சேலம் சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்காக இலவச காய்கறி பதப்படுத்தும் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் காய்கறிகளை பதப்படுத்துதல், மதிப்பூட்டல், மற்றும் பேக்கிங் தொழில்நுட்பங்கள் கற்றுத்தரப்படும்.
இன்றைய காலகட்டத்தில் விவசாயம் என்பது விளைச்சல் மட்டுமல்ல; அதனுடன் இணைந்த மதிப்பூட்டல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாடுகளே விவசாயிகளின் உண்மையான வருமானத்தை தீர்மானிக்கின்றன. குறிப்பாக காய்கறிகளை நேரடியாக சந்தையில் விற்பனை செய்வதில் ஏற்படும் விலை ஏற்றத் தாழ்வுகள், நஷ்டம் போன்ற சிக்கல்களுக்கு மாற்றாக, காய்கறி பதப்படுத்தல் சிறந்த தீர்வாக உருவெடுத்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, விவசாயிகள் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற வழிகாட்டும் நோக்கில் அரசு சார்பில் இலவசமாக நடத்தப்படும் இந்த காய்கறி பதப்படுத்தும் திறன் மேம்பாட்டு பயிற்சி, அவர்களின் வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
26
விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கம்
விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில், காய்கறி பதப்படுத்தல் மற்றும் மதிப்பூட்டல் (Value Addition) குறித்து இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அருகே உள்ள சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் டிசம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
36
இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்
இந்த பயிற்சி குறித்து சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு உணவு பதப்படுத்தல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் நிதி உதவியுடன் இந்த பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பழங்கள் மற்றும் காய்கறிகளை பதப்படுத்துவது, சேமித்தல் முறைகள், பேக்கிங் தொழில்நுட்பம், உலர் காய்கறிகள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள அம்சங்கள் நடைமுறை விளக்கத்துடன் கற்றுத் தரப்பட உள்ளன.
இன்றைய சூழலில் காய்கறிகளை நேரடியாக விற்பனை செய்வதைவிட, அவற்றை பதப்படுத்தி விற்பனை செய்வதன் மூலம் மாதம் ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை வருமானம் ஈட்ட முடியும். இதனை கருத்தில் கொண்டு, இந்த பயிற்சி விவசாயிகள் மட்டுமின்றி, விவசாய குடும்பத்தினரும், சுயதொழில் தொடங்க விரும்புவோருக்கும் மிகுந்த பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
56
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சான்றிதழ் வழங்கப்படும்
பயிற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் அன்று உணவு வழங்கப்படுவதோடு, பயிற்சி முடிவில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சான்றிதழ் வழங்கப்படும். இந்த பயிற்சி முழுவதும் இலவசம் என்பதுடன், சேலம் மாவட்டத்தை சேர்ந்த 50 விவசாயிகள் மட்டும் இதில் பங்கேற்க அனுமதிக்கப்பட உள்ளனர்.
66
விவசாயிகளுக்கு அழைப்பு உடனே வாருங்கள்
ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பெயரை முன்பதிவு செய்ய 90955 13102 என்ற செல்போன் எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ளலாம். குறைந்த இடங்கள் மட்டுமே உள்ளதால், விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.