Chanakya Niti: இந்த 5 குணங்களைக் கொண்ட பெண்களே வீட்டின் உண்மையான மகாலட்சுமிகள்.! சாணக்கியரின் அறிவுரை.!

Published : Dec 01, 2025, 12:44 PM IST

Chanakya wisdom for family: ஐந்து குணங்களைக் கொண்ட பெண்கள் வீட்டிற்கு மகாலட்சுமியாக விளங்குவார்கள் என்று சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தல் குறிப்பிட்டுள்ளார். அந்த ஐந்து குணங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
பெண்கள் பெற்றிருக்க வேண்டிய 5 குணங்கள்

இந்தியாவில் தத்துவ அறிஞராகவும், அரசியல் ஞானியாகவும் விளங்கியவர் சாணக்கியர். இவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்வியல், அரசியல், தத்துவம் ஆகியவற்றை குறித்து தனது ‘நீதி சாஸ்திரம்’ என்னும் நூலில் அறிவுரைகளை வழங்கியிருக்கிறார். 

அதில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியுடனும், அமைதியுடனும் இருக்க வேண்டுமெனில் ஒரு பெண்ணின் பங்கு இன்றி அமையாதது என்று சாணக்கியர் வலியுறுத்துகிறார். சில சிறப்பான குணங்களைக் கொண்ட பெண்கள் வீட்டின் உண்மையான மகாலட்சுமி என்று அவர் குறிப்பிடுகிறார். அந்த குணங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பொறுமை மற்றும் சகிப்புத் தன்மை கொண்ட பெண்கள்

சாணக்கியரின் கூற்றுப்படி அமைதியான இயல்புடைய பெண்கள் லட்சுமியின் வடிவம் ஆவார்கள். அவர்கள் எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும் கோபப்படாமல் சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்து செயல்படும் திறன் கொண்டிருப்பார்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவர்களுக்கு இடம் கொடுக்காமல் அமைதியை நிலை நாட்டுவார்கள். சகிப்புத்தன்மையுடன் விளங்கும் இவர்கள், கடினமான காலங்களிலும் கணவருக்கு பக்கபலமாக இருந்து ஊக்கமும், ஆதரவும் அளித்து குடும்பத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வார்கள்.

கல்வி அறிவு மிக்க பெண்கள்

கல்வி அறிவும், நல்ல ஒழுக்கமும், பண்பாடும் கொண்ட பெண்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு அரணாக திகழ்வார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். இவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் நம்பிக்கையை கைவிடாமல் இருப்பார்கள். சரியான மற்றும் தவறானவற்றை பிரித்து அறியும் அறிவுடனும், பெரிய முடிவுகளை அச்சமின்றி எடுக்கும் விவேகத்துடன் திகழ்வார்கள். தனது கல்வி அறிவால் தெளிவான முடிவுகளை எடுக்கும் இவர்களது செயல்பாடு குடும்பத்தின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்.

இனிமையாக பேசும் இயல்பு

மென்மையாகவும், இனிமையாகவும் பேசும் பெண்கள் குடும்பத்தை வழிநடத்த தகுதியானவர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். இவர்கள் தங்களது இனிய வார்த்தைகள் மூலம் அனைவரின் மனதையும் வென்று அன்பையும், பாசத்தையும் நிலை நிறுத்துவார்கள். பிறந்த வீடாக இருந்தாலும், புகுந்த வீடாக இருந்தாலும் இரு வீட்டின் கவுரவத்தையும் மதிப்பையும் தங்களது பேச்சால் உயர்த்துவார்கள். இவர்களது மென்மையான பேச்சு குடும்ப உறவுகளை இணைக்கும் பாலமாக செயல்படுகிறது என்று சாணக்கியர் கூறுகிறார்.

பணத்தை சேமிக்கும் திறன்

அனாவசிய செலவுகளை தவிர்த்து பணத்தை சேமிக்கும் பெண்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று சாணக்கியர் கூறுகிறார். குடும்பத்தின் நிதி நிலைமையை புரிந்து கொண்டு தங்கள் ஆசைகளையும், தேவைகளையும் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டவர்கள் குடும்பத்தை நிதி நெருக்கடியில் இருந்து காப்பாற்றுவார்கள். பணத்தை திறம்பட நிர்வகிப்பதன் மூலம் குடும்பத்தின் பொருளாதார நிலைத்தன்மைக்கும், எதிர்கால தேவைகளுக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கிறார்கள்.

அனைவரையும் மதிக்கும் பண்பு

அனைவரையும் மதிக்கும் பண்பானது குடும்பத்தில் உள்ள பெண்ணுக்கு அத்தியாவசியமானது என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார். குறிப்பாக வீட்டில் உள்ள பெரியவர்கள் மற்றும் விருந்தினர்களை மதித்து உபசரிக்கும் பண்பு ஒரு பெண்ணுக்கு மிக அவசியமானது என்றும், பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பதன் மூலமும், விருந்தோம்பல் செய்வதன் மூலமும் இவர்கள் குடும்பத்திற்கு மரியாதையும் பெயரையும் பெற்று தருகிறார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். அன்பு மட்டுமே உறவுகளை இணைக்கும் என்று இவர்கள் உணர்ந்து செயல்படுவதால் குடும்ப உறவுகள் இறுக்கமாவதாக சாணக்கியர் கூறுகிறார்.

சாணக்கியரின் கூற்றுப்படி இந்த ஐந்து நற்குணங்களை கொண்ட ஒரு பெண் மனைவியாகவோ, தாயாகவோ மட்டும் இருப்பதில்லை. அவர் வீட்டின் செல்வ செழிப்பிற்கும், அமைதிக்கும் ஆதாரமான உண்மையான மகாலட்சுமியாக திகழ்கிறார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். இத்தகைய குணங்கள் கொண்ட பெண்கள் இல்லத்தில் இருந்தால் எப்போதும் மகிழ்ச்சியும் அமைதியும் அதிர்ஷ்டமும் நிறைந்திருக்கும் என்பது சாணக்கியரின் நம்பிக்கை.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories