Air Fares: விமானப் பயணிகளுக்கு குட்நியூஸ்.. கட்டண உயர்வுக்கு பிரேக்.. அரசின் நேரடி கண்காணிப்பு!

Published : Nov 02, 2026, 01:58 PM IST

Air Fares: விமான டிக்கெட்டுகளின் தாறுமாறான விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
14
விமானப் பயணிகளுக்கு குட்நியூஸ்

கச்சா எண்ணெய் மற்றும் விமான எரிபொருளின் (ATF) விலை உயர்வால், விமான டிக்கெட் கட்டணங்களும் தற்போது விண்ணை முட்டுகின்றன. இந்த நிலையில், சாதாரண பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஒரு புதிய விதியை கொண்டு வந்துள்ளது. இனிமேல், பொதுநலன் கருதி சில சிறப்பு சூழ்நிலைகளில் விமான டிக்கெட் விலையில் அரசு நேரடியாக தலையிட முடியும்.

24
சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் அறிவிப்பு

மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள 'பாரதிய வாயுயான் விதிகள், 2026'-ன் படி, ஏதாவது ஒரு அசாதாரண சூழ்நிலையில் தலையிடுவது அவசியம் என அரசு கருதினால், கட்டணம் தொடர்பாக விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட முடியும். ஆனால், இந்த உத்தரவு அந்தந்த சூழ்நிலையை பொறுத்தது மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே அமலில் இருக்கும்.

புதிய விதியின் 192-வது பிரிவின்படி, விமான நிறுவனங்கள் தங்களது செயல்பாட்டு செலவுகள் மற்றும் பிற விஷயங்களின் அடிப்படையில் டிக்கெட் விலையை நிர்ணயிக்க வேண்டும். அதன் பிறகு, அந்த கட்டண விவரங்களை சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திடம் (DGCA) சமர்ப்பிக்க வேண்டும். ஏதாவது அசாதாரண சூழ்நிலை உருவாகி, அதில் பொதுநலன் கருதி தலையிட வேண்டும் என அரசு நினைத்தால், எழுத்துப்பூர்வமாக உத்தரவுகளை பிறப்பிக்கலாம் என அந்த விதியில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

34
விமான கட்டண வரைமுறை

கட்டணங்களில் வெளிப்படைத்தன்மையை பராமரிக்கவும், பயணிகளுக்கு சரியான தகவல்களை வழங்கவும், விமான நிறுவனங்கள் தங்களது இணையதளம் மற்றும் பிற டிஜிட்டல் தளங்களில் டிக்கெட் விலையை வெளியிட வேண்டும். விமான நிறுவனங்கள் என்ன கட்டணத்தை நிர்ணயிக்கின்றன என்பதை டிஜிசிஏ (DGCA) தீவிரமாக கண்காணிக்கும். டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பயணிகள் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பது புக்கிங் செய்யும்போதும், டிக்கெட்டிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டியது இனி கட்டாயம்.

இதனால் டிக்கெட் எடுப்பதில் அதிக வெளிப்படைத்தன்மை வரும். அதுமட்டுமின்றி, அடிப்படை கட்டணம் (Base fare), வரி, கட்டணங்கள், கேன்சலேஷன் சார்ஜ், ரீஃபண்ட் நிபந்தனைகள் மற்றும் பிற கட்டணங்களின் தனித்தனி கணக்கையும் பயணிகளுக்கு வழங்க வேண்டும். அரசுக்கு செலுத்தும் வரிக்கும், பயணிகளுக்கு சேவை வழங்குவதற்காக விமான நிறுவனம் வாங்கும் கட்டணத்திற்கும் இடையே தெளிவான வித்தியாசம் இந்த புதிய விதியில் காட்டப்பட்டுள்ளது.

44
இனி மத்திய அரசின் கையில்...

கடந்த 1994-ம் ஆண்டு இந்தியாவில் விமான கட்டண நிர்ணயத்தின் மீதான அரசின் கட்டுப்பாடு நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு, சந்தை நிலவரத்தின் அடிப்படையிலேயே நிறுவனங்கள் டிக்கெட் விலையை நிர்ணயித்து வருகின்றன. டிக்கெட்டுகளின் தேவை, செயல்பாட்டு செலவு மற்றும் புக்கிங் செய்யும் நேரம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் பொதுவாக கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது என சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தொடர்ந்து கூறி வருகிறது.

இதற்கு முன்பு 'விமான விதிகள், 1937'-ன் 135(4) பிரிவின்படி, விமான போக்குவரத்து துறையில் அதிக கட்டணம் வசூலிப்பது அல்லது ஏகபோக வியாபாரம் செய்வது நிரூபிக்கப்பட்டால், உத்தரவுகளை பிறப்பிக்க டிஜிசிஏ-வுக்கு அதிகாரம் இருந்தது.

புதிதாக வெளியிடப்பட்டுள்ள 192-வது பிரிவில் விமான கட்டணத்தை கண்காணிப்பது பற்றி கூறப்பட்டிருந்தாலும், அதிக கட்டணம் அல்லது ஏகபோக வியாபாரம் போன்ற விஷயங்கள் அரசின் தலையீட்டிற்கான காரணமாக தனியாக குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், இந்த புதிய கட்டமைப்பின் மூலம், விதியில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு சிறப்பு சூழ்நிலைகளில் விமான கட்டணம் குறித்து உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரம் மத்திய அரசின் கையிலேயே உள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories