
நம் அனைவருக்குமே ஒருவரிடம் கைகட்டி வேலை பார்ப்பதை விட சொந்தமாக தொழில் செய்து முன்னேற வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால் எல்லோருக்கும் தொழில் என்பது கைகொடுத்து விடாது. சிலர் இயல்பாகவே தொழிலில் சாதனை படைத்தவர்களாக இருப்பார்கள். வெற்றிகரமான தொழிலை நடத்துவதற்கு தலைமைப் பண்புகள், கடின உழைப்பு, புத்திசாலித்தனம், விடாமுயற்சி ஆகிய குணங்கள் தேவை. இத்தகைய குணங்களைக் கொண்டிருக்கும் ராசிகள் எந்த தொழிலைச் செய்தாலும் கொடிகட்டி பறப்பார்களாம் அந்த ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசியில் பிறந்தவர்கள் தைரியமானவர்கள், ஆற்றல் மிக்கவர்கள், தன்னம்பிக்கை கொண்டவர்கள். இவர்கள் தலைமைத்துவம் மிகுந்தவர்கள். மேஷ ராசியினர் ஆபத்துகளை கண்டு பயம் கொள்வதில்லை. சவால்களை சந்திக்கும் திறனும், போட்டி மனப்பான்மையும், தொலைநோக்கு பார்வையும் கொண்டிருப்பதால் விரைவாக முடிவெடுத்து செயல்பட்டு வெற்றிகளைக் காண்பார்கள். இவர்கள் பெரும்பாலும் ஐடி, தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட் அல்லது தொடக்க நிறுவனங்களில் சாதனை படைப்பார்கள்.
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் நிலைத்தன்மையுடன் விளங்குவார்கள். இவர்கள் விடாமுயற்சி, பொறுமை, நடைமுறை சிந்தனை கொண்டவர்கள். மெதுவாக செயல்பட்டாலும் உறுதியுடன் முன்னேறுவதால் நிலையான வெற்றியைப் பெறுகின்றனர். இவர்களின் பொறுமை மற்றும் திட்டமிடல் என்பது இவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக விளங்குகிறது. ரிஷப ராசிக்காரர்கள் ஹோட்டல், ஃபேஷன், ரியல் எஸ்டேட் மற்றும் உணவு ஆகிய துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். இவர்களின் தன்னம்பிக்கை காரணமாக அதிக லாபத்தை சம்பாதிக்கிறார்கள்.
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு ஆளுமைத் திறன் மற்றும் தன்னம்பிக்கை மிகவும் அதிகம். இவர்கள் தான் முன்னேறுவது மட்டுமல்லாமல் மற்றவர்களை ஊக்குவிக்கும் திறனும் கொண்டுள்ளனர். தொழில் முனைவோருக்கான அனைத்து அம்சங்களும் இவர்களிடம் உள்ளது. இவர்கள் ஒரு பெரிய குழுவை கூட எளிதாக வழிநடத்திச் செல்வார்கள். இயற்கையான தலைவர்களாக விளங்கும். அவர்கள் வசீகரமும், தொலைநோக்கு பார்வையும் கொண்டுள்ளனர். இது வணிகத்தில் அவர்களுக்கு பெரும் வெற்றியை கொண்டு வருகிறது. திரைப்படம், ஊடகம், மார்க்கெட்டிங், பிராண்டிங், பொழுதுபோக்கு துறைகளில் சிறந்து விளங்குவர்.
கன்னி ராசிக்காரர்கள் இயல்பிலேயே வணிக ரீதியான அறிவை கொண்டுள்ளனர். இவர்களை ஆளும் புதன் பகவான் வணிகத்திற்கான காரகராவார். எனவே இவர்களுக்கு வணிகம் என்பது எளிதான காரியமாகும். மேலும் இவர்கள் பகுப்பாய்வு செய்து திட்டமிடுவதிலும் வல்லவர்களாக உள்ளனர். புத்திசாலித்தனம், துல்லியம், சிறந்த ஒழுங்கமைக்கும் திறன் ஆகியவற்றின் காரணமாக இவர்கள் தொழிலில் கொடி கட்டி பறக்கின்றனர். ஆலோசனை மற்றும் கல்வி சார்ந்த துறைகளில் சிறந்து விளங்குகின்றனர்.
விருச்சிக ராசிக்காரர்கள் தீவிர சிந்தனையாளர்கள். ஒரு விஷயத்தை உன்னிப்பாக கவனித்து அதற்கு ஏற்ற வகையில் உத்திகளை வகுக்கும் திறன் கொண்டுள்ளனர். இவர்கள் புதிய வாய்ப்புகளை அடையாளம் கண்டு தொழிலை ஆழமாக ஆராய்ச்சி செய்து வெற்றி பெறக் கூடியவர்களாக உள்ளனர். மேலும் தங்கள் நகர்வுகளை சரியாக நிர்ணயிப்பார்கள். இது வணிகத்திற்கு முக்கிய பண்பாகும். விருச்சிக ராசிக்காரர்கள் ஆராய்ச்சி, மருத்துவம், பங்குச்சந்தை மற்றும் முதலீடுகளில் சிறந்து விளங்குகின்றனர்.
மகர ராசிக்காரர்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள். கடின உழைப்பாளிகள். அவர்களின் விடாமுயற்சியும் அர்ப்பணிப்பும் அவர்களை தொழிலில் வெற்றியாளர்களாக மாற்றுகிறது. மேலும் நீண்ட கால திட்டமிடலிலும் அவர்கள் சிறந்து விளங்குகின்றனர். வெற்றியை நோக்கிய சரியான பயணம், திட்டமிடல், அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனை ஆகியவற்றுடன் செயல்படுவதால் இவர்கள் வணிகத்தில் எளிதான வெற்றியை பெறுகின்றனர். மகர ராசிக்காரர்கள் நிதி மற்றும் கட்டுமான துறையில் வெற்றியை அடைகின்றனர்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)