Govt Scheme: தனியார் துறையில் முதன்முறை வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு அரசு ரூ.15,000 உதவித்தொகையாக வழங்குகிறது. இந்த உதவித்தொகை யாருக்கு கிடைக்கும்? அதற்கான நிபந்தனைகள் என்ன? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
மத்திய அரசின் 2024-2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட் 1, 2025 முதல் நடைமுறைக்கு வந்த ஒரு முக்கிய திட்டம் தான் ‘பிரதம மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா' (PMVBRY). இந்தத் திட்டமானது நாட்டில் முதல்முறையாக வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு சமூக பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டம் குறித்த முழு விவரங்கள், தகுதிகள், நிபந்தனைகள், விண்ணப்பிக்கும் முறை ஆகியவை குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தத் திட்டம் கொண்டு வந்ததற்கான முக்கிய நோக்கமே புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது தான். இந்த அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 3.5 கோடிக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது. முதன்முறையாக வேலைக்கு சேரும் பணியாளர்கள் மற்றும் புதிய வேலைகளை உருவாக்கும் நிறுவனங்கள் என இரு தரப்பிற்கும் நிதியுதவி மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்குகிறது. இந்த திட்டம் 1 ஆகஸ்ட் 2025 முதல் 31 ஜூலை 2027 வரை உருவாக்கப்படும் புதிய வேலைவாய்ப்புகள் அனைத்திற்கும் பொருந்தும்.
முதல்முறையாக வேலைவாய்ப்பில் இணையும் இளைஞர்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தும். விண்ணப்பதாரர் இதற்கு முன்பு EPFO அல்லது அது சார்ந்த எந்தவித வருங்கால பைப்பு நிதி கணக்கிலும் பங்களிப்பு செய்யாத முதல் முறையாக வேலைக்கு சேரும் நபராக இருக்க வேண்டும். பணியாளரின் மாதாந்திர மொத்த சம்பளம் ஒரு லட்சம் மற்றும் அதற்கு குறைவாக இருக்க வேண்டும். பணியாளர் சேரும் நிறுவனம் EPFO நிறுவனத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். பணியாளரின் ஆதார் கார்டு, வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
தகுதியுள்ள புதிய பணியாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு இணையான தொகை (அதிகபட்சமாக 15 ஆயிரம் வரை) ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இந்த பணம் நேரடியாக பணியாளரின் வங்கி கணக்கிற்கு இரண்டு தவணைகளாக வழங்கப்படும். முதல் தவணை ஆறு மாத கால பணியை வெற்றிகரமாக முடித்தப் பின்னரும், இரண்டாவது தவணை 12 மாத கால பணியை முடித்தப் பின்னரும் வழங்கப்படும். இதற்கு EPFO வழங்கும் எளிய நிதிசார் அறிவுத்திறன் படிப்பை ஊழியர் முடித்திருக்க வேண்டும்.
புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி, ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ளும் நிறுவனங்களுக்கும் இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதற்கான தகுதிகள் - பதிவு செய்யப்பட்டு நடப்பில் உள்ள நிறுவனமாக இருக்க வேண்டும். ஆகஸ்ட் 1, 2025 முதல் ஜூலை 31, 2027க்குள் நிறுவனங்கள் கூடுதல் பணியாளர்களை வேலைக்கு எடுத்திருக்க வேண்டும். அதாவது ஏற்கனவே இருக்கும் பணியாளர்களின் எண்ணிக்கை விட கூடுதலாக புதிய வேலைவாய்ப்பை உருவாக்கி இருக்க வேண்டும். ஊழியர்களுக்கான மாதாந்திர PF பங்களிப்பு விவரங்களை நிறுவனம் முறையாக செலுத்தி இருக்க வேண்டும்.
கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு தகுதி வாய்ந்த ஒவ்வொரு புதிய ஊழியருக்கும், மாதம் ரூ.3,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த ஊக்கத்தொகை இரண்டு ஆண்டுகள் வரை நிறுவனங்களுக்கு வழங்கப்படும். உற்பத்தித் துறையைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு இது கூடுதலாக இரண்டு ஆண்டுகள் அதாவது மொத்தம் நான்கு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும்.
பணியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த சலுகைகளை பெறுவதற்கு பெரிய அளவில் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியதில்லை. இந்த நடைமுறைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. ஒரு புதிய ஊழியர் நிறுவனத்தில் சேரும்பொழுது அவருக்கான புதிய UAN எண் உருவாக்கப்படும். அந்த எண் ஆதார் உடன் இணைக்கப்படும் பொழுது அவர் முதன்முறை பணியாளர் என்பது சிஸ்டம் மூலம் தாமாகவே சரிபார்க்கப்பட்டு தகுதி நிர்ணயிக்கப்படும். நிறுவனங்கள் இதற்கென பிரத்தியேகமாக தொடங்கப்பட்டுள்ள அரசு இணையதளமான அல்லது EPFO போர்ட்டல் மூலம் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். புதிய ஊழியர்கள் UMANG ஆப்பில் உள்ள Face Authentication Technology (FAT) மூலமாக தங்களின் UAN எண்ணை எளிதாக உருவாக்கிக் கொள்ள முடியும்.
முக்கிய குறிப்பு
ஒரு பணியாளர் 12 மாதங்களுக்குள் அந்த வேலையை விட்டுவிட்டு தன்னிச்சையாக நின்றாலோ அல்லது நிறுவனம் மூடப்பட்டாலோ அந்த பணியாளர் அல்லது நிறுவனத்திற்கான ஊக்கத்தொகை நிறுத்தப்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மிகச்சிறந்த தற்காலிகத் திட்டம் இதுவாகும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.