent) ஆகியவை இந்த மைல்கல்லை எட்டியுள்ளன (கடந்த ஆண்டு இதே காலத்தில் ஒரு நிறுவனம் மட்டுமே உருவாகியிருந்தது).
இருப்பினும், இந்திய ஏஐ நிறுவனங்களில் முதலீடு செய்த முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 34% குறைந்து 111 ஆக உள்ளது (கடந்த ஆண்டு 169). முதல்முறை முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் 39% சரிந்து 43 ஆகக் குறைந்துள்ளது. ஆரம்பகட்ட முதலீட்டாளர்களில் Peak XV Partners 3 முதலீடுகளுடன் முதலிடத்திலும், Prosus மற்றும் Khosla Ventures தலா 2 முதலீடுகளுடன் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. விதை முதலீடுகளில் Antler, IvyCap Ventures மற்றும் Finvolve முன்னிலையில் உள்ளன. நிறுவனங்கள் கையகப்படுத்தல் (Acquisitions) பிரிவில், 2025-இல் 5 ஆக இருந்த எண்ணிக்கை 2026-இல் 6 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், இக்காலகட்டத்தில் எந்த ஏஐ நிறுவனமும் பங்குச் சந்தையில் (Public Listings / IPO) பட்டியலிடப்படவில்லை.
உள்நாட்டு முதலீடுகள் கடுமையாக உயர்ந்தபோதிலும், உலகளாவிய ஏஐ நிதி திரட்டலில் இந்தியாவின் பங்கு ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. 2026 முதல் ஒன்பது மாதங்களில் உலக அளவில் ஏஐ நிறுவனங்கள் 383.5 பில்லியன் டாலர் திரட்டியுள்ள நிலையில், இந்தியாவின் 1.6 பில்லியன் டாலர் பங்களிப்பு உலக மொத்தத்தில் வெறும் 0.4% மட்டுமே. இதன் மூலம் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது.
இந்தத் தரவுகள் இந்திய ஏஐ ஸ்டார்ட்-அப்கள் மீது, குறிப்பாக ஆரம்பகட்ட நிறுவனங்கள் மீது முதலீட்டாளர்களுக்கு உள்ள ஆர்வத்தைக் காட்டுகின்றன. இருப்பினும், ஒரு சில நிறுவனங்கள் மற்றும் நகரங்களில் மட்டுமே நிதி குவிந்திருப்பதும், ஒப்பந்தங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதும், இந்த முதலீட்டு எழுச்சி இன்னும் பரவலான ஸ்டார்ட்-அப் சூழலமைப்பை முழுமையாகச் சென்றடையவில்லை என்பதையே உணர்த்துகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.