
ஜோதிட சாஸ்திரத்தில் 9 கிரகங்களும் அவ்வப்போது தங்களது ராசியை மாற்றுகின்றன. அந்த சமயத்தில் அவை பிற கிரகங்களுடன் இணைந்து யோகங்களை உருவாக்குகின்றன. அவ்வாறு உருவாகும் யோகங்கள் சில ராசிகளுக்கு நல்ல பலன்களை அளிக்கிறது. அந்த வகையில் மிதுன ராசியில் குரு, சுக்கிரன் மற்றும் சந்திரன் ஆகிய மூன்று கிரகங்கள் இணைந்து அரிய திரிகிரக ராஜ யோகத்தை உருவாக்குகிறது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராஜயோகம் நிகழ இருப்பதால் ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த யோகத்தின் தாக்கம் அது உருவாகும் ராசி மற்றும் கிரகங்களின் தன்மையை பொறுத்து அமைகிறது. குரு, சுக்கிரன் சந்திரன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை பல நன்மைகளை வழங்க உள்ளது.
ஜூலை 25 ஆம் தேதி சுக்கிர பகவான் மிதுன ராசிக்குள் நுழைந்தார். ஏற்கனவே மிதுன ராசியில் குரு பகவான் சஞ்சரித்து வரும் நிலையில், மிதுன ராசியில் குரு பகவானும், சுக்கிரனும் ஒன்றாக பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சந்திரனும் மிதுன ராசிக்குள் நுழைய இருக்கிறார். இதன் காரணமாக மிதுன ராசியில் சுக்கிரன், குரு மற்றும் சந்திரனின் சேர்க்கை நடைபெற உள்ளது. இதனால் சக்தி வாய்ந்த திரிகிரக ராஜயோகம் உருவாக உள்ளது. இந்த யோகம் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் உருவாகிறது. இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரிய உள்ளது. இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கொட்ட இருக்கிறது. நிதிநிலைமை, உடல்நலம், தொழிலில் வளர்ச்சி, வணிகத்தில் லாபம், முதலீடுகளில் லாபம் என்று சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் பெற உள்ளனர். அவர்கள் குறித்து இங்கு காணலாம்.
திரிகிரக ராஜ யோகம் மிதுன ராசியிலேயே உருவாவதால் இந்த ராசிக்காரர்களுக்கு இரட்டிப்பு நன்மைகள் பெற உள்ளனர். இவர்களின் ஆளுமைத் திறன் மேம்படும். சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். நிதி நிலைமையில் எதிர்பாராத முன்னேற்றங்கள் ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதுவரை ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தவர்கள் அதிலிருந்து விடுபடுவீர்கள். இந்த காலத்தில் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். துலாம் ராசியில் இந்த யோகம் ஒன்பதாவது வீடான பாக்கியஸ்தானத்தில் உருவாவதால் துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பெருகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றங்கள் ஏற்படும். பயணங்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழிலில் எதிர்பாராத வளர்ச்சி காணப்படும்.
திரிகிரக யோகம் கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை உருவாக்குகிறது. கும்ப ராசியின் ஐந்தாவது வீட்டில் இந்த யோகம் உருவாக உள்ளது. இது காதல், குழந்தைகள், கல்வி ஆகியவற்றை குறிக்கும் வீடாகும். இந்த ராசிக்காரர்களுக்கு காதல் உறவுகளில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சுப காரியங்கள் நடைபெறும். கல்வி மற்றும் அறிவு சார்ந்த துறைகளில் நல்ல வளர்ச்சி ஏற்படும். தனுசு ராசிக்கு ஏழாவது வீட்டில் இந்த யோகம் உருவாவதால் திருமண வாழ்வில் நல்லுறவும், மகிழ்ச்சியும் பெருகும். தொழிலில் பங்குதாரர்கள் மூலம் லாபம் அதிகரிக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். கன்னி ராசியின் பத்தாவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாக உள்ளதால் வேலை மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். தொழில் செய்து வருபவர்கள் இரட்டிப்பு லாபத்தைப் பெறலாம்.
இந்த ராசிகளுக்கு மட்டுமல்லாது பொதுவான சில பலன்களையும் திரிகிரக யோகம் உருவாக்க உள்ளது. குரு ஞானத்தையும், சுக்கிரன் செல்வத்தையும், சந்திரன் மனதையும் குறிப்பவர்கள். இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையானது ஒருவரின் அறிவுத்திறனையும், ஞானத்தையும் அதிகரிக்கும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான ஆர்வம் உண்டாகும். சுக்கிரன் செல்வத்தின் காரகன் என்பதால் இந்த யோகம் நிதி நிலையில் முன்னேற்றத்தையும், எதிர்பாராத பண வரவுகளையும் தரும். முதலீடுகள், வணிகம் மற்றும் கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மிகவும் சாதகமான நேரமாக இருக்கும். சந்திரன் மனதின் காரகன். எனவே இந்த யோகம் மன அமைதி, மகிழ்ச்சி, குடும்பத்தில் நல்லுறவுகளை உருவாக்கும். திருமணம், காதல் மற்றும் சமூக உறவுகளில் முன்னேற்றம் ஏற்படும்.
இந்த ராஜயோகம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி குரு, சுக்கிரன், சந்திரன் ஆகிய கிரகங்கள் மிகவும் நெருக்கமாக இருக்கும் பொழுது அதன் உச்சகட்ட பலன்களைத் தரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது ஒரு அரிய வானியல் நிகழ்வு என்பதால் இதை வெறும் ஜோதிட ரீதியாக மட்டுமின்றி இயற்கையின் அற்புதமாகவும் பார்க்கலாம். மேற்குறிப்பிட்ட ஜோதிடப் பலன்கள் பொதுவானவையே. ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதகம் மற்றும் கிரகங்களின் நிலை ஆகியவற்றை பொறுத்து பலன்கள் மாறுபடலாம். எனவே சரியான பலன்களை அறிந்து கொள்ள அனுபவம் மிக்க ஜோதிடரை அணுக வேண்டியது அவசியம்.