தங்கம், வெள்ளிக்கு அடுத்ததாக முதலீட்டாளர்களின் கவனத்தை இப்போது ஈர்க்கும் உலோகமாக தாமிரம் (செம்பு) மாறி வருகிறது. சமீப காலமாக தாமிரத்தின் விலை உலக சந்தையில் தொடர்ந்து உயர்ந்து வருவதால், இதை பல முதலீட்டாளர்கள் “அடுத்த தங்கம்” என வர்ணிக்க தொடங்கியுள்ளனர். லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்சில் கடந்த வாரம் தாமிரத்தின் விலை ஒரு டன்னுக்கு சுமார் 13,000 அமெரிக்க டாலரை எட்டியது. 2026 ஆம் ஆண்டு விநியோகப் பற்றாக்குறையும், தேவை அதிகரிப்பும் தொடரும் என்பதால், தாமிரத்தின் ஆதிக்கம் இன்னும் அதிகரிக்கும் என சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
செயற்கை நுண்ணறிவு (AI), எலக்ட்ரிக் வாகனங்கள், டேட்டா சென்டர்கள் மற்றும் பசுமை பொருளாதாரம் போன்ற துறைகளில் தாமிரத்தின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும், மின்சாரம், கட்டுமானம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளிலும் இந்த சிவப்பு உலோகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் விளைவாக, கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தாமிரத்தின் விலை உயர்வை நோக்கி செல்கிறது. இந்த ஆண்டு மட்டும் தாமிரத்தின் விலை 40 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.