
ஜோதிடத்தின்படி செவ்வாய் தோஷம் என்பது திருமண வாழ்க்கையை பாதிக்கக்கூடிய முக்கிய தோஷமாக பார்க்கப்படுகிறது. ஒருவரது பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் பகவான் குறிப்பிட்ட இடங்களில் அமர்ந்திருந்தால் செவ்வாய் தோஷம் ஏற்படுவதாக நம்பப்படுகிறது. செவ்வாய் கிரகம் தைரியம், வீரம், ஆற்றல், ஆக்ரோஷம், உடன் பிறந்தவர்கள், நிலம் மற்றும் சொத்துக்களைக் குறிக்கும் கிரகமாகும். பெண்களுக்கு இது கணவனை குறிக்கும் கிரகமாகவும் அறியப்படுகிறது.
ஒருவரது ஜாதகத்தில் லக்னம் அல்லது லக்னத்தில் இருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் அமர்ந்திருந்தால் அது செவ்வாய் தோஷம் இருப்பதாக கருதப்படுகிறது. ஏழாம் இடமானது களத்திர ஸ்தானமாகும். இது திருமண உறவுகள், வாழ்க்கைத் துணையை பற்றியது. செவ்வாய் பகவான் இந்த ஸ்தானத்தில் இருப்பது கடுமையான தோஷமாக கருதப்படுகிறது. எட்டாம் இடம் என்பது மாங்கல்ய ஸ்தானம், ஆயுள் தாம்பத்திய வாழ்க்கை ஆகியவற்றை குறிக்கிறது. 2 மற்றும் 4 ஆகிய இடங்கள் குடும்பம், உடல் நலம் போன்றவற்றில் ஏற்படும் பாதிப்புகளைக் குறிக்கிறது.
செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு திருமணத்தில் தாமதங்கள் ஏற்படும். திருமணம் ஆகி இருந்தாலும் கருத்து வேறுபாடுகள், சண்டைகள், பிரிவுகள் ஏற்படலாம். தீவிர ஆற்றல் மற்றும் ஆக்ரோஷத்தின் காரகராக செவ்வாய் பகவான் இருப்பதால் ஜாதகர்கள் அதிக கோபம், அதீத உணர்ச்சி, அதிக வேகம், ஆக்ரோஷத்துடன் விளங்கக்கூடும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், அதே செவ்வாய் தோஷம் உள்ளவர்களை திருமணம் செய்வதன் மூலம் தோஷத்தின் தாக்கம் குறையும் அல்லது தோஷ நிவர்த்தி ஆகும் என்று ஜோதிட ரீதியாக நம்பப்படுகிறது. இருப்பினும் மற்ற கிரகங்களின் நிலைகள் மற்றும் பார்வைகள் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடலாம்.
செவ்வாய் தோஷம் ஒருவருக்கு தீய பலன்களை மட்டுமே கொடுக்கும் என்பதுல் உண்மை கிடையாது. செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் ஆளுமை திறனில் சிறந்தவர்களாக விளங்குகின்றனர். செவ்வாய் தோஷம் இருப்பவர்கள், செவ்வாய் தோஷம் இல்லாதவர்களை திருமணம் செய்தால் அவர்கள் வாழ்க்கை மோசமாகி விடாது என்பதையும் நம்மால் காண முடிகிறது. அதேபோல் செவ்வாய் தோஷம் இருப்பவர்கள், தோஷம் இல்லாதவர்களை திருமணம் செய்தால் பிறக்கும் குழந்தைகள் குறைகளுடன் பிறக்கும் என்கிற மூடநம்பிக்கையும் பொய்யாகிப் போகிறது.
செவ்வாய் தோஷம் இருப்பவர்கள், அதே தோஷம் இருப்பவர்களை திருமணம் செய்து கொண்டாலும் அவர்கள் வாழ்க்கை அவ்வளவு சிறப்பானதாக அமைந்து விடுவதில்லை. செவ்வாய் தோஷம் குறித்த மக்களிடையே நிலவும் கருத்துக்கள் மூடநம்பிக்கைகளாகவே கருத்தில் கொள்ளப்பட வேண்டும். செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் வாழ்க்கை மோசமாக இருக்கும் என்பதற்கான எந்த சான்றும் இல்லை. ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பதாக சொன்னால் மனதில் இருக்கும் குழப்பங்களை விட்டுவிட்டு இறைவனை முழுமையாக நாட வேண்டும். இறைவன் அருள் இருந்தால் ஜாதகத்தை தாண்டி வாழ்க்கையில் எந்த நிலைக்கும் செல்லலாம்.
செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் சில பரிகாரங்களை செய்வதன் மூலம் தோஷத்தின் வீரியத்தை குறைக்கவோ அல்லது நிவர்த்தி செய்யவோ முடியும். செவ்வாய் கிரகத்தின் அதிபதி முருகப்பெருமான் என்பதால் செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு சிகப்பு நிற மலர்கள் சாற்றியும், கந்த சஷ்டி கவசம், கந்தபுராணம் போன்றவற்றை பாராயணம் செய்தும் வழிபடலாம். செவ்வாய்க்குரிய நவக்கிரக தலமான வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது தோஷ நிவர்த்திக்கு உதவும். நவகிரகங்களால் ஏற்படும் தடைகளை போக்கும் வல்லமை விநாயகப் பெருமானுக்கு உண்டு என்பதால் சதுர்த்தி நாட்களில் விநாயகருக்கு அபிஷேகம் செய்து வழிபடலாம்.
செவ்வாய் கிரகத்தின் தாக்கத்தை குறைக்க செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபடலாம். ஏழைகளுக்கு சிகப்பு நிற ஆடைகள் வழங்குவது, வறுமையில் வாடுபவர்களுக்கு உதவி செய்வது ஆகியவையும் தோஷ நிவர்த்திக்கு உதவும். வளர்பிறை செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டாலும் தோஷ நிவர்த்தி கிடைக்கும். அனுபவமிக்க ஜோதிடரை அணுகி தோஷ நிவர்த்திக்கான பரிகாரங்கள், சிறப்பு ஹோமங்கள், பூஜைகளை மேற்கொள்ளலாம். வில்வம், வன்னி போன்ற மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது அல்லது கோவில்களில் உள்ள மரங்களுக்கு நீர் ஊற்றுவது போன்றவை தோஷத்தின் தாக்கத்தை குறைக்கும்.
உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை துல்லியமாக அறிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி சரியான பரிகாரங்களை செய்வது தோஷங்களை குறைக்க உதவும். சரியான பரிகாரங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளுக்கு அனுபவம் வாய்ந்த ஜோதிடரை அணுகி அவரது ஆலோசனையைப் பெறுவது நல்லது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)