
மாருதி சுஸுகி (Maruti Suzuki) மற்றும் டொயோட்டா (Toyota) ஆகிய நிறுவனங்கள் வெவ்வேறு பெயர்கள் மற்றும் லோகோக்களுடன் ஒரே கார்களை ஏன் விற்கிறார்கள் என்று பலர் ஆச்சரியப்படுகிறார்கள். இதற்கான காரணம் என்ன என்று தெரிந்துகொள்வோம். டொயோட்டா மற்றும் மாருதி சுஸுகி நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்ப நிபுணத்துவத்தை ஒருங்கிணைக்க ஒன்றாகச் செயல்பட முன்வந்துள்ளன. இந்த கூட்டுறவின் மூலம் தயாரிக்கப்பட்ட சில கார்கள் ஏற்கனவே சந்தையில் கிடைக்கின்றன. மேலும் சில கார்களும் எதிர்காலத்தில் வர வாய்ப்புள்ளது.
டொயோட்டா மற்றும் மாருதி சுஸுகி பார்ட்னர்ஷிப்பில் வெளிவந்த சில கார்களைப் பற்றி அறிந்துகொள்ளலாம். மாருதி சுஸுகியுடன் டொயோட்டாவின் உலகளாவிய உற்பத்தி-பகிர்வு ஒப்பந்தத்தின் மூலம் இந்தக் கார்கள் வெளியாகியுள்ளன. டொயோட்டாவின் விற்பனையில் 44 சதவீதம் மாருதி-ரீபேட்ஜ் செய்யப்பட்ட தயாரிப்புகளில் இருந்து வருகிறது. டொயோட்டாவின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட கார்கள் மாருதி மாடல்களை விட சற்று விலை அதிகம் என்பதையும் கவனிக்க வேண்டும்.
மாருதி சுஸுகி பலேனோ - டொயோட்டா கிளான்சா: மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) B2-பிரிவு ஹேட்ச்பேக் வகையைச் சேர்ந்தது. இது முழுமையாக மாருதி சுஸுகியால் தயாரிக்கப்பட்டது. எனினும் டொயோட்டா நிறுவனம் அதே காரை கிளான்சா (Toyota Glanza) என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறது. இரண்டு கார்களுக்கும் இடையே காணப்படும் விலை வித்தியாசம் குறிப்பிடத்தக்கது.
இரண்டு கார்களும் 1.2லி சாதாரண பெட்ரோல் எஞ்சின், மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 1.2லி சிஎன்ஜி பை-எரிபொருள் ஆப்ஷனுடன் இருக்கின்றன. எஞ்சின் மற்றும் இயங்குதளம் ஒரே மாதிரியாக இருப்பதால், இரண்டு கார்களின் பவர், டார்க் மற்றும் மைலேஜ் ஆகியவையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும்.
மாருதி சுஸுகி பிராங்க்ஸ் - டொயோட்டா டைசர்: டொயோட்டா மற்றும் மாருதி சுஸுகி இடையேயான ஒத்துழைப்பில் இருந்து மற்றொரு புதிய தயாரிப்பு மாருதி சுஸுகி பிரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) மற்றும் டொயோட்டா டைசர் (Toyota Taisor). இந்த காரை மாருதி சுஸுகி தயாரித்துள்ளது.
அதே நேரத்தில் டொயோட்டா தனது பிராண்டின் கீழ் அதே காரை விற்பனை செய்கிறது. இரண்டு கார்களும் 1.0L டர்போ பெட்ரோல் எஞ்சின், 5-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 1.2L CNG பை-எரிபொருள் ஆப்ஷனுடன் உள்ளன.
டொயோட்டா ரூமியன் - மாருதி சுஸுகி எர்டிகா: டொயோட்டா ரூமியன் (Toyota Rumion) கார் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட பதிப்பாகும். இரண்டு கார்களும் ஒரே பிளாட்ஃபார்ம் மற்றும் பவர்டிரெய்னை அடிப்படையாகக் கொண்டவை.
மாருதி சுஸுகி எர்டிகாவின் எஞ்சின் மற்றும் டிரான்ஸ்மிஷனை உருவாக்கியுள்ளது. இரண்டு MPV கார்களும் 1.5L சாதாரண பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5L CNG இன்ஜினுடன், மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் கிடைக்கின்றன.
டொயோட்டா ஹைரைடர் - மாருதி சுஸுகி கிராண்ட் விடாரா: டொயோட்டா ஹைரைடர் (Toyota Highrider) மற்றும் மாருதி சுஸுகி கிராண்ட் விடாரா (Maruti Suzuki Grand Vitara) எஸ்யூவி ரக கார்கள் இரண்டும் ஒரே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளன. இதை டொயோட்டா மற்றும் மாருதி சுஸுகி இணைந்து இந்த காரை தயாரித்துள்ளன.
மாருதி சுஸுகியின் 1.5லி மைல்ட்-ஹைப்ரிட் பெட்ரோல் எஞ்சினும், டொயோட்டாவின் 1.5லி ஸ்ட்ராங்-ஹைப்ரிட் பெட்ரோல்-ஆட்டோமேட்டிக் பவர்டிரெய்னும் இடம்பெறுகின்றன.
டொயோட்டா இன்னோவா ஹைகோ - மாருதி சுஸுகி இன்விக்டோ: மாருதி சுஸுகி இன்விக்டோ (Maruti Suzuki Invicto) ஜூலை 2023 இல் அறிமுகமானது. இது டொயோட்டா இன்னோவா ஹைகோஸ் (Toyota Innova Hycos) காரின் ரீ-பேட்ஜ் பதிப்பாகும்.
இன்விக்டோ ஒரு 2.0L பெட்ரோல் ஹைப்ரிட் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது CVT ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டது. இந்த கார் நெக்ஸா பிளாட்ஃபார்மில் விற்பனை செய்யப்பட்டு மூன்று வகைகளில் கிடைக்கிறது. இன்விக்டோவின் விலையுடன் ஒப்பிடும்போது சிறிய வித்தியாசம் இருந்தாலும், வடிவமைப்பில் சிறிய மாற்றங்கள் உள்ளன.
மாருதி சுஸுகியும் டொயோட்டாவும் இந்தக் கூட்டுறவின் மூலம் ஒருவருக்கொருவர் தொழில்நுட்ப அம்சங்களைப் பகிர்ந்துகொண்டு தங்கள் தயாரிப்புகளை மேம்படுத்துவதில் முனைப்பாக உள்ளனர். இதனால் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட கார்களில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகள் கிடைக்கின்றன.