EV vs CNG: புது கார் வாங்க நினைப்பவர்கள் எலெக்ட்ரிக் (EV) அல்லது சிஎன்ஜி (CNG) கார்களை பற்றி யோசிக்கிறார்கள். நீண்ட கால அடிப்படையில் எது அதிக லாபம் தரும்? எது பராமரிப்புச் செலவு குறைவு? வாங்க பார்க்கலாம்.
சிஎன்ஜி காரை விட எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை சுமார் 2 முதல் 3 லட்சம் ரூபாய் வரை அதிகமாக இருக்கும். ஆனால், நீண்ட காலப் பயன்பாட்டில் கதை மாறும். ஒருவர் ஆண்டுக்கு 15,000 கி.மீ. ஓட்டினால், 15 ஆண்டுகளில் 2,25,000 கி.மீ. பயணம் செய்திருப்பார். வீட்டிலேயே EV-க்கு சார்ஜ் செய்தால், ஒரு கி.மீ-க்கு சுமார் ₹1.5 தான் செலவாகும். 15 ஆண்டுகளில் மொத்த கரண்ட் பில் சுமார் ₹3.37 லட்சம் மட்டுமே. ஆனால், சிஎன்ஜி காருக்கு கி.மீ-க்கு ₹4 செலவானால், 15 ஆண்டுகளில் எரிபொருளுக்கு மட்டும் சுமார் ₹9 லட்சம் செலவாகும். ஆக, எரிபொருள் செலவில் மட்டும் EV மூலம் சுமார் ₹5.5 லட்சம் வரை சேமிக்கலாம்.
25
பராமரிப்பு செலவிலும் எலெக்ட்ரிக் காரே முன்னிலை
எரிபொருள் செலவு மட்டுமல்ல, பராமரிப்புச் செலவும் முக்கியம். சிஎன்ஜி காரில் இன்ஜின், கியர்பாக்ஸ், கிளட்ச் என பல மெக்கானிக்கல் பாகங்கள் உள்ளன. அதனால், இன்ஜின் ஆயில் மாற்றுவது, ஃபில்டர்கள் மாற்றுவது, சிஎன்ஜி கிட் செக் செய்வது என அடிக்கடி செலவு வைக்கும். ஆனால், எலெக்ட்ரிக் காரில் இன்ஜின் இல்லை. பேட்டரி, எலக்ட்ரிக் மோட்டார் தான் முக்கிய பாகங்கள். அதனால் இன்ஜின் ஆயில் மாற்றும் வேலை இல்லை. பராமரிப்புச் செலவும் சிஎன்ஜி காரை விடக் குறைவுதான்.
35
பேட்டரி செலவு.. EV-க்கு உள்ள முக்கிய சவால்
எல்லா விஷயத்திலும் EV-க்கு சாதகங்கள் இருந்தாலும், பேட்டரி செலவு ஒரு முக்கியமான சவால். பெரும்பாலான நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார் பேட்டரிகளுக்கு 8 ஆண்டுகள் அல்லது 1.6 லட்சம் கி.மீ. வரை வாரண்டி கொடுக்கின்றன. நீங்கள் 15 ஆண்டுகள் காரை பயன்படுத்த நினைத்தால், இடையில் ஒருமுறையாவது பேட்டரியை மாற்ற வேண்டியிருக்கும். தற்போதைய நிலையில், பேட்டரி மாற்றும் செலவு சுமார் ₹2 லட்சம் முதல் ₹4 லட்சம் வரை ஆகலாம். எனவே, இந்த செலவையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சில வருடங்கள் கழித்து காரை விற்க நினைப்பவர்களுக்கு ரீ-சேல் மதிப்பு முக்கியம். தற்போது, பயன்படுத்தப்பட்ட சிஎன்ஜி கார்களுக்கு மார்க்கெட்டில் நல்ல டிமாண்ட் உள்ளது. நல்ல விலைக்கு விற்கவும் முடியும். ஆனால், பழைய எலக்ட்ரிக் காரின் மதிப்பு, அதன் பேட்டரி கண்டிஷனைப் பொறுத்துதான் அமையும். பேட்டரி ஹெல்த் நன்றாக இருந்தால் நல்ல விலை கிடைக்கலாம். இல்லையென்றால் ரீ-சேல் மதிப்பு குறைய வாய்ப்புள்ளது.
55
நீண்ட கால அடிப்படையில் எது சிறந்த தேர்வு?
தினமும் அதிக தூரம் பயணம் செய்பவர்கள், எரிபொருள் மற்றும் பராமரிப்புச் செலவைக் குறைக்க நினைப்பவர்களுக்கு எலெக்ட்ரிக் கார் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். ஆனால், ஆரம்ப முதலீடு அதிகம், எதிர்கால பேட்டரி மாற்றுச் செலவையும் மனதில் கொள்ள வேண்டும். மறுபுறம், குறைந்த முதலீட்டில் கார் வாங்க நினைப்பவர்கள், ரீ-சேல் மதிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் சிஎன்ஜி காரைத் தேர்ந்தெடுக்கலாம். எனவே, உங்கள் பயணத் தேவைகள், பட்ஜெட், மற்றும் பயன்பாட்டுக் காலத்தை ஆராய்ந்து சரியான முடிவை எடுங்கள்.