
டே டிரேடிங் (Day Trading) என்பது ஒரு நாளில் பங்குகளை வாங்கி, அதே நாளில் விற்று லாபம் ஈட்டும் ஒரு முதலீட்டு முறை. இது ஒரு வேகமான முதலீட்டு முறையாகும், இதில் ஒருவரின் வர்த்தக திறன்கள் மற்றும் சந்தை நிலைமைகளின் துல்லியமான மதிப்பீடு முக்கிய பங்கு வகிக்கிறது. காலையில் பங்குகளை வாங்கி, மாலைக்குள் விற்று லாபம் பார்க்கும் டே டிரேடிங்கில் சிலர் லாபம் பார்த்து வரும் நிலையில் பலரின் கையையும் அது கடித்து விடும் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.
டே டிரேடிங்கில் லாபம் சம்பாதித்திருக்கும் தனிமனிதர்கள் வெறும் 10% தான் என்கிறது ஒரு சர்வே. அதேபோல் 99 சதவீதம் பேர் நஷ்டம் அடைகின்றனர் என்ற கருத்தும் நிலவுகிறது. பண நஷ்டம் மட்டுமன்றி, கண்ணெதிரே நொடிக்கு நொடி சந்தை ஏறுவதையும் இறங்குவதையும் பார்த்துப் பதைபதைத்துப் போவதில் உடலும் மனமும்கூட சலித்து நொந்துபோகும் என்பதால் கவனம் தேவை என்பதே பல்வேறு தரப்பினரின் அறிவுரை.ஆனால் ஒரு சில விஷங்களில் கவனம் செலுத்தினால் டே டிரேடிங் நமக்கு ஏற்றத்தை தரும் என்கின்றனர் சந்தை நிபுணர்கள்.கொஞ்சம் கவனம், கூடுதல் பொறுமை மற்றும் கால்குலேஷன் மைண்ட் ஆகியவை இருந்தால் டே டிரேடிங்கில் கலக்கலாம்.
டே டிரேடிங்கில் கால்பதிக்கும் 70% பேர் நஷ்டத்தையே சந்திப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. ஆனால் பெரும்பான்மையானவர்களுக்கு நஷ்டத்தைத் தருமானால் அதில் பலரால் தொடர்ந்து எப்படி லாபத்தை கொடுக்க முடிகிறது என்பதே சிலரின் கேள்வியாக உள்ளது. முக்கியமாக நான்கு தகுதிகள் இருந்தால்தான், டே டிரேடிங்கில் ஈடுபட்டு வெற்றியடைய முடியும் என்கின்றனர் சந்தை நிபுணர்கள்.
டே டிரேடிங்கில் ஈடுபட வேண்டுமானால் வர்த்தகம் நடக்கும் நேரத்தில் முழுமையாக அதில் கவனம் செலுத்தும் அளவுக்கு நேரத்தை ஒதுக்கவேண்டும் என்பது கட்டாயம்
அதேபோல் நம்பர்களையும் செய்திகளையும் கையாளும் திறன் இருக்கவேண்டும் எனவும் ஒரு செய்தி நடந்தால் அதற்கு சந்தை எப்படி ரியாக்ட் செய்யும் என்பதைக் கணிக்கத் தெரிந்திருக்கவேண்டும் என்றும் சந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வளவு எண்ணிக்கையில் வர்த்தகம் நடக்கிறது என்றால் நாம் நுழையலாமா, கூடாதா என்பதைத் தீர்மானிக்க தெரிந்திருந்தால் சந்தையில் கலக்கலாம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
போட்ட பணமே போனாலும் பாதிப்பில்லை என்று ரிஸ்க் எடுக்கக்கூடிய அளவுக்குப் பணம் இருக்கவேண்டும். எல்லாவற்றையும் விட இதுதான் மிக முக்கியமானது. இதுதான் ஒருவரின் வெற்றியைத் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கிறது.
டே டிரேடிங்கின் வெற்றி சரியான நேரத்தில் வேகமாக எடுக்கப்படும் சரியான முடிவைக்கொண்டே அமைகிறது. எனவே முடிவெடுக்கும் திறனைக்கொண்டே வெற்றி சாத்தியமாகிறது. போட்டி நிறைந்த சந்தையில் சரியான முடிவெடுக்கும் திறன் என்பது சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, மற்ற டிரேடர்களின் முடிவு என்னவாக இருக்கும் எனக் கணித்து, அதற்கு ஈடான முடிவெடுப்பதேயாகும். அதனை சரியாக செய்தால் கண்டிப்பாக வெற்றி பெறலாம்.இவற்றோடு, டே டிரேடிங்கை ஒரு அன்றாடத் தொழிலாக மேற்கொள்ள விரும்புபவர்கள் என்.எஸ்.இ போன்ற நிறுவனங்கள் தரும் கட்டணப் பயிற்சியைப் பெறுவது அவசியம்!
லாபத்தை ஈட்டித்தரும் இந்த முடிவெடுக்கும் திறன் ஒவ்வொரு மனிதரிடமும் பெருமளவு வேறுபடுகிறது. அதனால்தான் மார்க்கெட்டில் பணம் சம்பாதித்து பென்ஸ் கார் வைத்திருப்பவர்களையும் பார்க்கிறோம். பணத்தைத் தொலைத்துத் தவித்து நிற்பவர்களையும் பார்க்கிறோம்.டே டிரேடிங் என்பதை ஒரு சூதாட்டமாக நினைக்காமல், நன்கு விஷயம் தெரிந்து செய்யக்கூடிய சாதுரியமான வர்த்தகம் என்று நினைத்து புத்திசாலித்தனமாகச் செய்ய முடிவெடுத்தால், அதில் இறங்கலாம். இல்லாவிட்டால், இருப்பதே போதும் என்று நினைத்து நம் தினப்படி வேலைகளில் கவனம் செலுத்தலாம்