வாஸ்து பரிகாரம்
ஒவ்வொரு வீட்டிலும் அலுவலகத்திலும் வாஸ்து முக்கிய பங்கு வகிக்கிறது. வாஸ்து மூலம் வாழ்வில் அமைதியையும் செழிப்பையும் கொண்டுவரும் நேர்மறை ஆற்றலைத் தக்கவைக்கலாம். வீட்டில் துர் சம்பவங்கள் அடிக்கடி நடத்தால் அது வாஸ்து தோஷத்தின் விளைவாக இருக்கலாம். அதற்கு பல்வேறு வாஸ்து பரிகாரங்களைச் செய்யலாம்.
வாஸ்து தோஷம்
வடகிழக்கு மூலையில் குளியலறைகள், தவறான நுழைவுவாயில், வடகிழக்கு மூலையில் பிரதான படுக்கையறை அறை இருப்பது வாஸ்து தோஷமாகக் கருதப்படுகிறது. இதற்குப் பரிகாரம் என்னென்ன என்று இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
கடல் உப்பு
சிறிதளவு கடல் உப்பை பல்வேறு இடங்களில் வைக்கலாம். அவை எதிர்மறை ஆற்றலை விரைவாக உறிஞ்சிவிடும் என்று கருதப்படுகிறது. தரையைச் சுத்தம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் தண்ணீருடன் கடல் உப்பையும் கலக்கலாம்.
கண்ணாடிகள்
வாஸ்து தோஷத்துக்குப் பரிகாரமாக பிரதான நுழைவாயிலுக்கு எதிர்த்திசையில் கண்ணாடிகளை வைக்கலாம். கண்ணாடிகளை வைக்கும்போது அதில் படுக்கை தெரியாத வகையில் வைக்க வேண்டும் என்பது முக்கியம்.
கற்பூரம்
கற்பூரத்தையும் வீட்டில் பல இடங்களில் வைக்கப்படலாம். வைக்கும் கற்பூரத்தை அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.
பிரமிடு
வீட்டில் இருந்து வாஸ்து தோஷத்தை வெற்றிகரமாக அகற்ற, கண்ணாடி, உலோகம், அட்டை அல்லது கல்லால் செய்யப்பட்ட மினி பிரமிடுகளை வாங்கி வைக்கலாம். எதிர்மறை ஆற்றல்களை எதிர்கொள்ள பிரமிடுகளை நுழைவாயிலில் வைக்கலாம். மினி பிரமிடுகளுக்கு மாற்றாக கிரிஸ்டல் பந்துகளையும் வைக்கலாம்.
வண்ணங்கள்
நீலம், இளஞ்சிவப்பு மற்றும் பச்சை ஆகியவை படுக்கையறைக்கும் ஹாலுக்கும் பொருத்தமான நிறங்கள். ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்கள் குழந்தைகள் அதிகமாகப் புழங்கும் இடங்களில் இருக்கவேண்டும்.
அலுவலகத்தில் வாஸ்து தோஷம் நீங்க
ஆபீஸில் வாஸ்து தோஷம் இருந்தால் நுழைவாயிலில் இரண்டு பிரமிடுகளை வைக்கலாம். பிரதான கதவு மற்றும் தூணுக்கு இடையே ஒரு துளசிச் செடியை வைக்கலாம்.
சூரியன் ஓவியம்
பணிபுரியும் ஆபீசில் உள்ள எதிர்மறை சக்திகளை விரட்ட அலுவலகத்தின் கிழக்கு திசையில் சூரியனின் ஓவியத்தை வைக்கலாம்.
ஸ்வஸ்திக் தகடு
அலுவலக கேன்டீன் தென்கிழக்குப் பகுதியில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பரிகாரமாக அடுப்புக்குப் பின்னால் செம்பு ஸ்வஸ்திக் தகட்டை வைக்கலாம்.
ஸ்படிகக் கல்
தென்மேற்கு மூலையில் ஒரு ஸ்படிகக் கல்லையும் வைக்கலாம். ஆனால் அந்தப் பகுதியில் தண்ணீர் படாமல் இருக்க வேண்டும்.