
பிறக்க இருக்கும் தை மாதம் ரிஷப ராசிக்காரர்களுக்கு யோகமான மற்றும் நேர்மறை மாற்றங்களை வழங்கக்கூடிய மாதமாக அமைய இருக்கிறது. உங்கள் வாழ்வில் இருந்த தேக்க நிலைகள் நீங்கி முன்னேற்றம் காணும் காலமாக அமையப் போகிறது. ராசிநாதன் சுக்கிரன் தனாதிபதி புதனுடன் இணைந்து புத சுக்ர யோகத்தை உருவாக்குகிறார்.
மேலும் செவ்வாய் பகவான் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். எனவே இந்த காலகட்டத்தில் எந்த செயலையும் தைரியத்துடன் செய்து முடிப்பீர்கள். வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோமே என்று கவலைப்படுபவர்களுக்கு வீடு வாங்கும் யோகமும், சொத்துக்களை சேர்க்கும் யோகமும் கைகூட இருக்கிறது.
தொடர்புடைய கட்டுரைகள்: https://tamil.asianetnews.com/gallery/astrology/thai-matha-rasi-palan-2026-thai-matha-palan-mesha-rasi-palangal-in-tamil-o9co16e
மிதுன ராசியில் இருக்கும் குரு பகவான் இந்த மாதம் முழுவதும் வக்ர நிலையில் பயணிக்க இருக்கிறார். சுக்கிரனும் குருவும் பகை கிரகமாவார். குரு வக்ரம் பெறுவது ரிஷப ராசியினருக்கு ஒரு வகையில் நன்மையை பயக்க இருக்கிறது. ‘கெட்டவன் கெட்டதில் கிட்டிடும் ராஜயோகம்’ என்ற பழமொழிக்கு ஏற்ப குரு பகவானால் திடீர் மாற்றங்கள் மற்றும் லாபங்கள் கிடைக்க இருக்கிறது. ராசியின் 8, 11 ஆகிய இடங்களின் அதிபதியான குரு பகவான் இதுவரை ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவார். இடமாற்றம் அல்லது வீடு மாற்றம் ஆகியவற்றை கொடுக்க இருக்கிறார்.
குருவின் பார்வை 6, 8, 10 ஆகிய இடங்களில் விழுவதால் உத்தியோகத்தில் எதிர்பாராத முன்னேற்றங்கள் கிடைக்க இருக்கிறது. சம்பள உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். உங்களின் இலக்குகளுக்கு குறிக்கீடாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் வந்து இணையக்கூடும். தொழிலில் தொல்லை கொடுத்து வந்தவர்கள், மறைமுக எதிரிகள் அனைவரும் விலகுவார்கள். தொழில் பங்குதாரர்கள் உங்கள் சொல் கேட்டு நடப்பர். தொழிலை விரிவு செய்யவும், புதிய தொழில் தொடங்குவதற்கும் தேவையான உதவிகள் கிடைக்கும்.
ரிஷப ராசியின் 2 மற்றும் 5 ஆகிய வீடுகளின் அதிபதியான புதன் பகவான் 29-01- 2026 க்கு பின்னர் தொழில் ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். எனவே தொழிலில் திருப்திகரமான முன்னேற்றம் காணப்படும். தொழிலில் லாபம் தரும் வகையில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். புதிய தொழிலாளர்கள் மூலம் தொழில் முன்னேற்றத்தை அடையும்.
வாடிக்கையாளர்கள் அதிகரிப்பால் பொருளாதார நிலை வேகமாக உயரும். அதிக முயற்சி எடுத்தும் நிறைவடையாமல் இருந்த காரியங்கள் தற்போது முடிவடையத் தொடங்கும். உங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் புதுவிதமான மாற்றங்களை கொடுக்கும் மாதமாக தை மாதம் விளங்கும்.
தை மாதம் பிறந்தது முதல் மகரத்தில் சஞ்சரித்து வரும் சுக்கிர பகவான் பிப்ரவரி 7ஆம் தேதி கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். உங்கள் ராசிநாதன் தொழில் ஸ்தானத்திற்கு செல்வது அற்புதமான நேரத்தை வழங்க இருக்கிறது. தொழிலில் வாடிக்கையாளர்களின் வரத்து அதிகரிக்கும். பழைய வாகனங்களை விற்றுவிட்டு புதிய வாகனம் வாங்குவதற்கு உகந்த நேரமாகும். வெளிநாடு செல்ல நினைப்பவர்களின் கனவு நனவாகும். வேலையிடத்தில் புதிய பொறுப்புகளும், பதவி வாய்ப்புகளும் தேடி வரும்.
வியாபாரம் மற்றும் தொழிலில் புதிய உத்திகளை கையாளுவீர்கள். தொழில் புதிய உச்சங்களைத் தொடும். தனியாரிடம் அடிமை போல வேலை செய்து வருபவர்கள் சுயமாக தொழிலை தொடங்குவீர்கள். மாணவ மாணவிகளுக்கும் இந்த காலகட்டத்தில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பிள்ளைகள் மூலம் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி தேடி வரும். உச்சத்தில் இருந்த குடும்ப பிரச்சினைகள் படிப்படியாக குறைந்து காணாமல் போகும்.
வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயாரை வழிபடுவது பொருளாதார மேன்மையைத் தரும். மகாலட்சுமி தாயாருக்கு வெள்ளை நிற மலர்கள் அல்லது தாமரையால் அர்ச்சனை செய்து சர்க்கரை பொங்கல் நைவேதியம் செய்து வழிபடுங்கள். சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவானுக்கு எள் தீபமேற்றி வழிபடுவது தடைகளை நீக்கும். ஆதரவற்றவர்கள் அல்லது மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)