
நம்மில் பலர் ஏதோ சேமிக்கவேண்டுமே என்பதற்காக பணத்தைச் சேமிக்கிறோம். ஆனால், எந்தெந்தத் தேவைக்கு எவ்வளவு சேமிக்கவேண்டும் என்று தெளிவாகத் திட்டமிட்டுச் சேமித்தால் அது பயனுள்ள சேமிப்பாக இருப்பதுடன் உங்களை கோடீஸ்வரனாக மாற்றும். எப்படி சேமிக்க வேண்டும் என திட்டமிட்டு சேமித்தால் ஆயிரங்களை கோடிகளாக மாற்றலாம். நிதித் திட்டமிடல் என்பது ஒரு நீண்டகாலச் செயல். உங்களுடைய நிதிஆதாரங்களைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற மாதிரி திட்டங்களை வகுத்து, குறுகியகால மற்றும் நீண்டகால லட்சியங்களை அடையவேண்டும்.
நம்மை புர்ந்துகொண்ட நல்ல தகுதியான நிதி ஆலோசகர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நிதி ஆலோசகர் நம்பத் தகுந்தவராகவும் சார்ட்டட் அக்கவுன்டன்டாகவும், நீண்டகாலம் இத்துறையில் இருப்பவராகவும் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். அவர் தொழில்முறையில் நிதி ஆலோசகராக மட்டும் இருந்தால் போதாது, முழுநேர நிதி ஆலோசகராகவும் இருக்கவேண்டும். ஏனெனில் பகுதிநேரமாக நிறைய பேர் நிதி ஆலோசகராக இருக்கிறார்கள். அவர்களுக்கு பல வேலைகளில் இதுவும் ஒன்று, அவ்வளவுதான்! அதனால் கூடுமானவரை அப்படிப்பட்டவர்களைத் தவிர்த்துவிடுவது நல்லது.
உங்களுடைய நிதி சம்பந்தப்பட்ட எல்லா தகவல்களும் அதில் இருக்கவேண்டும். உங்கள் ஆண்டு வருமானம், நீண்டகால மற்றும் குறுகியகால இலக்குகள், அசையும் மற்றும் அசையாச் சொத்துகள், கடன்கள், பண வரவுகள், முதலீடுகள், ஓய்வுக்காலத் திட்டம், வரிச் சேமிப்புக்கான திட்டங்கள் மற்றும் உங்களுக்குத் தேவையான இன்ஷூரன்ஸ் அளவு ஆகியவை இந்தத் திட்டத்தில் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்.
தேவையான அளவுக்குப் பணம் இல்லையெனில் உங்களால் முழுஅளவிலான திட்டத்தில் நுழைய இயலாது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். நிதி ஆலோசகரை அடிக்கடி சந்திக்க வேண்டியதுகட்டாயம். நிறைய பணம் இல்லை எனில் முக்கியமான திட்டங்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கவும்.
இலக்குகளோடு சேமிப்பதற்கும் இலக்குகளற்றுச் சேமிப்பதற்கும் நிறைய உள்ளது. இலக்குகள் வைத்துச் சேமித்தால் அந்தந்தச் சேமிப்பை அந்தந்தச் செலவுகளுக்குச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வோம். அப்படி இல்லாமல் மொத்தமாகச் சேமிப்பை வைத்திருந்தால் ஒரு தேவைக்கான செலவை இன்னொரு தேவைக்காகப் பயன்படுத்திக் குழப்பி, கடைசியில் சேமித்தும் கஷ்டப்பட்டுவிடுவோம். அதனால், முதலில் குறுகியகால மற்றும் நீண்டகால இலக்குகளைப் பட்டியலிட்டுக்கொள்ளவும். அதன்பின் அவற்றின் முக்கியத்துவத்துக்கு ஏற்ற மாதிரி வரிசைப்படுத்தி சேமிக்கவும். அப்போதுதான் சேமிப்பது எளிதாக இருக்கும்.
உங்கள் சொத்துக்களின் இன்றைய பண மதிப்பை முதலில் தெரிந்துகொள்ளவும். சொந்த வீடு, ரியல் எஸ்டேட், தங்கம், பேங்க் பேலன்ஸ், ஷேர்ஸ், இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட் இவற்றைத் தனியாக வரிசைப்படுத்தவும். உங்கள் பொறுப்புகள், வீட்டுக் கடன், கார் கடன், கிரெடிட் கார்டு பேலன்ஸ் இவற்றைத் தனியாக வரிசைப்படுத்தவும். இப்போது உங்கள் சொத்துக்களில் இருந்து உங்கள் கடன்களைக் கழித்தால் உங்கள் மதிப்பை அறியலாம்.
முதலில் பட்ஜெட் போடுங்கள். அதன்பின் தினசரி செலவுகளை எழுதி வாருங்கள். இதிலிருந்து தேவையற்ற செலவுகளைச் சுலபமாகக் கண்காணிக்கமுடியும். எக்ஸல் ஷீட்டிலும் குறித்து வரலாம். இதனால் ஒவ்வொரு மாதமும் நீங்கள் எதற்காக அதிகம் செலவு செய்கிறீர்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியும். இப்படித் திட்டமிட்டு செலவு செய்யும்போது உங்களின் அனாவசியச் செலவுகளைத் தவிர்க்கமுடியும்.
சேமிப்புக்கு என்று விதிமுறைகளை ஏற்படுத்தமுடியாது... உங்கள் வயது, வருமானம் மற்றும் மாதாந்திரச் செலவுகளைப் பொறுத்து சேமிப்பு விதிகள் மாறும். பொதுவாக மொத்த வருமானத்தில் (வரிக்கு முந்தைய வருமானம்) 10% சேமிக்கலாம். இந்தப் பணம் உங்களுக்கு அதிகமாகத் தெரிந்தால், சேமிப்பதை விட்டுவிடாதீர்கள். மாதா மாதம் முடிந்த அளவு ஒரு குறிப்பிட்ட பணத்தைச் சேமிக்க ஆரம்பித்து, சிறிது சிறிதாக உயர்த்திக்கொள்ளலாம்.
நிதித் திட்டமிடலில் காப்பீடுக்கு முக்கியத்துவம் கட்டாயம் கொடுக்கவேண்டும். கடந்த சில வருடங்களில் இன்ஷூரன்ஸ் துறை பல மாற்றங்களைக் கண்டுள்ளது. பல புதிய திட்டங்கள் வந்துள்ளன. இதனால் உங்கள் ஆலோசகரின் உதவியோடு தற்போது நீங்கள் வைத்திருக்கும் திட்டங்களை ஆராய்ந்து பிறகு தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளவும். உங்களுடைய குறிக்கோள், இலக்கு, ரிஸ்க் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட திட்டத்தை நிதி ஆலோசகரிடமிருந்து எதிர்பார்க்கலாம். நிதி ஆலோசகர் உங்கள் வக்கீல், இன்ஷூரன்ஸ் ஏஜென்ட், ஸ்டாக் புரோக்கர் போன்றவர்களைக் கலந்தாலோசித்து உங்களுக்கான திட்டத்தை வழங்கினால் அது சிறப்பாக அமையும்.
எவ்வளவு அருமையான திட்டமாக இருந்தாலும் பயன்படுத்தாதவரையில் அது வெறும் பேப்பர்தான். நிதி ஆலோசகர் உங்களுக்கு ஆலோசனை மட்டுமே வழங்கமுடியும். அதைச் செயல்படுத்த வேண்டியது உங்கள் பொறுப்பு. உங்களுக்குத் தேவைப்பட்டால், சந்தேகம் இருந்தால் வேறொரு நிதி ஆலோசகரிடம் ஆலோசனை கேட்கவும் தயங்கக் கூடாது. வாழ்க்கையில் எப்போதெல்லாம் முக்கியமான சம்பவங்கள் நிகழ்கிறதோ, அப்போதெல்லாம் மாற்றி அமைப்பது நல்லது. திருமணம், குழந்தை பிறப்பு மற்றும் எதிர்பாராத சம்பவங்கள் நேரும்போது திட்டத்தை மாற்றி அமைக்கலாம். பலர் வருடம் ஒருமுறை தங்கள் திட்டம் எவ்வாறு செயல்பட்டுள்ளது என்று பரிசீலனை செய்கிறார்கள். இந்தப் பரிசீலனையில் நம்முடைய இலக்குகளை காலமாற்றங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொள்ளலாம்.
எதிலும் திட்டமிட்டுச் செயல்படுவது என்பது ஒரு கலை. ஆனால், அது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அதுவும் நிதி சம்பந்தப்பட்ட விஷயத்துக்காகத் திட்டமிடவேண்டும் என்றால் நமக்கெல்லாம் அது பாகற்காய் சாப்பிடுவது போலத்தான். ஆனால், பாகற்காய் சாப்பிடப் பழகிக்கொண்டால் மற்றதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிடும்! நம்மில் பலர் ஏதோ சேமிக்கவேண்டுமே என்பதற்காக பணத்தைச் சேமிக்கிறார்கள். ஆனால், எந்தெந்தத் தேவைக்கு எவ்வளவு சேமிக்கவேண்டும் என்று தெளிவாகத் திட்டமிட்டுச் சேமிப்பதில்லை. அப்படிச் சேமித்தால்தான் அது பயனுள்ள சேமிப்பாக இருப்துடன் உங்களை கோடிஸ்வரன் லிஸ்ட்டில் கொண்டுபோய் சேர்க்கும்.