
மக்கள் அவசரப் பணத்தேவை ஏற்படும்போது தங்க நகைகளை அடகு வைக்கிறார்கள். அப்போது முன்னெச்சரிக்கையுடன் இருக்காவிட்டால், பின்னால் சில சிரமங்கள் ஏற்படும். கொஞ்சம் கவனமாக இருந்தால் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதோடு நல்ல லாபத்தையும் பெறலாம்.
வங்கிகள் மட்டுமின்றி பல தனியார் நிறுவனங்களும் தங்க நகைகளை அடகு வைத்து பணம் தருவதாக கூறுகின்றன. இருப்பினும், தனியார் நிதி நிறுவனங்களில் ஒருவர் கவனமாக இருக்க வேண்டும். அதற்கு அரசு அங்கீகாரம் உள்ளதா என்பதைச் சரிபார்ப்பது மிகவும் அவசியம்.
சில தனியார் வங்கிகளும் தங்கத்துக்கு நகைக்கடன் வழங்குகின்றன. இந்த தனியார் வங்கிகளுக்கும் அரசின் அங்கீகாரம் உள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற தனியார் வங்கியில் தங்க நகைகளை அடகு வைத்தால் எதிர்காலத்தில் எந்த பிரச்சனையும் வராது.
தங்க நகைகளை அடகு வைக்கும்போது ஒப்பந்த ஆவணங்களை கவனமாக படிக்கவும். ஒவ்வொரு அம்சத்தையும் புரிந்துகொள்ளுங்கள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக அதிகாரிகளை அழைத்து சந்தேகங்களை நிவர்த்தி செய்யுங்கள்.
அடகு வைக்கும் தங்கம் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே அடகு வைக்க வேண்டும். குறிப்பாக கடன் மீதான வட்டி மற்றும் ஏல நடைமுறை பற்றி விரிவாகக் கேட்டு தெரிந்துகொள்ளவது நல்லது.
சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப வட்டி விகிதங்களும் மாறும். நகைகளை அடகு வைக்கும்போது வட்டி அதிகரிப்பு அல்லது குறைப்பு பற்றிய விவரங்களை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். இது தவிர, மற்ற கட்டணங்கள் எப்படி வசூலிக்கப்படுகின்றன என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். இதன் மூலம் அடகு வைத்த தங்கத்தை எப்போது திரும்பப் பெறலாம் என்பதைப் பற்றிய புரிதல் கிடைக்கும்.
அடகு வைத்த தங்கத்துக்கு காப்பீடு உள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும். ஏனென்றால் ஆபத்து எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. விபத்துக் காப்பீடு உள்ளதா என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். கடன் கொடுக்கும் நிதி நிறுவனம் அல்லது வங்கியின் கட்டிடத்தில் தீ பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளதா என்று அங்குள்ள ஊழியர்களிடம் விசாரிக்க வேண்டும். திருட்டைத் தடுக்க எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும்.
கடன் பெறும்போது வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் இருந்து ரசீது பெற வேண்டும். அவசரத்தில் ரசீதை வாங்க மறந்தால், பெரிய கஷ்டங்கள் ஏற்படக்கூடும். அதைத் தவிர்க்க, உஷாராக தங்கத்தை அடமானத்துக்கான சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுங்கள். அதில் உள்ள விவரங்கள் சரியாக உள்ளதா என்று ஒன்றுக்கு இருமுறை சரிபார்க்கவும்.
ரசீதில் நகைகளின் எண்ணிக்கை, அவற்றின் எடை, அவற்றின் மதிப்பு, கடன் தொகை, வட்டி விகிதம் ஆகிய விவரங்கள் சரியாக உள்ளதா என்றும் சரிபார்க்கவும். ஏதேனும் தவறாகவோ தெளிவில்லாமலோ இருந்தால், உடனடியாக வங்கி அதிகாரிக்குத் தெரிவிக்கவும். வீட்டிற்குச் சென்ற பிறகு, சரிபார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிடக் கூடாது. வாங்கிச் சென்ற பிறகு திரும்பி வந்து, தவறுகள் பற்றிக் கூறினால் அதிகாரிகளுக்கு சந்தேகம் வரலாம். எனவே இந்த விஷயத்தில் மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.
தரம் குறைந்த தங்க நகைகளை அடகு வைப்பது பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதனால் தரமான தங்கத்தை அதாவது 22 காரட் மற்றும் 18 காரட் தங்க நகைகளை அடகு வைப்பது நல்லது. இதன் மூலம் உங்களுக்கு அதிக பணமும் கிடைக்கும். தூய்மையற்ற நகைகளை அடகு வைத்தால், நிறுவனம் சரிபார்த்து அதன் மதிப்பை விட குறைவாகவே கடன் கொடுக்கும்.
தங்க நகைகளை அடகு வைக்கும்போதே, கடனை எப்போது திருப்பி செலுத்துவது என்றும் முடிவு எடுத்துவிடவும். நிபந்தனைகள் சாதகமாக இல்லாத நிலையில், தங்கக் கடனை உங்களால் செலுத்த முடியாவிட்டால், வட்டியை முறையாகச் செலுத்துங்கள். இதன் மூலம் எதிர்காலத்தில் நீங்கள் மீண்டும் கடன் வாங்கும்போது நம்பிக்கையோடு கடன் தருவார்கள். கடனை உரிய காலத்தில் திரும்பச் செலுத்துவதும், தவணைகளைத் தவறாவிடாமல் இருப்பதும் மதிப்புமிக்க வாடிக்கையாளர் என்ற அந்தஸ்தைப் பெற உதவும். வட்டி மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்றால் அடகு வைத்த தங்கத்தை இழக்க நேரிடும்.