
உலக அளவில் நிகழ்ந்து வரும் போர் பதற்றங்கள் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் சிலிண்டர், பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு E85 என்கிற எரிபொருளை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. E85 என்றால் என்ன? அதனால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவில் உள்ள பெட்ரோல் பங்குகளில் தற்போது கிடைக்கும் பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கப்படுகிறது. எத்தனாலின் அளவு அதிகரிப்பதால் வாகனத்தில் பல சிக்கல்கள் உருவாவதாகவும், மைலேஜ் குறைவதாகவும் வாகன ஓட்டிகள் ஏற்கனவே கவலை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் கச்சா எண்ணெய் விலை, அந்நிய செலாவணி போன்ற காரணங்களால் மத்திய அரசு 20% எத்தனால் கலந்த பெட்ரோலை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்துள்ளது. இதனால் இந்தியாவில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்காக மத்திய அரசு புதிய திட்டங்களை தீட்டி வருகிறது. மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஏற்கனவே 100 சதவீதம் எத்தனால் மூலம் இயங்கும் காரை ஓட்டி இதற்கான சாத்திய கூறுகளை நிரூபித்து இருக்கிறார். இந்த நிலையில் விரைவில் E85 எரிபொருளை கொண்டு வர மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளது. E85 என்பது வாகனங்களுக்கான ஒரு மாற்று எரிபொருள் ஆகும். இது எத்தனால் மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டின் கலவையாகும். E85 என்ற பெயரில் 85 என்பது 85% எத்தனால் (E85 Ethanol) மற்றும் 15% பெட்ரோல் கலந்துள்ளதை குறிக்கிறது.
E85 என்பது பொதுவாக மக்காச்சோளம், கரும்பு அல்லது இதர தாவரங்களின் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் உயிரி எத்தனால் மூலம் உருவாக்கப்படுகிறது. இந்த கலவையில் 51% முதல் 83% வரை எத்தனாலும், மீதமுள்ள சதவீதம் பெட்ரோலும் கலக்கப்படுகிறது. இந்த வகை எரிபொருளை அனைத்து வாகனங்களிலும் பயன்படுத்த முடியாது. இதற்கு Flex Fuel Vehicle எனப்படும் நெகிழ்வுத் தன்மை கொண்ட எரிபொருள் வாகனங்கள் தேவைப்படும். இந்த வாகனங்களின் எஞ்சின் மற்றும் எரிபொருள் குழாய்கள் எத்தனாலின் அரிப்புத் தன்மையை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். சாதாரண பெட்ரோல் என்ஜினில் E85 எரிபொருளை பயன்படுத்தினால் எஞ்சின் பாகங்கள் சேதமடைய வாய்ப்பு உள்ளது.
எத்தனால் என்பது அரிக்கும் தன்மை உடையதால் பழைய பெட்ரோல் எஞ்சின் வாகனங்கள் வைத்திருப்பவர்கள் இந்த எரிபொருளை பயன்படுத்த முடியாது. E85 எரிபொருள் பெட்ரோலை விட குறைவான கார்பன் டை ஆக்சைடு மற்றும் நச்சுப் புகையை வெளியிடுகிறது. இது பசுமை இல்ல வாயுக்களை குறைக்க உதவுகிறது. இதன் ஆக்டேன் அளவு பொதுவாக 100 முதல் 105 வரை இருக்கும். இது என்ஜினின் செயல்திறனை அதிகரித்து, அதிக ஆற்றலை வழங்குகிறது. எனவே பந்தய கார்களில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் உள்நாட்டிலேயே விவசாய பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுவதால் வெளிநாட்டு கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க உதவுகிறது.
ஆனால் இந்த எரிபொருளில் சில குறைபாடுகளும் உள்ளன. நாம் முன்பே கூறியது போல இது பழைய வண்டிகளில் இந்த எரிபொருளை பயன்படுத்த முடியாது. பெட்ரோலை விட ஆற்றல் அடர்த்தி குறைவு என்பதால் மைலேஜ் குறையக்கூடும். ஒரு லிட்டர் பெட்ரோலில் கிடைக்கும் மைலேஜ் விட E85 எரிபொருளில் சுமார் 20 முதல் 30 சதவீதம் வரை மைலேஜ் குறையும். மேலும் குளிர்ந்த கால நிலைகளில் எத்தனால் எளிதில் ஆவியாகாது. எனவே வண்டியை ஸ்டார்ட் செய்வதில் சிரமம் ஏற்படும். எத்தனால் தண்ணீரை ஈர்க்கும் குணம் கொண்டது. இது பழைய வாகனங்களின் ரப்பர் குழாய்கள் மற்றும் பிளாஸ்டிக் பாகங்களை காலப்போக்கில் அரித்து விடும்.
E85 எரிபொருளின் விலை பெட்ரோலை விட குறைவாக இருக்கும். இருப்பினும் இதிலிருந்து கிடைக்கும் மைலேஜ் குறைவு என்பதால் ஒட்டுமொத்த பயணச் செலவை கணக்கிடும்பொழுது பெட்ரோலுக்கு இணையாகவோ அல்லது சற்று கூடுதலாகவோ வரலாம். பழைய வண்டிகளை வைத்திருப்பவர்கள் E85 எரிபொருள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படலாம். அவர்கள் என்ன செய்வார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி. அவர்களுக்கு E20 பெட்ரோல் தொடர்ந்து கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்கிற குரல்களும் எழுந்துள்ளன. E85 எரிபொருளை அவசர கதியில் கொண்டு வராமல், அதன் சாதக பாதகங்களை முழுமையாக ஆராய்ந்து கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இருப்பினும் E85 என்பது சுற்றுச்சூழலுக்கு உகந்த அதிக ஆற்றல் தரக்கூடிய ஒரு எரிபொருள் ஆகும். எதிர்காலத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கவும், பெட்ரோல் தட்டுப்பாட்டை போக்கவும், எரிபொருளுக்காக பிற நாடுகளை நம்பி இருக்கும் தேவையை குறைக்கவும் இது உதவுகிறது. மேலும் விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவும் சிறந்த மாற்றாகவும் இது கருதப்படுகிறது. தற்போது இந்தியாவில் இருக்கும் E20 பயன்பாடு குறைக்கப்பட்டு, வருங்காலத்தில் E85 பயன்பாடு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.