ஆங்கிலப்புத்தாண்டு ராசி பலன் 2025: புது வேலை.. புது பிசினஸ் .. 2025ல் ஜெயிக்கப்போவது யாரு?

First Published | Jul 19, 2024, 7:23 PM IST

இன்னும் சில மாதங்களில் ஆங்கிலப்புத்தாண்டு பிறக்கப்போகிறது. 2025ஆம் ஆண்டில் ஆண்டு கோள்களான சனி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். ராகு கும்ப ராசிக்கும், கேது சிம்ம ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடையப்போகின்றனர். குரு மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். இந்த கிரகப்பெயர்ச்சிகளால் இன்னும் 6 மாதங்களில் திட்டமிட்டால் 2025ஆம் ஆண்டில் யாரெல்லாம் புது தொழில் தொடங்கலாம், புது வேலைக்கு முயற்சி செய்யலாம் என்று பார்க்கலாம்.

ராகு கேது

ராகு ஆசைக்கு  காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அந்த கிரகங்களின் பலனை செய்வார்கள்.  2024ஆம் ஆண்டில் ராகு மீன ராசியிலும், கேது கன்னி ராசியிலும் பயணம் செய்கின்றனர். கன்னி ராசியில் தங்கியிருக்கும் கேது புதன் போல செயல்படுவார். மீன ராசியில் தங்கியிருக்கும் ராகு குரு போல செயல்படுவார்கள்.
 

2025ல் லக் யாருக்கு?

சர்ப்ப கிரகங்களான ராகு கேது மனிதர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.  கேது 2025ஆம் ஆண்டில் சிம்ம ராசிக்கு மாறப்போகிறார். சிம்மத்தில் கேதுவும் கும்பத்தில் ராகுவும் 2025ஆம் ஆண்டு மே மாதம் இடப்பெயர்ச்சி அடைய உள்ளனர். அப்போது ராகு சனி பகவானைப்போலவும் கேது சூரிய பகவானைப் போலவும் செயல்படுவார்கள். எனவே இந்த கிரக ராசி மாற்றம் சிலரது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை தரப்போகிறது.

Tap to resize

மேஷம்

மேஷம் ராசிக்கு ஆறாம் இடத்தில் பயணம் செய்யும் கேதுவினால் நன்மைகள் அதிகம் நடைபெறும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். கேது பகவான் எதிரிகளை துவம்சம் செய்து விடுவார். கடன் பிரச்னைகள் குறையும். பணத்தை யோசித்து முதலீடு செய்யுங்கள். பத்திரமான இடத்தில் பணத்தை சேமிப்பது நன்மை தரும்.  பொறுமையுடன் இருந்தால் நன்மைகள் அதிகம் நடைபெறும். 2025ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரப்போகும் கேதுவினால் பிள்ளைகள் வழியில் நன்மைகள் நடைபெறும். அதே நேரத்தில் லாப ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சி அடையப்போகும் ராகு அற்புதமான பலன்களையும் ராஜயோகத்தையும் தரப்போகிறார். சனி பகவான் ஏழரை சனியாக 2025ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 12ஆம் வீட்டில் அமர்ந்தாலும் கோடி கோடியாக கொடுக்கப்போகிறார். 2ஆம் வீட்டில் பயணம் செய்யும் குரு பகவானும் 3ஆம் வீட்டிற்கு மாறப்போவதால் புது முயற்சிகள் எல்லாம் வெற்றியடையும், கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலையும் கிடைக்கும்.
 

மிதுனம்

நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்யும் கேது பகவானால் உங்களுடைய வாழ்க்கை தரம் உயர்வடையும். வேலையில் முன்னேற்றமும், ஊதிய உயர்வும் கிடைக்கும். 2025ஆம் ஆண்டு முதல் நீங்கள் எடுக்க போகும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். காரணம் 3ஆம் வீட்டிற்கு வரப்போகும் கேது சொத்து, சுகத்தை கொடுப்பார் கேது. விரைய குருவினால் உங்களுக்கு தொழில் வியாபாரத்தில் பல மடங்கு பணம் வரும். அடுத்த ஆண்டு ஜென்ம குரு வரப்போவதால் ஆடம்பரமாக செலவு செய்யாதீர்கள்.  வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலில் விளக்கேற்றி வழிபடுங்கள்.

சிம்மம்

சிம்ம  ராசிக்கு கேது பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் பணம் விசயத்தில் வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள். 2025ஆம் ஆண்டின் பிற்பகுதியில் உங்கள் ராசியில் வந்து அமரும் கேது சில உடல் நல பாதிப்பினை ஏற்படுத்துவார் கவனம் தேவை. வெளியிடங்களிலும் வீட்டிலும் வீண் வாக்குவாதத்தைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. குருபகவான் லாப ஸ்தானத்திற்கு வந்து அமரப்போவது சிறப்பு. பணம் பல வழிகளில் வரும். அஷ்டமத்து சனி 2025ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தொடங்கப்போவதால் அகலக்கால் வைக்க வேண்டாம். கூட்டுத் தொழில் தொடங்க வேண்டாம். பண விசயத்தில் கூட்டாளிகளை நம்ப வேண்டாம்.

துலாம்

ராகு கேதுவின் பயணத்தினால் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 2025ஆம் ஆண்டில் கேது லாப ஸ்தானத்திற்கு மாறப்போகிறார். நல்ல வேலையும் உத்யோகத்தில் சம்பளம், பதவி உயர்வும் கூடி வரும். குரு பகவான் பாக்ய ஸ்தானமான 9ஆம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடப்போவதால்  ராஜயோகம் தேடி வரும். சனி பகவானும் 6ஆம் வீட்டில் சாதகமான நிலையில் பயணம் செய்யப்போவதால் தொழில், வியாபாரம் தொடங்க வேண்டும் என்ற உங்களின்  நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

தனுசு

உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் கேது பகவான் சஞ்சரிப்பதால் வேலை தொழிலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சிலர் புதிய வீடு மாறுவீர்கள். உங்களின் பொருளாதார நிலை சீரடையும். 2025ஆம் ஆண்டில் 3ஆம் வீட்டிற்கு வரப்போகும் ராகுவினால் சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும்.  வேலை செய்யும் இடத்தில் இழந்த செல்வாக்கை திரும்ப பெறுவீர்கள். தொழில் நஷ்டங்களை சரி கட்டும் வகையில் 2025ஆம் ஆண்டில் குருவின் பயணமும் பார்வையும் உங்களுக்கு சாதகமாக உள்ளதால் கோடி கோடியாக பண வருமானம் தேடி வரும்.

கும்பம்

கேது பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் பயணம் செய்வதால். எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். பண விசயத்தில் ஜாமீன் கையெழுத்து போட்டு மாட்டிக்கொள்ளாதீர்கள். 2025ஆம் ஆண்டில் ராகு உங்களுடைய ஜென்ம ராசிக்கு வரப்போகிறார். அதே நேரத்தில் மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சியாகும் குரு பகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது விழப்போகிறது. கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். புதிய தொழில் தொடங்கலாம். வியாபாரம், தொழிலுக்காக யாருக்காவது பணத்தை கடனாக கொடுக்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்வது நல்லது குருவின் அருள் இருப்பதால் ஏழரை சனி நடந்தாலும் எதையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள்.

Latest Videos

click me!