
ஏ.ஐ தொழில்நுட்பம் மனிதனின் குரல், எழுத்து, உருவம் என அனைத்தையும் தத்ரூபமாக மறு உருவாக்கம் செய்யும் அளவுக்கு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. திரைப்படங்கள், ஷார்ட் பிலிம்ஸ் மற்றும் விளம்பரங்களைத் தயாரிக்க நடிகர்களுக்குப் பல லட்சங்கள் செலவாவதால், தயாரிப்புச் செலவைக் குறைக்கும் நோக்கில் சீனத் தயாரிப்பாளர்கள் ஏ.ஐ நடிகர்களை நோக்கி வேகமாக நகரத் தொடங்கியுள்ளனர்.
இந்தத் தேவையைப் பயன்படுத்தி, சீனாவில் உள்ள சாமானிய மக்கள் தங்களின் முகத்தை (Face Likeness) வணிகப் பயன்பாட்டிற்காகச் சட்டபூர்வமாக வாடகைக்கு அல்லது உரிமம் (License) கொடுத்து, வீட்டிலிருந்தபடியே $7 முதல் $15,000 வரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.600 முதல் ரூ.12 லட்சத்துக்கும் மேல்) வருமானம் ஈட்டி வருகின்றனர். இது ஒருபுறம் புதிய வருமான வாய்ப்பைத் தந்தாலும், மறுபுறம் தீவிர சட்ட மற்றும் தனியுரிமைச் சிக்கல்களை எழுப்பியுள்ளது.
முன்பெல்லாம் திரைப்படக் குழுக்களின் சமூக வலைதளக் குழுக்களில் ரகசியமாக நடைபெற்று வந்த இந்த முக விற்பனை, தற்போது முறையான ஸ்டார்ட்அப் தளங்கள் (Face-licensing Platforms) மூலம் வெளிப்படையான வர்த்தகச் சந்தையாக உருவெடுத்துள்ளது. பயனர்கள் இத்தளங்களில் தங்கள் முகத்தைப் பல்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் & வீடியோக்களாகப் பதிவேற்றுகின்றனர். அடையாளம் சரிபார்க்கப்பட்டதும் அவர்களுக்கான சுயவிவரம் (Profile) உருவாக்கப்படுகிறது.
தங்கள் முகம் எந்த மாதிரியான காட்சிகளில் இடம்பெறலாம் என்பதைப் பயனர்களே தீர்மானிக்கலாம். உதாரணமாக, குடும்பக் கதைகள், காதல் காட்சிகளில் மட்டும் என் முகம் வரலாம்; ஆபாசம், திகில் அல்லது வன்முறைக் காட்சிகளில் இடம்பெறக் கூடாது என நிபந்தனைகளை விதிக்க முடியும். விளம்பரங்கள், கேமிங் அவதாரங்கள் மற்றும் சீனாவில் தற்போது அசுர வளர்ச்சி அடைந்து வரும் மைக்ரோ-டிராமாக்கள் (AI Short Dramas) தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த முகங்களைப் பெற்று ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் உயிர் தருகின்றன.
ஒரு வங்கி ஊழியர் தனது முக உரிமத்தை வெளியிட்ட மூன்றே நாள்களில், விளம்பர நிறுவனம் ஒன்று அவரது முகத்தை 7 முறை பயன்படுத்தியதன் மூலம் அவர் 2,500 யுவான் (சுமார் ரூ.30,000) சம்பாதித்துள்ளார்.
370-க்கும் மேற்பட்ட முகங்களைக் கொண்ட ‘Xinzhua’ என்ற தளத்தில் 500 யுவான் முதல் 6,000 யுவான் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு பெண் பயனர், வில்லி கதாபாத்திரம் மற்றும் மரணக் காட்சிகளில் கூட தனது முகம் நடிக்கலாம் என அனுமதி அளித்துத் தொடர்ந்து வருமானம் ஈட்டி வருகிறார்.
இதுகுறித்து குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த கெலே எனும் பயனர் கூறுகையில், AI எப்படியும் வருங்காலத்தில் என் முகத்தை எனது அனுமதி இல்லாமலேயே திருடத்தான் போகிறது; அதை என்னால் தடுத்து நிறுத்த முடியாது. அதற்குப் பதிலாக யாராவது எனக்குப் பணம் கொடுத்துவிட்டு சட்டபூர்வமாகப் பயன்படுத்திக் கொள்ளட்டுமே என்று தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
ஏ.ஐ துறை அதிவேகமாக வளர்ந்து வந்தாலும், சீன சட்ட வல்லுநர்களும் நுகர்வோர் அமைப்புகளும் இதுகுறித்துக் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர். பல தளங்கள் பயனர்களின் குரல், பெயர் மற்றும் எதிர்கால உரிமைகளை நிரந்தரமாகப் பறிக்கும் வகையில் ஒருதலைப்பட்சமாக ஒப்பந்தங்களை வடிவமைக்கின்றன.
பயனர் ஒருவர் தனது முக உரிமத்தை முன்கூட்டியே ரத்து செய்ய நினைத்தால், 50,000 யுவான் (ரூ.6 லட்சம்) வரை அபராதம் செலுத்த வேண்டும் என்ற கடுமையான விதிகள் திணிக்கப்படுகின்றன. 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் முகங்களைப் பயன்படுத்த பெற்றோரின் வெளிப்படையான ஒப்புதல் அவசியமாகும். எனினும், 16 முதல் 17 வயதுடைய பதின்ம வயதினர் இதன் எதிர்கால விபரீதம் புரியாமல் பணத்திற்காகத் தங்கள் முகங்களை விற்கும் ஆபத்து நிலவுகிறது.
சட்டபூர்வமாக வாங்கப்படும் முகம், பிறகு தவறான வழிமுறைகளில் ஆபாச வீடியோக்களுக்கோ அல்லது சைபர் குற்றங்களுக்கோ பயன்படுத்தப்பட்டால், அதனால் நேரடியாக பாதிக்கப்படுவது அந்த முகத்திற்குரிய சாமானியரே ஆவார்.
தனியுரிமைப் பேரழிவு
சாமானிய மக்கள் இதை எளிதான வருமானமாக வரவேற்றாலும், இது இருபுறமும் கூர்மையான கத்தி போன்றது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒருவரது உடலமைப்பும் முகமும் மனிதனின் தனிப்பட்ட அடையாளம். மிகக் குறைந்த பணத்திற்காக நிறுவனங்களிடம் வாழ்நாள் அடையாள உரிமையை ஒப்படைப்பது, எதிர்காலத்தில் கணிக்க முடியாத தனியுரிமைப் பேரழிவை ஏற்படுத்தக்கூடும். தொழில்நுட்பப் புரட்சியின் விசித்திரமான வணிகப் பரிமாணமாக திகழும் இந்த 'முக உரிமச் சந்தை', உரிய சட்டக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படாவிட்டால் மனித அடையாளங்களையே விற்றுத் தின்னும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
குறுகிய காலத்தில் எளிய வருமானத்தைத் தருவது போலத் தோன்றினாலும், தகவல் பாதுகாப்பு நோக்கில் இது பல தீவிர அடையாள அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது.
மாற்ற முடியாத பயோமெட்ரிக்:
ஒருவரது கடவுச்சொல் (Password) கசிந்தால் உடனடியாக அதை மாற்றிவிட முடியும். ஆனால், ஒருவரது முக அமைப்பை மாற்ற முடியாது. இன்றைக்குப் பெரும்பாலான வங்கி மற்றும் நிதிச் சேவைகள், ஸ்மார்ட்போன் அன்லாக் வசதிகள் மற்றும் அரசு அடையாளச் சரிபார்ப்புகள் முக அங்கீகாரத்தையே (Face Recognition) நம்பியுள்ளன. முகத் தரவுகள் பொதுவெளியில் சிக்கும்போது இந்தப் பாதுகாப்பு அமைப்புகள் முற்றிலும் பலவீனமடையும்.
டீப்ஃபேக் அச்சுறுத்தல்:
விளம்பரங்களைத் தாண்டி இந்தத் தரவுகள் கசிந்தால், சம்பந்தப்பட்ட நபரின் அனுமதியின்றி அவரைப் போன்றே பேசும் மற்றும் இயங்கும் போலியான 'டீப்ஃபேக்' (Deepfake) வீடியோக்களை உருவாக்க முடியும். அவரைப் போன்றே இருக்கும் AI உருவத்தைப் பயன்படுத்தி உறவினர்களிடம் பணம் பறிப்பது மற்றும் மிரட்டிப் பணம் பறிக்கும் குற்றங்களுக்கும் இது வழிவகுக்கும்.
கட்டுப்படுத்த முடியாத பரவல்:
ஒப்பந்தத்தில் 'குறிப்பிட்ட விளம்பரத்திற்கு மட்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், டிஜிட்டல் உலகில் ஒருமுறை தரவு நுழைந்துவிட்டால் அதைக் கட்டுப்படுத்துவது இயலாத காரியம். AI மாடல்கள் மூலம் ஒருவரது முகம் ஆயிரக்கணக்கான வீடியோக்களாக மாற்றப்படும்போது, அவற்றைப் பதிவிறக்கம் செய்து முறைகேடாகப் பயன்படுத்துபவர்களைக் கண்டறிவது சாத்தியமற்றதாகிவிடும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.