திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி 2026 பலன்கள்.! 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப்போகிறது? ஏற்றமும், ராஜயோகமும் பெறப்போகும் ராசிகள் யார்?

Published : Mar 05, 2026, 12:32 PM IST

Thirunallar Sani Peyarchi 2026 Palangal : மார்ச் 6, 2026 நிகழவிருக்கும் சனி பெயர்ச்சி ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 12 ராசிக்காரர்களுக்குமான சனி பெயர்ச்சி பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
114
Thirunallar Sani Peyarchi 2026 Palangal

வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சனிபகவான் மார்ச் 6, 2026 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கிறார். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் சனி பகவான் தனது ராசியை மாற்றுவார். இவர் மீண்டும் ஒரு ராசிக்கு திரும்பி வர முப்பது ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்வார். இந்த நிலையில் அவரது மீன ராசி பெயர்ச்சியால் பலன் பெற உள்ள ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

214
மேஷம்

மேஷ ராசிக்கு 12 ஆம் வீடான மீன ராசியில் சனி பகவான் சஞ்சரிக்க இருக்கிறார். இதன் காரணமாக மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி ஆரம்பமாகப் போகிறது. ஏழரை சனியின் தொடக்க காலமான விரய சனி மேஷ ராசிக்கு தொடங்க உள்ளது. இதன் காரணமாக தேவையற்ற செலவுகள், மனநிலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம். தேவையற்ற சிந்தனைகள் எழலாம். முடிவுக்கு வந்ததாக நினைத்துக் கொண்டிருந்த பிரச்சனைகள் மீண்டும் தலை தூக்கலாம். மன அழுத்தம், மனச்சோர்வு ஏற்படலாம். சேமிப்பு கரைந்து செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புகளும் உண்டு.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் அனுமன் வழிபாடு செய்வது நல்லது.

314
ரிஷபம்

ரிஷப ராசிக்கு சனி பகவானின் பெயர்ச்சி மிகவும் சாதகமான சூழலை ஏற்படுத்த இருக்கிறது. சனி பகவான் லாப ஸ்தானமான 11 ஆம் வீட்டில் அமர இருக்கிறார். இது உங்களுக்கு பொற்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானம் கணிசமாக உயரும். தடைபட்ட காரியங்கள் கைகூடும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சகோதரர்களிடம் இருந்து வந்த தகராறுகள் முடிவுக்கு வரும். மனைவி வழியில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

பரிகாரம்: ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் வழங்குவது சிறப்பு.

414
மிதுனம்

மிதுன ராசியின் பத்தாம் வீடான தொழில் மற்றும் கர்ம ஸ்தானத்தில் சனி பகவான் அமர இருக்கிறார். இதன் காரணமாக மார்ச் 6, 2026 முதல் ஏப்ரல் 24, 2028 வரை மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல காரியங்கள் நடக்கத் தொடங்கும். பூர்வீக சொத்து பிரச்சனைகளில் இருந்த தகராறுகள் தீர்க்கப்பட்டு, பணம் கைக்கு வந்து சேரும். கடன் உதவிக்காக காத்திருப்பவர்களுக்கு பணம் கிடைக்கலாம். குழந்தை பாக்கியம் உண்டாகும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். சுப விரயச் செலவுகள் ஏற்படக்கூடும். கூடுதல் பொறுப்புக்கள், இடமாற்றம், கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கலாம்.

பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபடுவது நல்லது.

514
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனியில் இருந்து விடுபட்டு பாக்கிய சனியின் காலம் தொடங்க இருக்கிறது. வாக்கிய பஞ்சாங்கப்படி மார்ச் 6, 2026 முதல் ஏப்ரல் 24, 2018 வரை சனி பகவான் கடக ராசியின் ஒன்பதாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர இருக்கிறார். இதன் காரணமாக குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்வுகள் நடக்கும். கடன் தொல்லைகள் தீரும். உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற வரன்கள் கிடைக்கும். வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் சொந்த வீட்டில் குடியேறுவீர்கள். திட்டமிட்ட வேலைகள் முடிவடையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத பண வரவு உண்டாகும்.

பரிகாரம்: குலதெய்வ வழிபாடு செய்வது சிறந்தது.

614
சிம்மம்

வாக்கிய பஞ்சாங்கப்படி நிகழ இருக்கும் சனிப்பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை மணியை அடிக்கிறது. சனி பகவான் எட்டாம் வீட்டில் அமர இருக்கிறார். இது அஷ்டம சனியின் காலமாகும். எனவே இந்த காலக்கட்டத்தில் ஆரோக்கியத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பேசும்பொழுது நிதானம் அவசியம். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். பண விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதங்கள், மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். கையிருப்பு கரையலாம். பூர்வீக சொத்துக்களில் பிரச்சனைகள் அதிகரிக்கும்.

பரிகாரம்: கால பைரவரை வழிபடுவது நல்லது.

714
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு சனி பகவான் ஏழாம் இடத்திற்கு வருகிறார். இது கண்டக சனி என்று அழைக்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும் என்றாலும், குழந்தைகள் மூலம் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனமாக இருக்கவும். பூர்வீகச் சொத்துக்களில் வில்லங்கங்கள் ஏற்படலாம். ஒவ்வாமை பிரச்சினைகள் அதிகரிக்கலாம். தாய் வழி உறவுகளுடன் மனக்கசப்புகள் ஏற்பட்டு மறையும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

பரிகாரம்: சனி பகவானுக்கு கருப்பு எள் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

814
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சி காரணமாக நல்ல பலன்கள் கிடைக்கும். சனி பகவான் ஆறாம் வீடான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திற்கு வருகிறார். இதன் காரணமாக இதுவரை உங்களை வாட்டி வதைத்து வந்த கடன் தொல்லைகள், பணப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். எதிரிகள் உங்களிடம் இருந்து விலகிச் செல்வார்கள். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். திடீர் பணவரவு கிடைக்கலாம். வீடு கட்ட கடன் உதவி கிடைக்கும். தைரியம் அதிகரிக்கும். சமூகத்தில் கௌரவம் கூடும். வாகனப் பழுதுக்காக செலவு செய்ய நேரிடலாம்.

பரிகாரம்: செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் அம்பிகை வழிபாடு செய்வது நல்லது.

914
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஐந்தாம் வீடான பூர்வ புன்ணிய ஸ்தானத்தில் சனி பகவான் அமர இருக்கிறார். இதன் காரணமாக பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். பூர்வீகச் சொத்து பிரச்சனைகள் தீரும். புதிய முதலீடுகளில் ஆர்வம் காட்டுவீர்கள். திடீர் பணவரவு உண்டாகும். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள். சகோதரர் வழியில் உதவிகள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தாய் வழி உறவுகள் மீண்டும் ஒன்றாக இணையும். கண் எரிச்சல், பார்வைக் கோளாறு பிரச்சனைகள் வந்து நீங்கும். மனைவியுடன் இருந்த பூசல்கள் சரி செய்யப்பட்டு ஒற்றுமை அதிகரிக்கும்.

பரிகாரம்: ராசிநாதனான முருகப்பெருமானுக்கு செவ்வாய்க்கிழமைகளில் செவ்வரளி மாலை சாற்றி வழிபடுவது நல்லது.

1014
தனுசு

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி நிகழப்போகும் சனி பெயர்ச்சி தனுசு ராசியின் நான்காம் வீட்டில் நடைபெற இருக்கிறது. இது அர்த்தாஷ்டம சனி என்று அழைக்கப்படுகிறது. தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த காலக்கட்டத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் செலவுகளும், தேவையற்ற அலைச்சல்களும் உண்டாகலாம். செலவுகள் அதிகரிக்கக்கூடும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கலாம். நிலவையில் இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். புதிய பொறுப்புக்களை பெறுவீர்கள். ஏப்ரல் 24, 2028 வரை கலவையான பலன்களை கிடைக்கும்.

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடலாம்.

1114
மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு நிகழ இருக்கும் சனி பெயர்ச்சி சுப பலன்களை அளிக்க உள்ளது. ஏழரை சனியின் கடைசி கட்டமான பாத சனியிலிருந்து மகர ராசிக்காரர்கள் முழுமையாக விடுபட இருக்கிறீர்கள். கடந்த ஏழு ஆண்டுகளாக நிலவி வந்த மன உளைச்சல்கள் நீங்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். சமூகத்தில் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் இனி மகிழ்ச்சி மட்டுமே நிலவும். குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகள் கைகூடும். சொத்து விவகாரங்களில் சாதகமான நிலை உருவாகும்.

பரிகாரம்: சிவபெருமானை திங்கட்கிழமைகளில் வழிபடுவது மிகவும் நல்லது.

1214
கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் ஏழரை சனியின் ஜென்ம சனி முடிந்து பாத சனி தொடங்க இருக்கிறது. உங்கள் ராசியை விட்டு விலகி பாத சனியாக அமர்ந்து சனி பகவான் பலன்களை தர இருக்கிறார். இதுவரை நிலவி வந்த மனக்குழப்பங்கள் நீங்கி, அமைதி நிலவும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். உடல்நலக் கோளாறுகள் சீராகும். இருப்பினும் அடுத்தவர் விவகாரங்களில் தலையிடுதல் கூடாது. தாயின் உடல் நலத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும். திடீர் பயணங்கள் ஏற்படலாம். வேலையில் சுமை ஏற்படக்கூடும். காலில் சிறு காயங்கள் ஏற்படலாம்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனி பகவான் மற்றும் அனுமனை வழிபடுவது நல்லது.

1314
மீனம்

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மீன ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி தொடங்க இருக்கிறது. உங்கள் ராசியிலேயே சனி பகவான் அமர்வதால் மனக்குழப்பங்கள் வரலாம். உடல் சோர்வு ஏற்படலாம். நீங்கள் எடுக்கும் முடிவுகள் தவறாக அமையலாம். இருப்பினும் சனி பகவான் உங்களுக்கு சில நன்மைகளையும் வழங்குவார். வாழ்வில் நிம்மதி பெருகும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். புது வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். கௌரவமான பதவிகள் கிடைக்கும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் வேலைச் சுமை இருந்தாலும் சமாளிப்பீர்கள். பண வரவும், செலவும் சமமாக இருக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமை சிவாலயத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது சனி பகவானின் தாக்கத்தை குறைக்க உதவும்.

1414
திருநள்ளாறு தலம் மற்றும் வழிபாடு

வாக்கிய பஞ்சாங்கத்தை பின்பற்றுபவர்கள் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவையே பிரதானமாக கருதுவர். இங்கு இருக்கும் நள தீர்த்தத்தில் நீராடினால் சனி தாக்கம் குறையும் என்பது நம்பிக்கை. கருப்பு எள்ளை துணியில் முடிந்து நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவது நல்லது. ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவது பொருளாதார முன்னேற்றத்தையும் ராஜயோகத்தையும் அளிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories