
Dhanusu Rasi New Year Palan 2025 in Tamil: தனுசு ராசி பலன் 2025 – அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று மகிழ்ச்சியோடு வாழ எம்பெருமான் சிவனை வேண்டுகிறேன். ஜோதிடத்தின் படி 9 கிரகங்களின் பெயர்ச்சிகள் காரணமாக பலன்களை அனுபவிக்கிறோம். 2025 ஆம் ஆண்டு சனி, ராகு, கேது மற்றும் குரு பெயர்ச்சி நிகழ இருக்கிறது. இந்த கிரகங்களின் பெயர்ச்சி அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் பலன்கள் கிடைக்க போகிறது.
அதன் படி 2025 ஆம் ஆண்டு தனுசு ராசிக்கு என்ன மாதிரியான பலன்களை கொடுக்கப் போகிறது என்பது குறித்து விரிவாகவும் தெளிவாகவும் பார்ப்போம். ஏன், தனுசு ராசி என்று கேட்டால் கடந்த ஏழரை ஆண்டுகளாக அவர்கள் அனுபவிக்காத கஷ்டங்களே கிடையாது. உடலில் உயிர் மட்டுமே மிஞ்சியிருக்கும். கடந்த ஆண்டு சனி பெயர்ச்சிக்கு பிறகு ஓரளவு கஷ்டத்திலிருந்து விடுபட்டார்கள். ஆதலால், அவர்களுக்கு முதலில் பலன்கள் பார்க்கலாம்.
தனுசு ராசி பலன் 2025 ஆம் ஆண்டு உடல்நிலை, கல்வி, தொழில், வேலை வாய்ப்பு, பொருளாதாரம், காதல், திருமண வாழ்கை, வாகனம், வீடு, நிலம் ஆகியவற்றிற்கு எப்படி பலன் அமையப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
இதையும் படித்து பாருங்கள்: 12 ராசிகளுக்கான 2025 புத்தாண்டு பலன் - ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஒன் லைன் பலன் - யாருக்கு நல்லது நடக்கும்?
வேலை, தொழில்:
இந்த 2025 ஆம் ஆண்டு வேலை மற்றும் தொழில் வாழ்க்கையில் கலவையான பலன்கள் கிடைக்கும். மே மாதம் வரையில் 10ஆம் வீட்டில் ராகு மற்றும் கேதுவின் தாக்கம் இருக்கும். மார்ச் மாதம் முதல் சனி 4ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி அடைவதால் தாக்கம் இருக்கும். இதனால், வேலை மற்றும் தொழிலில் பாதிப்பு ஏற்படலாம். அதன் பிறகு குரு 7ஆவது வீட்டிற்கு பெயர்ச்சி ஆவதால் சாதகமான பலன்கள் உண்டாகும். தொழில் முன்னேற்றம் உண்டாகும்.
வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடங்களில் வேலையை இன்னும் சிறப்பாக செய்ய முடியும். பதவி உயர்வு கிடைக்கும். எனினும் வேலையில் சில சிரமங்கள் ஏற்படக் கூடும். வேலை மாற்றமும் ஏற்படலாம்.
கல்வி:
இந்த ஆண்டு மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நன்றாக படிப்பார்கள். போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு நல்ல பலனைத் தரும். ஆண்டின் பிற்பகுதியில் சனி மற்றும் ராகு பெயர்ச்சியின் காரணமாக படிப்பில் கவனம் செலுத்த வேண்டும், தொடர்ந்து முயற்சி செய்தால் மட்டுமே தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.
ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியத்தில் கலவையான பலன்களைத் தரக்கூடும். சனி பெயர்ச்சியின் காரணமாக ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படக் கூடும். நெஞ்சு, இதயம், நுரையீரல் தொந்தரவு இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். பெரியவர்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். எனினும் ராகு பெயர்ச்சி ஆவதால் பிரச்சனைகள் குறையும். சனியால் பாதிப்புகள் ஏற்பட்டாலும் குரு பகவானின் அருள் கிடைக்கப் பெறுவீரர்கள். ஆதலால், தாக்கம் குறையும். பெரியளவில் உடல் நல பாதிப்பு இந்த வருடம் உங்களுக்கு இல்லை.
பொருளாதாரம்:
2025 ஆம் ஆண்டை பொறுத்த வரையில் பொருளாதாரம் ஓரளவு சீராக இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் 6ஆம் வீட்டில் இருப்பதால் நிதி நிலை பெரிதாக இருக்காது. ஆனால், 9ஆவது வீட்டிலிருந்து பண வீட்டை பார்ப்பதால், ஓரளவு சாதகமாக பலன் கிடைக்கப் பெறுவீர்கள். இந்த 2025 ஆம் ஆண்டு நிதி நிலையைப் பொறுத்த வரையில் சனி, குரு பெயர்ச்சி காரணமாக கலவையான பலன்கள் தான் கிடைக்கப் பெறும். முதல் பாதியில் சேமித்து வைத்தால் பின் பாதியில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
காதல் வாழ்க்கை
2025 ஆம் ஆண்டைப் பொறுத்த வரையில் முன் பாதியில் ஓரளவு சாதகமான பலனையும், பின் பாதியில் நல்ல பலன்களையும் பெறுவீர்கள். உங்களது துணையும் புத்திச்சாலித்தனமாக நடந்து கொள்வீர்கள். சுக்கிர பகவான் ஆண்டு முதல் சாதகமான நிலையில் இருப்பதால், காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
12 ராசிகளுக்கான ஐப்பசி மாத ராசி பலன் 2024 – இந்த ராசிக்கு இனி கஷ்டமே இல்லயா? அய் ஜாலிதான்!
திருமண வாழ்க்கை:
இந்த ஆண்டு முன் பகுதியை விட பின் பகுதி தான் உங்களுக்கு நல்ல பலனை கொடுக்க போகிறது. மேலும், திருமணத்திற்கான கதவு திறக்கப்படும். மே மாதத்திற்கு பிறகு நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் பற்றிய பேச்சுவார்த்தைகள் நடக்கும்.
நிலம், வீடு, வாகனம்:
நிலம், வீடு வாங்க தடை தாமதம் ஏற்படும். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் நிலம் வாங்கி விற்கும் போது கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வம்பு, வழக்குகளில் சிக்கும் நிலை உருவாகும். முதல் பாதியை விட இரண்டாம் பாதிதான் உங்களுக்கு எல்லா விஷயத்திலும் நல்ல பலன் உண்டாகும். வண்டி, வாகனம் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
தனுசு ராசி 2025 ஆம் ஆண்டுக்கான பரிகாரம்:
கழுத்தில் வெள்ளி நகைகள் அணிந்து கொள்ளலாம். இடுப்பு பகுதியில் வெள்ளியில் அரைஞாண் கயிறு அணிந்து கொள்ளலாம்.
தினந்தோறும் பசு மாட்டிற்கு பழங்கள், சாதம் கொடுக்கலாம். தினந்தோறும் கொடுக்க முடியாதவர்கள் வியாழக்கிழமை தோறும் கொடுக்கலாம்.
வியாழன் தோறும் மஞ்சள் நிற உடை அணிந்து தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து மஞ்சள் நிற பழங்கள் அல்லது இனிப்புகளை கொடுக்கலாம்.
சனிக்கிழமையில் மாற்றுத்திறனாளிகள் அல்லது தூய்மைப் பணியாளர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம். குடை, காலணி, ஆடை ஆகியவற்றை தானமாக கொடுக்கலாம்.
வசதி வாய்ப்பு இருந்தால் மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறையோ சிவன் கோயிலில் 100 பேருக்கு அன்னதானம் கொடுக்கலாம்.
ஆன்மீகம் மீது நாட்டம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே மாதத்திற்கு ஒரு முறை குல தெய்வ கோயிலுக்கு சென்று வழிபட்டு வருவது நல்ல பலன் அளிக்கும்.
ஒவ்வொரு திங்கள்கிழமை, பிரதோஷ நாட்களில் சிவன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்யலாம்.
2025 ஆம் ஆண்டு தனுசு ராசியினருக்கு நிதி, கல்வி, வண்டி, வீடு, நிலம், காதல், திருமணம் ஆகியவற்றில் கலவையான பலன்களை கொடுக்கும்.