தங்கம் விலை ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.?
தங்கத்தின் மீதான ஈர்ப்பு இந்திய மக்களிடம் எப்போதும் குறைந்ததில்லை, அந்த வகையில் திருமண நிகழ்வுகள் விஷேச காலங்களில் அதிகளவில் தங்க ஆபரணங்களை அணிய மக்கள் விரும்புவார்கள். மேலும் தங்களது பெண் குழந்தைகளின் திருமண சேமிப்பாகவும் அதிகளவு தங்கத்தை வாங்கி வைப்பார்கள். இந்த நிலையில் தங்கத்தின் விலையானது வரலாறு காணாத வகையில் உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு ஒரு சவரன் 18ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை 2025ஆம் ஆண்டில் 60ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது.
உச்சத்தை தொட்ட தங்கம் விலை
வரலாறு காணாத வகையில் உயர்வை சந்தித்துள்ள தங்கத்தின் விலையால் நடுத்தர வர்க்க மக்கள் தங்கத்தை வாங்க முடியாத நிலை உருவாகியுள்ளது. அந்த வகையில் சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தான் தங்கம் விலையானது தினமும் ஏறி இறங்கி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி ஒரு சவரன் ரூ.59,640க்கு விற்பனையானது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் தங்கத்தின் விலையானது அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை தொடர்ந்து 4ஆயிரம் ரூபாய் குறைந்தது. எனவே இது தான் நல்ல சான்ஸ் என மக்கள் தங்கத்தை வாங்க தொடங்கினர்.
60ஆயிரத்தை கடந்த தங்கம் விலை
அதற்கு ஏற்றார் போல அடுத்த 2 மாதங்களில் மீண்டும் தங்கத்தின் விலை 60ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த ஜனவரி 22ஆம் தேதி வரலாற்றில் முதல் முறையாக சவரனுக்கு ரூ.60,000 என்ற விலையைத் தாண்டியது.மேலும் வரும் நாட்களில் தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயரும் என கணிக்கப்பட்டது. இந்தநிலையில் இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்து வருவதை தொடர்ந்து அதன் பாதிப்பு தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
திடீரென குறைந்த தங்கம் விலை
இதனால் தங்கத்தின் விலையானது கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்தது. அதன் படி வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை சவரனுக்கு 120 ரூபாயும், நேற்று 240 ரூபாய் என ஒட்டுமொத்தமாக 360 ரூபாய் குறைந்திருந்தது. அதன் படி ஒரு கிராம் 7ஆயிரத்து 510 ரூபாய்க்கும், சவரன் 60ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் விலை
இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது கிடு கிடுவென அதிகரித்துள்ளது. அந்த வகையில் கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து 7,595 ரூபாய்க்கும், சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து 60ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனையாகிறது.இதனால் தை மாதத்தில் திருமண நிகழ்விற்காக தங்கத்தை வாங்க காத்திருந்த மக்கள் அதிர்சி அடைந்துள்ளது.