தங்கத்தில் முதலீடு
நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில் எதிர்கால சேமிப்பிற்காக தங்கத்தை வாங்கி குவிப்பார்கள். இதன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 15ஆயிரம் ரூபாய் இருந்த ஒரு சவரன் தங்கம் விலையானது 50ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக கடந்த 31ம் தேதி தீபாவளியன்று ஒரு சவரன் 59,640 ரூபாய் என்ற அதிகப்பட்ச உச்சத்தை பதிவு செய்தது. இதனையடுத்து அடுத்த சில ஆண்டுகளில் ஒரு சவரன் தங்க நகை 2 லட்சம் ரூபாயை தொடும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர்.
Gold price today
திடீரென குறைந்த தங்கம் விலை
இதனால் தற்போதே தங்கத்தை அதிகளவில் வாங்க தங்க நகைக்கடைகளில் குவிந்தனர். இந்தநிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் சந்தை நிலவரங்களைத் தலைகீழாக மாற்றியுள்ளன. உலகளவில் பல துறைகளில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தநிலையில் தங்கத்தின் விலையானது சரசரவென குறைந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 65ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாயை தங்கம் எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தங்கத்தின் விலை சரிவை சந்தித்துள்ளது. .
Gold price chennai
ஒரே வாரத்தில் 3ஆயிரம் குறைவு
அந்த வகையில் தங்கம் நேற்றைய தினம் ஒரு கிராம் 7,220 ரூபாய்க்கு விற்பனையானது. இதே போல 8 கிராம் கொண்ட ஒரு சவரன் தங்கத்தில் 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்க நகை 57 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில் தங்கத்தின் விலையானது இன்று மீண்டும் சரிந்துள்ளது.
அந்த வகையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,080 ரூபாய் குறைந்துள்ளது. அதன் படி ஒரு சவரன் 56,680-க்கும் ஒரு கிராம் 7,085 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி கிராமுக்கு ஒன்றுக்கு 2 ரூபாய் குறைந்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே வாரத்தில் தங்கத்தின் விலை 3ஆயிரம் ரூபாய் வரை குறைந்திருப்பது நடுத்தர வர்க்க மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.