தக்காளி, வெங்காயம் சமையலுக்கு எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு பூண்டும் முக்கிய பங்கு வகிக்கிறது. சைவ உணவில் இருந்து அசைவ உணவு வரை சமையலில் ருசியை அதிகரிக்கவும் முக்கிய தேவையாக உள்ளது. குறிப்பாக பிரியாணியில் சுவையை தூக்கி கொடுக்க பூண்டு முக்கிய தேவையாக இருக்கிறது.
அதேபோல் தமிழர்கள் மிக எளிமையாக சமைக்கின்ற ரசத்திலும் கூட 2, 3 பூண்டு பல்களை இடித்து போடுவது வழக்கம். குறிப்பாக பூண்டில் சொல்ல முடியாத அளவுக்கு மருத்துவ குணங்கள் கொட்டி கிடக்கின்றன. இப்படி பல்வேறு பயனுள்ளதாக இருக்கும் பூண்டின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் ரூ.300 முதல் ரூ.350 விற்பனை செய்யப்பட்டு வந்த பூண்டு தற்போது உயர்ந்து 500 முதல் 550 ரூபாய் வரை எட்டியுள்ளது. இதனால் சமையலில் பெரிதும் பயன்படுத்தப்படும் பூண்டின் அளவை இல்லத்தரசிகள் வெகுவாக குறைத்துவிட்டனர். திடீர் பூண்டு விலை உயர்வுக்கு தமிழகத்தில் பெய்த மழை தான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
அதிகளவு மழை பொழிவால் பல இடங்களில் பூண்டு பயிர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். புதிய பூண்டு போதிய மகசூல் இல்லாத காரணத்தில் பூண்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதேபோல அண்டை மாநிலங்களாக கேரளா, கர்நாடக, ஆந்திரா ஆகிய இடங்களில் பூண்டு விவசாயம் பெரிதும் மழை நீரால் சேதமடைந்துள்ளது. இதனால், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்கள் பூண்டு தேவையை நிறைவு செய்வதில் இந்த 2 மாநிலங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
பூண்டின் விலை உயர்ந்து வரும் நிலையில் வெங்காயம் விலையும் ரூ.100 எட்டியுள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வரும் நாட்களில் வெங்காயம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.