டாடா மோட்டார்ஸ், தனது பெரிதும் எதிர்பார்க்கப்படும் சியரா இவி காரை 2026, மே 19 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இது அந்த ஆண்டின் மிக முக்கியமான இவி அறிமுகங்களில் ஒன்றாக இருக்கும். எலக்ட்ரிக் சியரா, அதன் பெட்ரோல்/டீசல் (ICE) மாடலைப் போலவே தோற்றமளிக்கும். இதன் ஒட்டுமொத்த டிசைன், பின்பக்க பனோரமிக் கண்ணாடி பகுதி, கிளிஞ்சல் வடிவ டெயில்கேட் போன்ற அம்சங்கள் அப்படியே இருக்கும். ஆனால், இவி மாடல் என்பதால், கிரில், வித்தியாசமான முன்பக்க வடிவமைப்பு, ஏரோ-டைனமிக்ஸ் ஆப்டிமைஸ் செய்யப்பட்ட அலாய் வீல்கள் போன்றவை இதில் இடம்பெறும்.
உட்புறத்தில், புதிய நிறங்கள் மற்றும் மெட்டீரியல்கள் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக காரின் உட்புற வடிவமைப்பு மற்றும் வசதிகள் பட்டியலை வெளியிடவில்லை. ஆனாலும், இதன் வசதிகள் ICE மாடலைப் போலவே இருக்க வாய்ப்புள்ளது. அதன்படி, இதில் மூன்று ஸ்கிரீன்கள் (சென்ட்ரல் இன்ஃபோடெயின்மென்ட், முன்பக்க பயணிக்கான டிஸ்ப்ளே, டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே), வென்டிலேஷன் வசதியுடன் கூடிய பவர் முன்பக்க சீட்கள், பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர், பவர் டெயில்கேட், வயர்லஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 360 டிகிரி கேமரா, ஆம்பியன்ட் லைட்டிங், டால்பி அட்மாஸ் கொண்ட 12-ஸ்பீக்கர் ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம் மற்றும் லெவல் 2 ADAS போன்ற அம்சங்கள் இருக்கலாம்.