இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்ட் 2026 முதல் தங்கள் நிறுவனத்தின் அனைத்து மாடல் கார்களின் விலையையும் ₹30,000 வரை உயர்த்தப் போவதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. தேசிய பங்குச் சந்தைக்கு (NSE) அளித்த அறிக்கையில், உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த விலை உயர்வை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக மாருதி சுசுகி கூறியுள்ளது.
கடந்த சில மாதங்களாக, செலவுகளைக் குறைக்கும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இந்த விலை உயர்வின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முயற்சி செய்ததாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், பணவீக்கம் தொடர்ந்து அதிகமாக இருப்பதால், இந்த செலவு உயர்வின் ஒரு பகுதியை வாடிக்கையாளர்களிடம் பகிர்ந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. "உற்பத்தி செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், எங்கள் மாடல்களின் விலையை ₹30,000 வரை உயர்த்த முடிவு செய்துள்ளோம். இந்த விலை உயர்வு ஆகஸ்ட் 2026 முதல் அமலுக்கு வரும்" என அந்த அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.