Savings Account Limit
சேமிப்புக் கணக்கு என்பது பல சேவைகளைப் பெறுவதற்கும், அன்றாடத் தேவைகளுக்காக எடுத்து செலவு செய்யவும் முக்கியமாகப் பயன்படுகிறது. பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதைத் தவிர, வட்டியும் கிடைக்கிறது. ஆனால், சேமித்த மொத்த பணத்தையும் சேமிப்புக் கணக்கில் போடாமல், வெவ்வேறு முதலீடுகளைச் செய்வது வருமானத்தை அதிகரிக்கும் வழியாகும்.
Savings Account Deposit
சேமிப்பு மற்றும் செலவினங்களுக்கு இடையே சரியான சமநிலையைப் பேணுவதன் மூலம் எதிர்காலத்தில் பணச் சிக்கல் ஏற்படுத்துவதைத் தவிர்க்கலாம். அந்த வகையில் சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது மிகவும் முக்கியம். இதை தனிப்பட்ட வாழ்க்கைச் சூழல், நிதி சார்ந்த இலக்குகள் மற்றும் பொருளாதார நிலைமை ஆகியவற்றின் அடிப்படையில் முடிவு செய்யலாம்.
Emergency Fund
சேமிப்புக் கணக்கின் முதன்மை நோக்கங்களில் ஒன்று அவசரகால நிதியை நிறுவுவதாகும். உடனடியாகக் கிடைக்கும் வகையில் மூன்று முதல் ஆறு மாத செலவுகளுக்குப் போதுமான அளவு நிதியை சேமிப்புக் கணக்கில் வைத்துக்கொள்ளலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மருத்துவச் செலவுகள், வேலை இழப்பு அல்லது வீட்டில் ஏற்படும் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க இந்தத் தொகை பயன்படும்.
Short-term plans
குறுகிய கால செலவுத் திட்டங்களை முன்னிட்டு சேமிப்புக் கணக்கில் பணம் வைத்திருக்கலாம். அதாவது, விடுமுறை நாள் பயணச் செலவு, வீட்டுக் கடனுக்கான தவணை, பெரிய பொருள் ஒன்றை வாங்குவதல் போன்ற காரணங்களுக்காக சேமிப்புக் கணக்கில் போதுமான அளவு பணத்தை வைத்திருக்கலாம். இதுபோன்ற செலவுகளுக்கு எவ்வளவு ஒதுக்க வேண்டும் என்பதைக் கணித்து அந்த அளவுக்கு மட்டும் சேமிப்புக் கணக்கில் இருப்பு வைத்துக்கொள்ளலாம்.
Expenses
சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும் என்பதை மாதாந்திர செலவுகள் மற்றும் பணப்புழக்கத்தைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். வீட்டு வாடகை, மளிகை உள்ளிட்ட பொருட்கள் வாங்குவது, காப்பீட்டு பிரீமியம் போன்ற அத்தியாவசிய செலவுகளை ஈடுகட்டும் அளவுக்கு சேமிப்புக் கணக்கில் ஒரு தொகையை வைத்திருப்பது சரியாக இருக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் வழக்கமான இந்தச் செலவுகளுக்குப் பணம் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
Investments
சேமிப்புக் கணக்கு பாதுகாப்பு மற்றும் எளிமையாக அணுகும் வசதியை வழங்குகிறது. ஆனால், அதே வேளையில், அதிகப்படியான நிதியை அதில் வைத்திருப்பதற்கு வலுவான காரணம் இருக்க வேண்டும். சேமிப்புக் கணக்கில் கிடைக்கும் வட்டியானது பிக்ஸட் டெபாசிட், மியூச்சுவல் ஃபண்டு உள்ளிட்ட பிற முதலீடுகளில் கிடைக்கும் வருமானத்தை விட குறைவாகவே இருக்கும். நிதி பாதுகாப்பு மற்றும் வருமாய் வாய்ப்புகளை சமநிலையில் நிர்வகிக்கும் வகையில் பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
Inflation
பணவீக்கம் காரணமாக காலப்போக்கில் பணத்தின் மதிப்பு குறைகிறது. சேமிப்புக் கணக்கில் பெறப்படும் வட்டி பணவீக்கத்துடன் ஒத்துப்போகாமல் இருக்கலாம். இது உங்கள் சேமிப்பின் உண்மையான மதிப்பு குறைவதற்கு வழிவகுக்கும். இதற்காகத்தான் குறைந்த ரிஸ்க் உள்ள முதலீடுகள், மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற அதிக வருமானத்திற்கான சாத்தியத்தை வழங்கும் வழிகளில் முதலீடு செய்ய வேண்டும்.
For loans
சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் போது, வருமானம், செலவுகள், கடன்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் போன்றவற்றை மதிப்பிட வேண்டியது அவசியம். அதிக வட்டியில் வாங்கிய கடன்கள் இருந்தால், சேமிப்புக் கணக்கில் கணிசமான தொகையை ஒதுக்கி கடன்களைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை கொடுக்கலாம். கடனில் இருந்து விடுபட்டவுடன், தொடர்ந்து அந்த நிதியை அதிக லாபம் அளிக்கும் சாத்தியமுள்ள திட்டத்தில் முதலீடு செய்யலாம்.