6.5 மணி நேரம், 19 ஆர்டர்கள், 51 கி.மீ சவாரி... படிப்புச் செலவிற்காக பிளிங்கிட் டெலிவரியில் இறங்கிய சட்ட மாணவன் ஈட்டிய முதல் நாள் வருமானம் எவ்வளவு? வைரல் பதிவின் முழு விவரம், இணையத்தில் வெடித்த விவாதம்!
கையில் சட்டப் புத்தகங்களோடு நீதிமன்றப் படிகளை நோக்கி நடக்க வேண்டிய ஒரு மாணவன், தன் படிப்புச் செலவிற்காக கையில் பிளிங்கிட் (Blinkit) மளிகைப் பையோடு வீதி வீதியாக வலம் வந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சட்டப்படிப்பு (LLB) படித்து வரும் கவல் தேசாய் என்ற மாணவர், தன் சுயமரியாதையையும் கல்விச் செலவையும் சுயமாகச் சுமக்க முடிவு செய்தார். ஓய்வு நேரத்தை வீணடிக்காமல், உடனடி மளிகைப் பொருட்கள் டெலிவரி செய்யும் பிளிங்கிட் நிறுவனத்தில் பகுதிநேர ஊழியராகத் தனது முதல் நாளைத் தொடங்கினார்.
24
முதல் நாள் சவாரி: மீட்டரும் வருமானமும்!
சுமார் 6 மணி நேரம் 30 நிமிடங்கள்... 19 ஆர்டர்கள்... ஏறக்குறைய 51 கிலோமீட்டர் பயணம் (திரும்பி வந்த தூரத்தைக் கணக்கிடாமல்). அந்த நாளின் இறுதியில் அவரது உழைப்புக்குக் கிடைத்த ஊதியம் எவ்வளவு தெரியுமா? வழக்கமான வருமானம் ரூ.508 (இதில் ரூ.75 போனஸ் அடங்கும்) இலக்கை எட்டியதற்காக கிடைத்த போனஸ் ரூ.100, மொத்தக் கணக்கு ரூ.608. அவரிடம் இருந்த ‘ஏத்தர்’ (Ather) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அவருக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.
வீட்டிலேயே சார்ஜ் செய்து கொண்டதால், பெட்ரோல் செலவு என்று 1 ரூபாய் கூடக் குறையாமல் உழைத்த பணம் முழுக்கக் கையில் நின்றது. ஒருபுறம் வண்டியின் பேட்டரி குறையத் தொடங்கியது; மறுபுறம் படிப்பதற்கான நேரமும் நெருங்கியது. உடனே திருப்தியுடன் அன்றைய டெலிவரியை முடித்துக் கொண்டார். தன்னுடைய டெலிவரி பேக் மற்றும் அன்றைய வருமானத்தைக் காட்டும் ஸ்கிரீன்ஷாட்டை X தளத்தில் பகிர்ந்து, மாணவர்கள் பகுதிநேரமாக உழைக்க பிளிங்கிட்டின் கட்டமைப்பு மிகவும் ஏதுவாக உள்ளது என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டார்.
34
இணையத்தை உலுக்கிய ‘கிக் எகானமி’ விவாதம்
மாணவனின் இந்தப் பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே பல்லாயிரக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்ததோடு, இந்தியாவில் உள்ள ‘கிக் வேலைவாய்ப்புகள்’ (Gig Economy) குறித்த ஆழமான விவாதத்தையும் கிளப்பியது. வெளிநாடுகளைப் போல மாணவர்கள் பாக்கெட் மணிக்காகச் செய்ய வேண்டிய இந்த டெலிவரி வேலை, இந்தியாவில் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பலரின் முழுநேரக் கண்ணீர்த் தொழிலாக மாறிவிட்டது என்று ஆதங்கப்பட்டார் ஒருவர். நான் ஊபர் பைக்கிலும், ஸ்விக்கியிலும் இரவும் பகலுமாக ஓட்டியும் கூட என்னால் சட்டக்கல்லூரி சேர்க்கை கட்டணத்தை கட்ட முடியவில்லை என்று தன் கண்ணீர் அனுபவத்தை இறக்கி வைத்தார் இன்னொருவர்.
வெயிலிலும் மழையிலும் 6 மணி நேரம் சாலையில் அலைந்து உடலைக் கெடுத்துக் கொள்வதற்குப் பதிலாக, கேட்டரிங் போன்ற வேலைகளில் இறங்கினால் நல்ல வருமானத்தோடு இலவச உணவும் மிச்சமாகும் என மற்றொருவர் நடைமுறை ஆலோசனையைக் கூறினார். சுய உழைப்பில் நம்பிக்கை வைத்து, எதையும் இழக்காமல் கல்வியையும் வேலையையும் சமமாகத் தூக்கி நிறுத்தும் இந்தக் கல்லூரி மாணவனின் விடாமுயற்சி, இளைஞர்கள் மத்தியில் பெரும் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.