
அங்காரக யோகம் என்பது ஜோதிடத்தில் அசுப பலன்களை அளிக்கக்கூடிய ஒரு கிரகச் சேர்க்கையாக கருதப்படுகிறது. இது செவ்வாய் (அங்காரகன்) கிரகமும் ராகு அல்லது கேது கிரகமும் ஒரே ராசியில் இணையும் பொழுது அல்லது குறிப்பிட்ட அம்சத்தில் அமரும்பொழுது இந்த யோகம் உருவாகிறது.
செவ்வாய் தைரியம், கோபம், வீரம் ஆகியவற்றின் காரகராவார். ராகு கேது மாயை, குழப்பம், அதீத ஆசைகள், மாற்றங்கள் ஆகியவற்றிற்கு காரகர்களாகவும் விளங்குகின்றனர். இந்த இரண்டு முரண்பட்ட கிரகங்கள் இணையும் பொழுது செவ்வாயின் நேர்மறை ஆற்றல்கள் திசை மாறி எதிர்மறை பலன்களை அளிக்கும்.
அந்த வகையில் அக்டோபர் 27ஆம் தேதி முதல் விருச்சிக ராசிக்குள் நுழைந்துள்ள செவ்வாய் பகவான் மகர ராசியின் 11 வது வீட்டில் அமர்ந்திருக்கிறார். அவர் கும்ப ராசியில் பயணித்து வரும் ராகுவுடன் இணைந்து அங்காரக யோகத்தை உருவாக்குகிறார். இந்த யோகத்தின் காரணமாக சில ராசிக்காரர்கள் அசுப பலன்களை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மகர ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. காரணம் இல்லாமல் சண்டை, தேவையற்ற வாக்குவாதங்கள், உறவுகளில் விரிசல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் மனம் ஒருவித பதற்றத்துடன் காணப்படும். இதன் காரணமாக அவசர முடிவுகளை எடுக்க நேரிடலாம்.
யோசிக்காமல் முடிவெடுப்பது பல பின் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே எந்த ஒரு செயலையும் டிசம்பர் 7ஆம் தேதி வரை நிதானமாக செய்ய வேண்டும். பேச்சில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் பேச்சு மூலம் பல பிரச்சனைகள் வந்து சேரும். கர்ப்பிணி பெண்களும், குழந்தைகளும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
கும்ப ராசிக்காரர்களுக்கு அங்காரக யோகம் பல பிரச்சனைகளை கொண்டு வரவுள்ளது. செவ்வாயின் நேர்மறை ஆற்றலான தைரியம், செயல்பாடு ஆகியவை திசை மாறி அதிக கோபம், ஆக்ரோஷம் ஆகியவற்றை வழங்கும். பூமி சம்பந்தமான வழக்குகளில் சிக்குதல் அல்லது சொத்துக்களை விற்கும் சூழல் ஏற்படலாம்.
குடும்ப வாழ்க்கையில் நிம்மதியின்மை அல்லது வாழ்க்கைத் துணையுடன் தேவையில்லாத சண்டை, கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். ரத்தம், தோல் சம்பந்தமான நோய்கள், உடல் உஷ்ணம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். கல்வி பயிலும் மாணவர்களுக்கு தடைகள், தொழிலில் கூட்டு முயற்சிகளில் பிரச்சனைகள், அதிக செலவுகள், வீண் விரயங்கள் ஆகியவை ஏற்படக்கூடும்.
கடக ராசிக்காரர்களுக்கு டிசம்பர் 7 வரையிலான காலகட்டம் சாதகமானதாக இல்லை. அங்காரக யோகத்தால் சில பாதிப்புகளை சந்திக்க நேரிடலாம். வீண் சண்டை, சச்சரவுகள் ஏற்படலாம். பணியிடத்தில் தேவையற்ற வாக்குவாதங்களால் மன அழுத்தம் அதிகரிக்கலாம். வாகனங்களை இயக்கும் பொழுதும் தீ அல்லது ஆயுதங்களை பயன்படுத்தும் பொழுதும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
எதிர்பாராத காயங்கள் அல்லது அறுவை சிகிச்சைக்கான வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத்திலும் தேவையற்ற பிரச்சனைகள், கருத்து வேறுபாடுகள் எழக்கூடும். குறிப்பாக உடன் பிறந்தவர்களுடன் மோதல்கள் எழலாம். வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் எழக்கூடும்.
மேற்குறிப்பிடப்பட்டவை பொதுவான பலன்களே. சிலருக்கு அங்காரக யோகம் நல்ல பலன்களையும் அளிக்கக்கூடும். உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றம் ஏற்படலாம்.
அங்கார யோகத்தின் தாக்கத்தை குறைக்க செவ்வாய்க்கு உரிய தெய்வமான முருகப்பெருமானை வழிபடுவது, செவ்வாய்க்கிழமையும் சதுர்த்தி திதியும் சேரும் நாளில் விநாயகரை வழிபடுவது, நவக்கிரக சன்னதியில் செவ்வாய் பகவானுக்கு சிவப்பு நிற மலர்கள் சாற்றி விளக்கேற்றி வழிபடுவது, செவ்வாய்க்கிழமைகளில் ஆடுகளுக்கு உணவளிப்பது, ஏழைகளுக்கு தானம் செய்வது, கோபத்தை கட்டுப்படுத்துவது மற்றும் தியானம் செய்வது ஆகியவற்றின் மூலம் அங்கார யோகத்தின் அசுப பலன்களைக் குறைக்கலாம்.
இந்த யோகம் முடிவடைந்த பிறகு, பல ராசிகளுக்கு நல்ல முன்னேற்றப் பாதையும், அதிர்ஷ்டமும் உண்டாகும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)